சென்ற வாரம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டக் கடல் பகுதிக்குக் கடல் வழியாக இரண்டு பிரெஞ்சு உளவாளிகள் வந்ததாக தெரிவித்தார். இந்த வீடியோவை சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள் கிழமையன்று (டிசம்பர் 3, 2018) பத்திரிகையாளர்களுக்குக் காண்பித்த தி ஹிந்து குழுமத்தின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம், “பிரான்சிலிருந்து வந்த இரண்டு பத்திரிகையாளர்களும் விமானம் மூலம் வந்தார்கள். தாது மணல் கொள்ளையைப் பற்றி எழுதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு பற்றி செய்தி சேகரிக்க வந்தவர்கள்” என்று தெரிவித்தார். முக்கியப் பொறுப்பிலிருக்கும் மத்திய அமைச்சர் மக்களிடையே பிளவை உருவாக்கும் வகையில் பொய்ச் செய்திகளைப் பரப்பக் கூடாது என்று ராம் கூறினார்.

ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் இயக்குனர் சசிகுமார், “இதேபோன்ற பொய்ச் செய்தியால்தான் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பாதிக்கப்பட்டார்; நீண்ட காலத்துக்குப் பின்னர்தான் உச்ச நீதிமன்றம் மூலம் அவருக்கு நீதி கிடைத்தது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

கன்னியாகுமரியில் இரண்டு தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதைப் பற்றிய ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் அறிக்கை இந்தச் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது; அதன் முழு விவரம்:

நவம்பர் 28, 29 ஆகிய தினங்களில் இரண்டு தமிழ்ப் பத்திரிகையாளர்களைக் கன்னியாகுமரி காவல் துறை சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தியதை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது. ஊடக சுதந்திரம் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினையில் கன்னியாகுமரி காவல் துறை பொய்யான தகவல்களை வழங்குவதையும் இந்தக் கூட்டணி கண்டிக்கிறது.

சென்னையைச் சேர்ந்த டி.ஆனந்தகுமார் (ஆனந்த்), எம்.ஸ்ரீராம் ஆகிய இரண்டு பத்திரிகையாளர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு புலனாய்வுச் செய்தியாளர்களுடன் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். நமது நட்பு நாடு ஒன்றிலிருந்து வந்த பத்திரிகையாளர்களுக்குத் தொழில் முறையில் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் சென்றிருக்கிறார்கள். பத்திரிகைத் தொழிலில் இந்த ஒத்துழைப்பு பொதுவான ஒன்றுதான்; இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பத்திரிகையாளர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

ஜூல் ஜிருடா, ஆர்த்யூர் புவா ஆகிய இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்களும் ”ஃப்ரீடம் வாய்ஸஸ் நெட்வொர்க்” என்கிற பத்திரிகையாளர் குழுவைச் சேர்ந்தவர்கள். சட்டவிரோத தாது மணல் கொள்ளையைப் பற்றி எழுதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு பற்றி அறிந்து எழுதுகிறவர்கள். தமிழ்ப் பத்திரிகையாளர்கள் ஆனந்தகுமாரும் ஸ்ரீராமும் இவர்களுக்குத் தொழில்முறை ஒத்துழைப்பை நல்கினார்கள். இந்தப் பத்திரிகையாளர்கள் குழுவைப் பற்றி நம்பகமான பின்புலம் கொண்ட கொலம்பியா ஜர்னலிஸம் ரிவியூவில் வெளிவந்த செய்தியை நீங்கள் இங்கே படிக்கலாம்.

நவம்பர் 26 ஆம் தேதி காலையில் மணவாளக்குறிச்சியிலுள்ள மத்திய அரசு நிறுவனமான அரிய வகை மணல் ஆலையின் அதிகாரி ஒருவரை பாதிரியார் கில்டாஸ் என்பவருடன் சென்று இரண்டு பிரஞ்சு பத்திரிகையாளர்களும் சந்தித்திருக்கிறார்கள். அங்குள்ள பாதுகாப்பு மேலாளர் ராஜேஷ் ராமன் நாயர் அளித்த புகாரின் பேரில் இரண்டு பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் மீதும் அவர்களை அழைத்துச் சென்ற பாதிரியார் கில்டாஸ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதன் உயர் பாதுகாப்புப் பகுதியில் படமெடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் இருவரும் அந்தப் பகுதிக்குச் செல்வது ஆனந்துக்கும் ஸ்ரீராமுக்கும் தெரியாது. அவர்கள் இருவரும் “தடை செய்யப்பட்ட” பகுதியில் படமெடுத்ததில் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் இரண்டு பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்தச் சமயத்தில் அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் இருந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

