பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது மேலும் ஒரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில், “பார்’ நாகராஜ், ஆச்சிபட்டியைச் சேர்ந்த வசந்த்குமார், பாபு, மணிவண்ணன் ஆகியோர் மாணவியின் சகோதரரைத் தாக்கினர். 

இதுகுறித்தும் பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து “பார்’ நாகராஜ், செந்தில், வசந்த், பாபு ஆகியோரைக் கைது செய்தனர். ஒரு மாதத்துக்கும் மேல் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் (30), பின்னர் கோவை மாவட்ட  தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் எஸ்.நாகராஜன் முன்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி சரணடைந்தார்.  இந்நிலையில் திருநாவுக்கரசு உள்ளிட்ட நால்வரிடம் சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் பாலியல் வழக்கில் மணிவண்ணனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

அதையடுத்து போலீஸார் அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்தனர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது பெண்ணை அவமானப்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருபிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் கூடுதலாக பாலியல் வன்கொடுமை என்ற வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.

Courtesy: dinamani
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here