மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக முனையத்தை அமைக்கக் கூடாது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கன்னியாகுமரி மாவட்டத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் குளச்சலில் அமைக்க திட்டமிட்டு மீனவர்களின் எதிர்ப்பால் இணையம் பகுதிக்கு மாற்றப்பட்டது. அங்கும் கடும் எதிர்ப்பெழுந்த காரணத்தால் தற்போது கன்னியாகுமரியில் அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இப்போது கன்னியாகுமரி மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பறிப்போகும் என்ற காரணத்தால் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வாழ்வாதார பாதுகாப்பிற்கான மக்களின் போராட்டத்தை அயல்நாட்டு சதி என்றும், அயல்நாட்டு பண உதவி என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

தொடர்ந்து அழிவுத்திட்டங்களையும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்களையும் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இதனால் தமிழகம் குப்பைத்தொட்டியாக மாறி வருகின்றது. வளர்ச்சி என்ற பெயரில் அழிவுத்திட்டங்கள் கொண்டுவருவதை எல்லா மாநிலங்களிலும் மக்கள் எதிர்க்கிறார்கள். அப்படித்தான் கூடங்குளம் அணு உலை திட்டம் கேரளாவில் கொண்டு வரப்பட்டு கேரள மக்களின் எதிர்ப்பால் அது தமிழகத்தின் கூடங்குளத்திற்கு கொண்டுவரப்பட்டது. மக்களின் எதிர்ப்பை மீறி இப்போது அணு உலை பூங்காவாக மாற்றப்படுகிறது.

சமீபத்தில் கேரளாவில் அரசு மற்றும் மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிக்கு அருகே ஆயுத தளவாட சேமிப்பு கிடங்கு கொண்டுவரப்படும் என்ற தகவல் வந்துள்ளது. எனவே, மக்களின் எதிர்ப்பை மீறி அழிவுத்திட்டங்களை செயல்படுத்துவதும். அதனை மக்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் எதிர்க்கும் போது அந்நிய நாட்டு கைக்கூலிகள் மற்றும் அந்நிய நாட்டு பண உதவி என்றும் சொல்லி, அவதூறு குற்றச்சாட்டை முன்வைப்பதும் பொறுப்புள்ள ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழகல்ல. எனவே, இது போன்று குற்றச்சாட்டுகள் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பொன். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு சொல்லிக் கொள்வதோடு, மீனவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கன்னியாகுமரியில் சரக்குப் பெட்டக முனையத்தை அமைக்கக் கூடாது என்பதனை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி புயல் பேரிடரின் முதல் ஆவணம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்