ஜெயலலிதா உருவப்படத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்பதை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளிக்க வேண்டும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், திங்கட்கிழமை (இன்று), மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இந்நிலையில் இது குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக இதனை அரசியலாக்குவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

modi-stalin

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”திமுக மட்டுமல்ல, காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, படத்தைத் திறந்து வைக்க வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்கள், மேதகு ஜனாதிபதி அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழக் ஆளுநர் அவர்கள் ஆகியோரை அணுகியும், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் படம் திறப்பது தவறு, எனவே வரமாட்டோம் என்று அத்துணை பேருமே சொன்ன பிறகுதான் அவசர அவசரமாக சபாநாயகர் மூலம் திறந்து இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில், மீன் வளத்துறை அமைச்சராக உள்ள ஜெயகுமார், சட்டமன்றத்தில் மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் படத்தைத் திறப்போம் என்று சொல்லி இருக்கிறார். அப்படியெனில், இன்று பிரதமரும், ஜனாதிபதியும் வரவில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.” என்றார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்