போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாராகி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வியாழக்கிழமை (இன்று) விசாரணைக்கு வந்தது.

அப்போது, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது. பணிக்கு வராதவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை ஜன.8ஆம் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்தது.

இதையும் படியுங்கள்: சிறுதொழில் தொடங்க வேண்டுமா? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்