இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல்காலாண்டில் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது நமக்கு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொண்டு, மனத்திருப்தி அடைந்திருக்கும் நிலையிலிருந்து அரசு வெளியேறி, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் வைத்து, அடுத்த கட்ட பொருளாதார மீட்சி நடவடிக்கைளை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், லிங்ட்இன் பக்கத்தில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி குறித்து எழுதியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது அனைவருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கைமணியாக இருக்க வேண்டும். ஏனென்றால், உலகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்த வீழ்ச்சியைவிட இந்தியப் பொருளாதாரத்தில் அமைப்புசாரா துறையின் வீழ்ச்சி அதிகமாக இருக்கிறது. நாட்டை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சுயதிருப்தி மனநிலையிலிருந்து வெளியேறி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா வைரஸால் இத்தாலியில் கூட பொருளதாாரம் 12.4 சதவீதம்தான் வீழ்ந்தது, அமெரி்க்காவில் 9.5 சதவீதம் தான் சரிந்தது. இந்த இருநாடுகள்தான் அதிகமான பொருளதாரா சரிவைச் சந்தித்துள்ளன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் வரை பொருளாதார சிக்கல் காரணமாக, மக்கள் விருப்பப்படி செலவு செய்யும் அளவு குறையும். ஆதலால், அரசு சார்பில் அளிக்கும் நிவாரண உதவிதான் மிகவும் முக்கியமானது. எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக வளங்களை செலவு செய்யாமல் அரசு தயக்கம் காட்டினால், அது தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் உத்தியாகவே பார்க்கப்படும். நிவாரண உதவிகள், நிவாரணப் பணிகள் இன்றி, நாட்டின் பொருளாதாரம் மேலே வராது. நிவாரண உதவிகள் இல்லாவிட்டால், பொருளாதாரம் இன்னும் மோசமான சேதத்தை எதிர்நோக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதனால் தற்காலிகமான அரைவேக்காடு சீர்திருத்தங்களான, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை ரத்து செய்தது போன்றவை சிறிய அளவுக்குத்தான் தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தைத் தரும். மோசமான செயலுக்கு சீர்திருத்தம் என பெயரிடப்பட்டது. சீர்திருத்தங்கள் என்பது பொருளாதார செயல்பாட்டை, வளர்ச்சியை தூண்டிவிட வேண்டும், உடனடியாக இல்லாவிட்டாலும்கூட, குறிப்பிட்ட காலத்துக்குப்பின், முதலீட்டாளர்களை தூண்டிவிட வேண்டும். கொரோனாவிலிருந்து உலகம் இந்தியாவுக்கு முன்பே சீரடைந்துவிடும். ஆதலால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த ஏற்றுமதியை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here