பொய்யாக புனையப்படுகிறதா பயங்கரவாத முத்திரை?

0
320
மதுரையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பெற்றோர்.

தென்னிந்தியாவில் சில நீதிமன்றங்களில் நடந்த சிறிய குண்டுவெடிப்புகள் வழக்கில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் பெற்றோர் கண்ணீருடன் கூறினர். கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று தேசிய புலனாய்வு அமைப்பு (National Investigation Agency) அதிகாரிகளால் மதுரையைச் சேர்ந்த ஐந்து இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் பொய் வழக்கு போடப் பட்டுள்ளதாகவும் இதில் அவர்களுக்கு எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் கைதானவர்களின் பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர். இவ்வழக்கு பற்றி நேர்மையான நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய, மாநில அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் மைசூரு நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவம் உட்பட ஐந்து நீதிமன்றக் குண்டுவெடிப்புகள் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் அலி, கரீம் ராஜா, அயூப் அலி, சம்சுதீன் ஆகியோரும் மதுரையைச் சேர்ந்த பொறியாளர் தாவூத் சுலைமான் சென்னையிலும் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சென்னை மற்றும் மேலூர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் பெங்களூரிலுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் டிசம்பர் 1ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றக் காவலில் வைத்து ஐந்து பேரையும் என்ஐஏ போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இத்ரீஸ் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் பெற்றோரும் தங்கள் மகன்களுக்கும் இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறினார். சென்னையில் கைது செய்யப்பட்ட பொறியாளர் சுலைமானின் தந்தை சேக் அகமது அப்துல்லா கூறுகையில், சென்னையில் பணிபுரியும் சுலைமான் விடுமுறை நாட்களுக்கு மட்டுமே மதுரைக்கு வருபவர். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என பெங்களூரிலுள்ள தனது மருமகனிடம் தெரிவித்ததாகவும் அவர் இது தொடர்பாக எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்.

சம்சுதீன் தாயார் மகபூநிஷா பேசும்போது பைக் விபத்து குறித்து விசாரிக்க வந்திருப்பதாக கூறி வீட்டுக்கு வந்த போலீசார் சம்சுதீன் இல்லாததால் அவரது தம்பி நசீரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சம்சுதீன் விஷயம் அறிந்து நேரில் செல்லும்வரை போலீசார் நசீரைத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள கரீமிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்தான் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. ஆனால் என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில மாதங்களாகவே கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். என்.ஐ.ஏ கண்காணிப்பில் இருக்கும் ஒருவருக்கு எப்படி பாஸ்போர்ட் கிடைத்திருக்க முடியும். அதேபோல் மதுரை காவல் ஆணையருக்குத் தெரியாமல் என்ஐஏ கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். ஆனால் என்ஐஏ கைது செய்யும்போது போலீஸ் அதிகாரி ஒருவர் இருந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவர்கள் பயன்படுத்திய சாதனங்கள் அல்லது வேறு சில ஆவணங்கள் என்ன என்று இன்றுவரை நீதிமன்றத்திலோ, ஊடகத்திலோ என்ஐஏவால் தெரிவிக்கப்படவில்லை. இந்தக் கைது நடவடிக்கை ஒரு திசை திருப்பு நாடகம் என்றும் மக்கள் பணத் தட்டுப்பாடு காரணமாக மத்திய அரசின் மீது அதிருப்தி அடைவதை அறிந்து அவர்களைத் திசை திருப்ப செய்யப்பட்டதாக இத்ரீஸ் கூறினார். இந்த வழக்கில் முழுக்க முழுக்க விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் அதன் உண்மையினை அறிய தனி நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தொடரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்: எஸ்.டி.பி.ஐ கண்டனம்

இதையும் படியுங்கள்: பொய் வழக்கு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்