அன்று நண்பகல் 12.30 மணி அளவில்தான் பிரெஞ்சுப் பத்திரிகையாளர்களைக் கன்னியாகுமரி மாவட்டத்தின் இன்னொரு பகுதியில் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். பாதிரியார் சொன்ன பிறகுதான் அவரும் பிரெஞ்சு பத்திரிகையாளர்களும் அரிய வகை மணல் ஆலைக்குள் சென்ற விவரம் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வந்த தொடர் அழைப்புகள் மூலமாக தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதைத் தெரிந்த பின்னர்தான் அங்கிருந்து புறப்பட அவர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்று ஆனந்த் கூறுகிறார். பிரெஞ்சு பத்திரிகையாளர்கள் இருவரும் திருவனந்தபுரம், மும்பை வழியாக பிரான்சுக்குத் திரும்பிச் சென்றுள்ளார்கள். ஆனந்தும் ஸ்ரீராமும் நவம்பர் 27ஆம் தேதியன்று காலையில் சென்னைக்குத் திரும்பியுள்ளார்கள்.

கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் 27 ஆம் தேதியன்று ஆனந்தையும் ஸ்ரீராமையும் தொடர்பு கொண்டு மறுநாளே கன்னியாகுமரிக்கு வந்து என்ன நடந்தது என்று வாக்குமூலம் தந்துவிட்டு உடனே திரும்பி விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார் என்பதாக ஆனந்த் கூறுகிறார். அதன்படி இரண்டு பத்திரிகையாளர்களும் நவம்பர் 28 ஆம் தேதி காலையில் 11 மணிக்கு டி.எஸ்.பி பாஸ்கரனை அவரது அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார்கள்.

இரு பத்திரிகையாளர்களிடமும் பல மணி நேரமாக விசாரணை நடந்திருக்கிறது. அவர்களிடமிருந்த மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஹோட்டல் அறைக்கும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்கள்.

நவம்பர் 29ஆம் தேதியன்றும் அவர்கள் விசாரணைக்காக டி.எஸ்.பி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். அதே நாள் பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று சொல்லுகிற அழைப்பாணைகளில் கையெழுத்திடும்படி பணிக்கப்பட்டுள்ளார்கள். இந்தச் சட்டவிரோதக் காவல் பற்றி வழக்குரைஞரும் சக பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பிய பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சட்டவிரோதக் காவல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. 1997ஆம் வருடத்திய டி.கே.பாசு (எதிர்) மேற்கு வங்க அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அவசியம் கடைபிடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளை மீறுவதாக கன்னியாகுமரி காவல் துறையின் நடவடிக்கை அமைந்துள்ளது.

கன்னியாகுமரி காவல் துறைக்கு கீழ்க்கண்ட கேள்விகளை ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி முன்வைக்கிறது.
1.இந்த வழக்கில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அவர்கள் ஊடகங்களிடம் வெளியிட்டது ஏன்?
2.தமிழ்ப் பத்திரிகையாளர்கள் இருவரையும் அவர்கள் ஏன் இரண்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்தார்கள்?
3.இரண்டு நாட்கள் சட்டவிரோதக் காவலுக்குப் பின்னர் டி.எஸ்.பி அலுவலகத்துக்குள் வைத்து அழைப்பாணையை வழங்கியது ஏன்?
4.தாது மணல் கொள்ளையைப் பற்றி தாங்கள் விசாரிப்பதைப் பற்றி அரசின் பிற விசாரணை/புலனாய்வு நிறுவனங்களிடம் சொல்லக்கூடாது என்று கன்னியாகுமரி காவல் துறை பத்திரிகையாளர்களிடம் சொன்னது ஏன்?

பத்திரிகையாளர்களின் இந்தச் சட்டவிரோதக் காவல் பற்றிய விசாரணைக்கு தமிழக காவல் துறை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட வேண்டுமென்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி வேண்டுகோள் விடுக்கிறது.

இரண்டு பத்திரிகையாளர்களும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்பதில் ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி தெளிவாக இருக்கிறது.

பத்திரிகை சுதந்திரத்தை முழுமையாக பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி கோரிக்கை வைக்கிறது.

Our liberty is bound together: A Nudge and a bit of solidarity

Exclusive: The Raya Sarkar Interview

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here