வரும் நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம் தொழிற்சங்கங்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளன.

ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஏழாயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும், 2003-ஆம் ஆண்டுக்கு பின்பு பணியில் சேர்ந்த பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் மாதம் வேலைநிறுத்தம் மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்கான வேலைநிறுத்த நோட்டீஸ், வரும் 10-ஆம் தேதி (புதன்கிழமை), அரசுக்கு வழங்கப்படும். பின்னர் தொழிற்சங்கங்கள் கூடி ஆலோசித்து, நவம்பர் 1-ஆம் தேதி அல்லது வேறொரு தேதியில் இருந்து வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நவம்பர் 6-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகைக்கு, நவம்பர் 3-ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்திஇருந்தது.

இந்நிலையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம் தொழிற்சங்கங்கள் திங்களன்று நோட்டீஸ் வழங்கியுள்ளன.

2018, ஜனவரி மாதத்தில் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்னர், இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது. அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்