சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, தீயணைப்புத் துறை இயக்குநர் பொறுப்பை ஏற்க மறுத்தார். இதன் காரணமாக அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம், அவருடைய ஓய்வூதியப் பலன்கள் நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிய வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று(வியாழக்கிழமை) கூறியபோது : அலோக் வர்மாவை உடனடியாகப் பணியில் சேருமாறு உத்தரவிட்டிருப்பதன் மூலம், அவரது ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது. இதனால், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவரது ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட சலுகைகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மாவும், சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் முன் வைத்தனர். இதையடுத்து, இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டு இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கட்டார்.

தன்னைக் கட்டாய விடுப்பில் அனுப்பியதை எதிர்த்து அலோக் வர்மா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் பின் மீண்டும் சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான குழு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை பரிசீலித்து, அவரை சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கியது.

இதன் பின்னர், அவர் தீயணைப்புத் துறையின் இயக்குநராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அந்தப் பொறுப்பில் சேர அலோக் குமார் வர்மா மறுத்தார். இது தொடர்பாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “ஏற்கெனவே பணி ஓய்வுபெறும் வயதை எட்டிவிட்ட நான், 2019-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை, சிபிஐ இயக்குநர் பொறுப்பை வகிக்கப்பதற்கு நியமிக்கப்பட்டேன். அந்தப் பொறுப்பை வகிக்க இயலாத நிலையில், நான் ஓய்வுபெற்றதாகக் கருதிக் கொள்ள வேண்டும்’ என்று அலோக் வர்மா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்று(வியாழக்கிழமை) முடிவடைந்தது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு புதன்கிழமை(ஜனவரி 30) கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், தீயணைப்புத் துறையின் இயக்குநர் பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பொறுப்பை அலோக் வர்மா ஏற்க மறுத்து விட்டார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here