பொருளாதாரம், எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தோல்வி அடைந்துள்ள பிரதமர் மோடியின் அரசுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மோடி அரசின் ரிப்போர்ட் கார்டு என்று குறிப்பிட்டு சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் குறிப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் தோல்வி அடைந்துவிட்டது.

எல்லை பாதுகாப்பிலும் சீனாவின் அத்துமீறலை தட்டி கேட்க முடியாத அளவுக்கு தோல்வியையே சந்தித்துள்ளது. அது போல் தேச பாதுகாப்பில் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் உளவு பார்க்கப்பட்டனர்.

சரி உள்நாட்டு பாதுகாப்பாவது சரியாக இருக்கும் என்றால் அதிலும் காஷ்மீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் தோல்வி அடைந்துவிட்டது. இத்தனை தோல்விகளை சந்தித்த நிலையில் நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லை பாதுகாப்பில் தோல்வி என சுப்பிரமணியன் சுவாமி சொல்வது அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லையில் சீனா வீடுகளை கட்டி புதிய கிராமத்தையே உருவாக்கியதை சொல்கிறார். அது போல் வெளிநாட்டு கொள்கையில் ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் தோல்வி என்பது அந்த நாட்டில் ஜனநாயக அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் அந்த ஆட்சி அகற்றப்பட்டு தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளதை சுப்பிரமணியன் சுவாமி சுட்டி காட்டுகிறார்.

பாஜக எம்பியாக இருந்து வரும் போதிலும் அந்த அரசின் தவறுகளை சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகிறார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பொருளாதாரமே தெரியாது என சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் மோடியின் ரிப்போர்ட் கார்டு குறித்து சுப்பிரமணியன் சுவாமி கருத்து வெளியிட்டுள்ள நிலையில் நெட்டிசன் ஒருவர் நீங்கள்தான் பொறுப்பு, கடந்த 2014 ஆம் ஆண்டும் 2019 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு விவகாரத்திற்கு பிறகும் மோடியை நீங்கள் தானே ஆதரித்தீர்கள். மோடியின் தலைமையில் இந்தியாவில் சிறந்த ஆட்சி நடைபெறும் என தெரிவித்தீர்கள். தற்போது உங்களுடைய அனுமானம் தோல்வி அடைந்துவிட்டதே தவிர அவர் மீது எந்த தவறும் இல்லை என்கிறார்.

இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, ஆமாம், மோடியின் செயலற்ற நிர்வாகம் எனது தவறுதான். பிரதமராக அவர் இருந்த போதிலும் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை பாருங்கள், எனக்குதான் எல்லா அதிகாரமும் இருந்தது என நக்கலாக சுவாமி பதில் அளித்துள்ளார். அது போல் குஜராத்திலாவது மோடி வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவாரா என நெட்டிசன் ஒருவர் கேள்விக்கு மோடியின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனை கேளுங்கள், இல்லாவிட்டால் அவர் 2013 இல் பிசினஸ் ஸ்டான்டர்டில் எழுதிய கட்டுரையை கூகுளில் தேடி படியுங்கள் என தெரிவித்துள்ளார்.

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here