பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை விவரங்களை அரசாணையில் வெளியிட்ட போலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்குமாறும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியை சேர்ந்த இளமுகில் தாக்கல் செய்த மனு : சமூக வலைதளங்களால் நன்மைகள் இருந்தும், தீமைகள் அதிகளவில் உள்ளன. பாலியல் குற்றங்கள் தொடர்புடைய விடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரப்பப்படுகின்றன.

பாலியல் வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறினால் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இந்நிலையில், பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ளார். இதன் விளைவாக, அப்பெண்ணின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

எனவே, இதுதொடர்பான விசாரணையை விரைவில் முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும், பாலியல் வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கவும், பாலியல் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றவும், சமூக வலைதளங்களில் பாலியல் உள்பட கொடூரமான குற்றங்களில் தொடர்புடைய விடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகளை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”பொள்ளாச்சி விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் துணிச்சலாக புகார் அளித்த பெண்ணின் அடையாளத்தை நீதிமன்ற உத்தரவுகளை மீறி வெளியிட்டது ஏன் இவ்வாறு செய்தால் இது தொடர்பாக புகார் அளிக்க யார் முன்வருவர்” எனக் கூறினர்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், பொள்ளாச்சி விவகார விடியோ பல லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டு வருகிறது. இது சமூக பாதிப்பை ஏற்படுத்தும், தவறு செய்யத் தூண்டும் என மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார். ஆகவே பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான விடியோக்களை தடை செய்ய வேண்டும். இதற்காக இணைய சேவை வழங்குவோர் சங்கச் செயலாளர், இந்த வழக்கின் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகிறார். இணைய தளம் தொடர்பான நன்மை, தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

செல்லிடப்பேசி மக்களின் வாழ்வில் ஒரு அங்கமான நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதனை பாடமாக்க முயற்சிக்க வேண்டும். குடும்பத்தில் பெண் குழந்தைகளுக்கு போதிய அன்பும் அக்கறையும் அளிக்கப்படாததே, இது போன்ற நிலைக்கு காரணம். அவற்றைக் கருத்தில் கொண்டு, பொள்ளாச்சி வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளமின்றி புதிதாக அரசாணை வெளியிட வேண்டும்.

அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதால், தமிழக அரசு, அவருக்கு களங்கம் விளைவித்துள்ளது.எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான விடியோக்கள், புகைப்படங்கள் வைத்திருப்பதும், பகிர்வதும் குற்றம். இது தொடர்பாக தமிழக அரசு விரிவான விளம்பரம் செய்ய வேண்டும்.
விதிகளையும், சட்டங்களையும் அறிந்தும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும் அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here