ஆர்யன் கான் போதை பொருள் வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்டோர் மீது லஞ்ச புகார் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க மும்பை போலீசார் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர் .  

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வழக்கை விசாரித்து வரும் சமீர் வான்கடே லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார். தனியார் துப்பறிவாளர் என்று அறியப்படும் கிரண் கோஷாவி மூலம் இந்த வழக்கில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்க முயற்சிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது 

சமீர் வான்கடே உள்ளிட்டோர் கிரண் கோஷாவி உதவியோடு லஞ்சம் வாங்க முயன்றதாகவும். ஆர்யன் கானை விடுவிக்க கிரண் கோஷாவி 18 கோடி ரூபாய் கேட்டதாகவும். அதில் 8 கோடி ரூபாய் சமீர் வான்கடேவிற்கு செல்லும் என்று பேரம் பேசியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

கிரண் கோஷாவியின் பாதுகாலவர் என்று சொல்லப்படும் பிராபகர்  மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். இதனால் சமீர் வான்கடே லஞ்ச புகாரில் சிக்கி உள்ளார். தலைமறைவாக இருந்து லஞ்ச பேரம் பேசிய கிரண் கோஷாவி இன்று புனேவில் பிடிபட்டார். இதனால் லஞ்ச புகார் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீர் வான்கடே இந்த போதை பொருள் வழக்கை தொடர்ந்து விசாரிப்பார் என்று போதை பொருள் தடுப்பு பிரிவின் லஞ்ச ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையின் முடிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீர் வான்கடேவிற்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் வெளியிடப்படும் வரையில், சமீர் வான்கடே இந்த போதை பொருள் வழக்கை தொடர்ந்து விசாரிப்பார் என்று கூறியுள்ளது.

இன்னொரு பக்கம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் அனைத்து விதமான லஞ்ச புகார்கள் குறித்தும் மும்பை போலீஸ் தனியாக விசாரிக்க உள்ளது. இந்த லஞ்ச புகார்களை போதை பொருள் தடுப்பு பிரிவிற்கு எதிராக மும்பை போலீஸ் விசாரிக்க உள்ளது. இதற்காக ஸ்பெஷல் டீமை மும்பை போலீசார் உருவாக்கி உள்ளனர். பிரபாகர் செயில், வழக்கறிஞர்கள் சுதா திவேதி, கனிஸ்கா உள்ளிட்ட பலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்க உள்ளது.

எல்லா புகாரையும் சேர்த்து ஒன்றாக விசாரிக்க உள்ளனர். மும்பை தெற்கு கூடுதல் ஆணையர் திலீப் சாவந்த் இந்த விசாரணையை மேற்பார்வையிடுவார். டிசிபி ஹேம்ராஜ் சிங் இவருக்கு உதவியாக இருப்பார். துணை கமிஷ்னர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவு மீது மும்பை போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here