செல்போன் பயன்பாட்டினை பொறுத்தவரை ஒரு காலத்தில் ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. ஆனால், எப்போது இவர்களுக்கு போட்டியாக ஜியோ சிம் கார்டு களத்தில் இறங்கியதோ, அப்போதே மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் சரிவு தொடங்கிவிட்டது. ஏனெனில், இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர். 

ஏற்கெனவே ஒரு சிம் வைத்திருந்த போதும் கூடுதலாக ஜியோ சிம் வாங்கி பயன்படுத்தினர். அதாவது இன்கம்மிங் கால்களுக்கு ஏற்கெனவே வைத்திருந்த சிம் கார்டுகளையும், அவுட் கோயிங் கால்களுக்கு ஜியோ சிம்மையும் பயன்படுத்தினார்கள். இதுதான், மற்ற நெட்வொர்க்களுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணி சரிவை ஏற்படுத்தியது. இதில், நஷ்டத்தை தாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் சேவையை நிறுத்திக் கொண்டது.

ஏற்கெனவே ஜியோவின் வருகையால் சரிவை சந்தித்து வந்த மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு, ‘ரிங்’ ஆகும் நேரத்தை ஜியோ குறைத்தத்து கோபத்தை மூட்டியது. ரிங் ஆகும் நேரத்தை குறைத்ததால் மற்ற நெட்வொர்க் கால்கள் மிஸ்டு கால் ஆக மாறி ஜியோ வாடிக்கையாளர் அவுட் கோயிங் செய்யும் நிலை உருவாகும்.

ஜியோவில் இருந்து இன் கம்மிங் கால் வந்தால் அதனை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் 6 பைசா கொடுக்க வேண்டியிருக்கும். இதுகுறித்து, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான ட்ராய் இடம் அவர்கள் புகார் அளித்தனார். அந்த புகாரின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு ட்ராய் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஒரு போன் காலுக்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ட்ராய் நிறுவனத்தின் வலுக்கட்டாயமான அறிவுறுத்தலை அடுத்து ஜியோ இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, ஜியோ சிம் கார்டில் இருந்து மற்றொரு ஜியோ சிம்மிற்கு போன் செய்தாலோ, லேன் லைண்ட்க்கு போன் செய்தாலோ இந்த கட்டணம் கிடையாது. அதேபோல், வாட்ஸ் அப், பேஸ்டைம் உள்ளிட்ட கால்களுக்கும் கட்டணம் கிடையாது. வழக்கம் போல் மற்ற நெட்வொர்கில் இருந்து வரும் கால்கள் இலவசம்தான். 

இருப்பினும், வாய்ஸ் கால்க்கு செலுத்தும் இந்த கட்டணத்திற்கு இணையாக டேட்டா இலவசமாக வழங்கப்படும் எனவும் ரிலையன்ஸ் ஜியோ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.