ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனையோடு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 

விபத்துக்களைக் குறைக்கும் பொருட்டு தண்டனை, அபராதத்தை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் 2019-க்கான மசோதா நேற்று மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியால் தாக்கல் செய்யப்பட்டது.

அதன்படி, ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிடத் தவறி, மறித்தபடி செல்வோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது. ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திராமல் வாகனம் ஓட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வாகனக் காப்பீட்டு நகலை வைத்திராவிட்டால் 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவோருக்கு 2 ஆயிரம், அதிவேகத்துக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம், சீட் பெல்ட் அணியாமலோ, ஹெல்மெட் அணியாமலோ பயணித்தால் ஆயிரம் ரூபாய் என அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனையோடு 25 ஆயிரம் அபராதமும், வாகன பதிவை ரத்து செய்தும் தண்டனை விதிக்க புதிய சட்டத்திருத்த மசோதா வழிவகுக்கிறது.

போக்குவரத்து விதி மீறும் வாடகைக் கார் சேவை நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், வாகனங்கனில் அதிக பாரம் ஏற்றினால் 20 ஆயிரம் அபராதமும் விதிகப்படக் கூடும். அதி வேகத்துக்கு ஆயிரம் ரூபாயாக இருந்த அபராதம் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் வசூலிக்கப்படும் அபராதமும் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

இதுபோன்ற கண்டிப்பான அபராதத்தால் விபத்துக்களும், அதனால் பறிபோகும் விலைமதிப்பற்ற உயிர்களின் எண்ணிக்கையும் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here