ஆம்பூரில் இருக்கும் தோல் தொழிற்சாலைகளும் , திருப்பூர் பின்னாலாடை வர்த்தகமும்  ஜிஎஸ்டி வரி விதிப்பு, உற்பத்தி செலவு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியை எதிர் கொண்டிருக்கிறது . 

மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள்

வீழ்ச்சியை நோக்கி தோல் தொழிற்சாலைகள் சென்றுக் கொண்டிருப்பதால் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மாற்றுத் தொழிலை தேடி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருட்கள் முக்கிய இடம் வகிக்கிறது.  இத்தொழிலால்  நாட்டில் சுமார் 44 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது 

தமிழ்நாட்டில் தோல் தொழில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடந்தாலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது .  இப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகள் உள்ளன. 

வாகனத் துறை, ஜவுளித் துறை வீழ்ச்சியில்  இருப்பதால் உற்பத்தி இல்லாத  நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வீழ்ச்சி நிலை தோல் தொழிலிலும் நிலவுகிறது .   தோல் தொழில் கடந்த 4 ஆண்டுகளாகவே சரிவில்  உள்ளது என்று இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, வெளிநாடுகளில் தோல் பொருள்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பது போன்ற காரணங்களால் தோல் தொழில் வர்த்தகம் நாளுக்குநாள் சரிந்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஷூ மற்றும் தோல் பொருள்கள் ஆம்பூர், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகள் அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது . இதனால் இந்திய தோல் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பு, தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடைமுறைபடுத்தி வரும் கடுமையான விதிமுறைகள் போன்றவையும் நாட்டில் தோல் தொழில் தொய்வடையக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

தோல் கழிவுநீரை சுத்திகரிக்க அதிகரிக்கும் செலவினம், மின் கட்டண உயர்வு, உற்பத்தி விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல சிறிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. சில பெரிய தோல் நிறுவனங்கள் கூட தொழிலை கைவிடும் நிலைக்கு சென்றுவிட்டன.

ஜிஎஸ்டி படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கெடுபிடிகள், ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதில் ஏற்படும் கால தாமதம், செயல்பாட்டு மூலதன பற்றாக்குறை போன்ற காரணங்களும் தமிழக தோல் தொழிலை இக்கட்டான சூழலில் தள்ளியிருக்கின்றன.

மேலும் தோல் தொழிலில் தொடர்புடைய ஒவ்வொரு மூலபொருளுக்கும் மாறுபட்ட ஜிஎஸ்டி வரி விகிதம், தோல் தொழிலை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் புதியதாக இயந்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள் முடங்கியுள்ளன. பல நிறுவனங்களை இருப்பதை வைத்து குறைந்த அளவு உற்பத்தி செய்து வருகின்றன.

ஜிஎஸ்டி திரும்பப் பெற வேண்டிய தொகைக்காக 8 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்று சில நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன. 

அதே நேரத்தில் தைவான், வியட்நாம், வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் தோல் தொழிலுக்கு உற்பத்தி செலவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. தோல் தொழிலுக்கான மூலபொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதனால் பல நாடுகள் தங்களுக்குத் தேவையான தோல் பொருள்களை அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள ஆரம்பித்துவிட்டன. இதன் காரணமாகவும் இந்திய தோல் தொழில் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .  

எனவே தோல் தொழில் தொடர்ந்து லாபகரமாக நடத்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை பழைய முறைப்படி வழங்க வேண்டும்.

அந்நியச் செலாவணி வருவாய், லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு போன்றவற்ரை கருத்தில்   கொண்டு, தோல் தொழிலை சரிவிலிருந்து மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தோல் தொழில் துறை சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்பூரில் சரிந்த பின்னலாடை வர்த்தகம்

திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளதால் உள்நாட்டு வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. 

இந்திய பின்னலாடைகளில் சரிபாதி உற்பத்தி திருப்பூரில்தான் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூரின் பங்கு மட்டும் 3.5 சதவீதம். திருப்பூரில் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாக 4 லட்சம் பேர், மறைமுகமாக 6 லட்சம் பேர் என சுமார் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே வேளையில் ஏற்றுமதிக்கு நிகராக வெளி மாநிலங்களுக்கும் திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் அனுப்பப்படுகின்றன. 2018-19-ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ. 25 ஆயிரம் கோடி, உள்நாட்டு வர்த்தகம் ரூ. 25 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 திருப்பூரில் 2010-ஆம் ஆண்டில் உள்நாட்டு வர்த்தகம் ரூ. 10 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து 2016, 2017 ஆம் ஆண்டுகளில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு போன்ற பிரச்னைகளின்போது ஒரு சில உற்பத்தியாளர்கள் உள்நாட்டு வர்த்தகத்துக்கு மாறியுள்ளதாகும்.

பின்னலாடைத் தொழிலில் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் குறையும்போது உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்து வந்தது.  உள்நாட்டு வர்த்தகத்தை நம்பி மட்டும் திருப்பூரில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த தீபாவளி முதலே உள்நாட்டு வர்த்தகம் ஓரளவு குறையத் தொடங்கியது. உள்நாட்டு வர்த்தகத்தில் அதிகமாக உற்பத்தி செய்து தேக்கி வைத்துக் கொள்கின்றனர்.

திருப்பூரில் தீபாவளிக்கு வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை இதுவரை 10 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. இதனால் உள்நாட்டு சிறு உற்பத்தியாளர்களும், சந்தை வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களான மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் பின்னலாடைகள் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகப் பெய்த மழையால் அனுப்பிய பின்னலாடைகளுக்கான பணம் வந்தடையவில்லை.

மேலும், உற்பத்தி செய்யப்பட்டுள்ள சரக்குகளை அனுப்ப முடியாததால் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளன. இதுதவிர, வர்த்தகம் முடிந்த சரக்குகளுக்குச் செலுத்திய ஜிஎஸ்டி வரி திரும்பிக் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 2 ஆண்டுகளில் சுமார் ரூ. 500 கோடிக்கு மேல் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வரவேண்டியுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட பின்னலாடைகளை வாங்குவதற்கு வர்த்தகர்கள் வராததால் சரக்குகள் உற்பத்தியாளர்களிடமே தேக்கமடைந்துள்ளன.

தொழில் வீழ்ச்சி அடைந்துள்ளதால்  உற்பத்தியாளர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தீபாவளிக்கு வெறும் 20 நாள்களே உள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வர்த்தகர்கள் வந்தாலும் தேக்கமடைந்துள்ள பின்னலாடைகளை குறைவான விலைக்கு வாங்கிச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. 

http://IndianExpress.com

http://ndtv.com

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here