தமிழகத்தில் போகி பண்டிகை 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகையின்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பொருள்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நேற்று(வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி குறிப்பு : சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையின்போது, பழைய பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், டயர், டியூப் உள்ளிட்ட ரப்பர் பொருள்கள், காகிதப் பொருள்கள், ரசாயனம் கலந்த பொருள்கள் ஆகியவற்றை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற பொருள்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு போகிப் பண்டிகையின்போது, எரிக்கப்பட்ட பழைய பொருள்களால் ஏற்பட்ட புகை காரணமாக அன்றைய தினம் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 42 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் 13 மண்டலங்களில் காற்றில் துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட 100 கன மீட்டரை விட 135 கன மீட்டர் முதல் 386 கன மீட்டர் வரை அதிகரித்து காணப்பட்டது.
எனவே, இந்த ஆண்டு போகிப் பண்டிகைக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கண்காணிப்புப் பணி மேற்கொள்ள 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர்.

போகிப் பண்டிகையின் முந்தைய நாள் (ஜன. 13) மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here