பொள்ளாச்சி பாலியல் கொடூரம் : பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிசிஐடி விசாரணை: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0
164

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 10 க்கும் மேற்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.


கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து அவர்களிடம் அத்துமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கிய “பார்’ நாகராஜ், பாபு, செந்தில், வசந்த் ஆகியோர் மீது போலீஸார் அடிதடி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதில் பார் நாகராஜ் தவிர மற்றவர்கள் சிறையில் உள்ளனர். இதில் கைதானவர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் நடத்திய சோதனையில் செல்லிடப்பேசிகள், மடிக் கணினிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் மார்ச் 25 ஆம் தேதி கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பல பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீஸாரிடம் மணிவண்ணன் தெரிவித்தார். இதையடுத்து, அவரைப் பாலியல் வழக்கிலும் சேர்த்து சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். மணிவண்ணனிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்கள் 10 க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்களிடம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் மணிவண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கில் பாலியல் பலாத்காரப் பிரிவையும் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக சிறப்பு எண் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 350 க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன.

அதில் பொதுமக்கள் பலரும் தாமாக முன்வந்து தகவல்களைத் தெரிவித்தனர். அந்தத் தகவல்கள் இந்த வழக்குக்கு உதவியாக இருந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் மட்டுமே இந்த எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேர் மீதும் பாலியல் பலாத்காரப் பிரிவையும் சேர்த்துள்ளோம். வழக்கின் குற்றப்பத்திரிகையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளோம் என்றனர்.


 சிறுமி கொலை செய்யப்பட்டதாக வெளியான ஆடியோவின் உண்மைத் தன்மையை ஆராய்வதில் தாமதம்: இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 26 ஆம் தேதி கட்செவி அஞ்சல் மூலம் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பேசிய இளம்பெண் ஒருவர் திருநாவுக்கரசு மற்றும் அவரது கும்பலால் தான் பாதிக்கப்பட்டதாகவும், தன்னை அவர்கள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியபோது, அங்கு சிறுமி ஒருவர் இருந்தார். 


அவரைத் திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்போது, அந்தச் சிறுமி இறந்துவிட்டதாகவும், இதையடுத்து, அவரை அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே புதைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் கேட்டபோது, பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் ஆடியோக்கள் வெளியாகின. அதில் சிறுமி கொலை செய்யப்பட்டதாக வெளியான ஆடியோ முக்கியமானதாகக் கருதப்பட்டது.இதையடுத்து, அந்த ஆடியோ எந்த எண்ணில் இருந்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.


 அதில் பேசிய பெண் யார் என்பது குறித்து விசாரிப்பதற்காக சைபர் கிரைம் போலீஸாரின் உதவியை நாடினோம். ஆனால், அதில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. இருப்பினும் இதை அலட்சியப்படுத்தாமல் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து விரைவில் கண்டறியப்படும் என்றனர்.

dinamani.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here