போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களைக் கண்டறிந்து வழக்குப் பதிந்து அவர்களின் முகவரிக்கே சம்மனும், அபராத ரசீதும் அனுப்பும் திட்டம் சென்னை முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, நடந்த குற்றத்துக்கு உடனடியாக உண்மைக்குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன என, ‘மூன்றாவது கண்’ எனும் பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

வணிக நிறுவனங்கள், குடியிருப்புக்கள், சாலைகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் இதுவரை சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு, அந்தந்த பகுதி காவல்நிலைய எல்லையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
ஒரு சில காவல் நிலைய எல்லைகள் 100 சதவீத சிசிடிவி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து காவல்நிலைய எல்லைகளும் 100 சதவீத கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தினந்தோறும் ஒவ்வொரு பகுதியில் குடியிருப்பு வாசிகள், நிறுவனங்கள் உதவியுடன் சிசிடிவி கேமராக்கள் அமைத்து நேரடியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று ஊக்கப்படுத்தி வரும் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளில் ஆர்.சி.சி. திவா அறக்கட்டளை உதவியுடன் அமைக்கப்பட்ட 384 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.
 
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை காவல்துறையின் எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகை, வாகனப் பெருக்கம் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். ஆனால், அதற்கேற்ப காவலர்களின் எண்ணிக்கையை மட்டுமே அதிகப்படுத்தினால் குற்றங்களை முழுமையாக தடுப்பது சாத்தியமாகாது என அவர் தெரிவித்தார். எனவே, காவல்துறை திறம்பட செயல்பட, தொழில்நுட்பங்கள் பெரிதும் உதவுவதாக ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

சிசிடிவி அமைப்பதை ஒரு இயக்கமாக காவல்துறை கொண்டு சென்றதன் பயனாக அவற்றின் மீதான பயத்தால் குற்றங்கள் குறைந்துள்ளதாகக் கூறினார். இன்று தினந்தோறும் நடந்து வந்த செல்போன், செயின்பறிப்பு சம்பவங்கள், வீடு புகுந்து திருடுதல், சாலையில் நடக்கும் ரவுடியிசம், வடமாநிலக் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது உள்ளிட்டவை பெருமளவு குறைந்துள்ளது பெரிய சாதனை என்றார்.
 
50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி எனும் வகையில் சென்னை முழுவதும் 100 சதவீத சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பு மிக விரைவில் கொண்டு வரப்படும் எனவும், அவர் கூறினார்.
 
பெரும்பாலான முக்கிய சாலைகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து விதிகளை மீறி வாகன ஓட்டிகள் சென்றால், ஆட்டோமெடிக் நம்பர் ரெகக்னிசன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வாகன எண் தெளிவாக குறிப்பிட்டுத் தரும் தொழில்நுட்பம் என்பதால், விதிகளை மீறி சாலையில் செல்வோரை ஓடிச் சென்று மடக்கிப் பிடிக்கத் தேவையில்லை என குறிப்பிட்டார். மாறாக பதிவெண்ணில் உள்ள உரிமையாளரின் முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அபராத ரசீதும் அனுப்பப்படும் வசதி விரைவில் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here