பொள்ளாச்சி பாலியல் கொடூரம்; கோவையில் சிபிஐ அதிகாரிகள்; வைரலாகும் பார் நாகராஜின் புதிய ஆடியோ

0
152

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாக, சிபிசிஐடி போலீஸார்  அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கோவை அருகே நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாலியல் பலாத்காரம் பிரிவிலும் மேற்கண்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த 2 வழக்குகளும் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிஐ ஐஜி விப்லஸ் குமார் சவுத்திரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைமணி, ஆய்வாளர் விஜய வைஷ்ணவி ஆகியோர் கோவைக்கு வந்தனர்.

கோவை சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள்  வெளியிட்ட அறிக்கையில், பாலியல் வழக்கு, பாலியல் புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கு ஆகிய 2 வழக்குகள் குறித்தும் விசாரிக்கப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட வழக்கு சிபிஐ மேல் விசாரணைக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ எடுப்பதற்கு முன்னர் சிபிசிஐடி தென் மண்டல காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டன எனக் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளனர். முதலில் புகார் அளித்த பெண் வழக்கு தொடர்பான சம்பவம் நடந்த தாராபுரம் ரோடு, சம்பந்தப்பட்ட பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு விசாரிக்க உள்ளனர்.

வைரலாகும்ஆடியோ

அந்த ஆடியோவில் ‘பார்’ நாகராஜ் என கூறும் நபர், “நான் யாருன்னு தெரியலையா… பொள்ளாச்சி வந்து கேட்டு பாரு ‘பார்’ நாகராஜ் யாருன்னு சொல்வாங்க. சம்பத், கோகிலா ஆகியோர் மீது நீங்க கொடுத்த வழக்கை வாபஸ் பெற வேண்டும், இல்லையென்றால் உன் கணவர் வெளிநாட்டில் இருந்து வரும்போது கடத்தி கொலை செய்ய தயங்க மாட்டோம் என்கிறார். இதற்கு அந்தப் பெண், “வழக்கை திரும்பப் பெறவும் முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்’’ எனக் கூறுகிறார். “எனக்கு அரசியலில் செல்வாக்கு உள்ளது, உன்னையும் உன் கணவரையும் கொலை செய்யாமல் விடமாட்டோம்’’ என அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் 2 ஆடியோக்களில் சம்பத் என்பவரும், வேறு ஒரு நபரும் அந்தப் பெண்ணை மிரட்டுவது பதிவாகி உள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் ‘பார்’ நாகராஜ் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தற்போது ‘பார்’ நாகராஜ் மட்டும் ஜாமீன் பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களாக ‘பார்’ நாகராஜ், சம்பத் மற்றும் அவரது நண்பர்கள் வழக்கை திரும்பப் பெறக் கோரி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் 3 ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்துக்கு வந்த நாகராஜ், ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் இல்லை என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பொள்ளாச்சி போலீஸார் கூறும்போது, இதுதொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவாகவில்லை. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆடியோ தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here