அந்த மக்கள் ஒரு பெருங்கனவில் இருந்தார்கள். இருள் படிந்த தங்கள் வாழ்வில் விடியில் வர போகிறது வெளிச்சம் வர போகிறது என நம்பினார்கள். அந்த நம்பிக்கை பொய்த்தது மட்டுமல்ல, அவர்கள் வாழ்க்கையே சூனியமாக மாறியது.

அவர்கள் போபால் மக்கள். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிபிசி குழு போபால் சென்று அந்த மக்களுடன் தங்கி ‘போபாலில் ஓர் இரவு’ என ஆவணப்படம் எடுத்தது.

அந்தப் படம் இரு விஷயங்களை அழுத்தமாக பதிவு செய்தது.

ஒன்று அந்த ஊர் மக்கள் வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள். வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலிருந்தும் வந்தவர்கள். பொருளாதாரம், சாதி, மதம் என எல்லாம் வேறு. ஆனால், 1984 ஆம் ஆண்டு அவர்கள் வாழ்க்கையில் சில விஷயங்கள் பொதுவாக இருந்தன. அது அவர்கள் பார்த்த பணி மற்றும் எதிர்காலம் குறித்த நம்பிக்கை.

இரண்டாவது விஷயம் அந்த மக்கள் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை நம்பினார்கள்.

இவை இரண்டும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 2ஆம் தேதி நள்ளிரவு சிதைந்து போனது. அடுத்த நாள் அந்த ஊர் ஒரு மரணக் காடாக காட்சி அளித்தது.

என்ன நடந்தது?

ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்கு முன்பு பிபிசியிடம் அந்த ஊரை சேர்ந்த தலைமை காவலர் சுவராஜ் பூரி கூறியவை, அந்த பேரழிவை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சுவராஜ் புரி, “அது ஒரு குளுமையான நள்ளிரவு. என்னுடைய குழந்தைகள் உறங்கி கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஏதோவொரு சத்தம் கேட்டது. நான் சிறு சலசலப்பு என்றுதான் நினைத்தேன். என் குழந்தைகள் தூக்கம் கலைவதைநான் விரும்பவில்லை. வெளியே சென்று விசாரித்த போது யூனியன் கார்பைட் பகுதியில் ஏதோ பிரச்சினை என்று கூறினார்கள்.”

அந்த பகுதிக்கு சென்று போது ஒரே புகை மூட்டம். மக்கள் எல்லாரும் இருமத் தொடங்கினார்கள். கண்களிலிருந்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கண்ணீர் கொட்டியது. ஏதோவொரு விபரீதம் நடக்கிறது என புரிந்தது. ஆனால், என்ன என்று புரியவில்லை. அடுத்த நாள் அனைத்தும் புரிந்த போது எல்லாம் கையை மீறி போய் இருந்தது. நானும் சக காவலர்களும்தான் அங்கிருந்த உடல்களை அப்புறப்படுத்தினோம்” என்கிறார்.

chemicalplant3

பிபிசி செய்தியாளரின் அனுபவம்

இந்த பேரழிவு நடந்த போது பிபிசி ஸ்போர்ட்ஸ் செய்தியாளர் மிகேல் ப்ளாக்கி இங்கிலாந்து இந்தியா கிரிக்கெட் போட்டி குறித்து செய்தி சேகரிக்க போபாலில் இருந்தார்.

இது குறித்து கூறிய அவர் “அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘போபாலில் சிறிதாக வாயு கசிவு. அச்சப்படத் தேவையில்லை’ என்றார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் அழைத்தவர்கள் ‘உடனே விமானத்தில் புறப்படுங்கள்’ என்றார்கள். அந்த கேஸ் நாற்றம் இன்னும் நாசியில் இருக்கிறது. அது அச்சம் தருகிற மிக மோசமான ஒரு நாற்றம். எங்கும் இருமல் சத்தம்” என்று அப்போது நடந்தவற்றை நினைவு கூர்கிறார்.

காவலர், பிபிசி செய்தியாளர் என அந்த சம்பவத்தின் போது அங்கிருந்து உயிர் பிழைத்தவர்கள் ஒவ்வொருவரிடமும் சொல்ல ஒரு துயர் மிகு கதை இருக்கிறது.

இன்னும் அந்த ஆலை முழுவதும் சுத்திகரிக்கப்படாமல் இருக்கிறது. இது குறித்து யூனியன் கார்பைட் நிர்வாகத்திடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேட்டதற்கு, “அந்த ஆலையை விற்பனை செய்வதற்கு முன்பு, அதனை சுத்திகரிக்க 2 மில்லியன் டாலர்கள் செலவிட்டு இருக்கிறோம். இப்போது ஆலை பகுதி அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது”என்றார்.

8

சில தகவல்கள்

இன்றுடன் அந்த பேரழிவு நடந்து 34 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் அந்த மக்கள் உரிய நிவாணத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் அந்த பேரழிவு குறித்த அடிப்படையான சில தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

உற்பத்தி தொடக்கம்: 1979ஆம் ஆண்டு யூனியன் கார்பைட் நிறுவனத்தின் போபால் ஆலை பூச்சி கொல்லி உற்பத்தியை தொடங்கியது.

அந்த பேரழிவு நடந்த தினம்: டிசம்பர் 2, 1984 நள்ளிரவு.

இறந்தவர்கள்: 15,000 பேருக்கு மேல் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள். விபத்து நடந்த மூன்று தினங்களில் 8000 பேர் இறந்திருக்கிறார்கள். அரசு கணக்கின் படி இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து லட்சத்திற்கும் மேல்.

கைது: இதன் உரிமையாளர் வாரன் ஆண்டர்சன் போபால் போலீஸால் கைது செய்யப்பட்டார். பின் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், இந்தியாவிலிருந்து வெளியேறினார்.

அரசு கேட்டது: 1989ஆம் ஆண்டு இதற்கு இழப்பீடாக 40 மில்லியன் டாலர்களை தருவதாக கூறிய அரசு 3.3 பில்லியன் டாலர்களை கேட்டது.

தண்டனை: 2010ஆம் ஆண்டு யூனியன் கார்பைட் நிர்வாகிகளுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இழப்பீடு: 2012ஆம் ஆண்டு இந்த விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் தந்தது.

போராட்டம்: இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் குறித்த கணக்கினை அரசு சரியாக எடுக்கவில்லை. போதுமான இழப்பீடும் வழங்கவில்லை என்று கூறி மக்கள் போராடி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here