(நவம்பர் 16, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

500 ரூபாயை மாத்த SBI பேங்குக்குப் போனேன். இப்பவே மணி மூணு ஆகுது, மூன்னரை மணிக்கெல்லாம் பேங்க மூடிருவாங்கன்னு சொல்லிட்டு ஓடியே போனேன்; அங்க போய் பாத்தா, அடக்கடவுளே…. என்னா கூட்டம். மொத்தம் ஆறு வரிசை எந்த வரிசைல நிக்குறதுன்னு தெரியாம அங்கயும் இங்கயுமா அலைஞ்சிகிட்டு இருக்குறத கவுனிச்ச செக்யூரிட்டி ‘என்ன சார் பணம் போடப் போறீங்களா? மாத்தப் போறீங்களான்னு?’ கேட்டாரு. ’’போடதுக்கெல்லாம் இல்ல; 500 ரூபாய மாத்தணும்னு” சொன்னேன். மாத்தணும்னா இங்க நில்லுங்க’’ன்னு ஒரு வரிசையக் காட்டினாரு; ’’அப்ப இந்த வருசையல்லாம் எதுக்குன்னு?” நான் கேட்டேன்.

’’அதெல்லாம் பணம் டெபாசிட் பண்றதுக்கு’’ன்னு சொன்னாரு, பணம் மாத்துறவுங்கள விட பணம் போடுறவங்கதான் அதிகமா இருக்குறாங்கன்னு நெனச்சிகிட்டே அவர் சொன்ன வரிசைல போய் நின்னேன். அனுமார் வால் மாதிரி ரொம்ப நீட்டமா இருந்துச்சு அந்த வரிசை. எனக்கு முன்னாடி நின்ன ஊதா கலர் சட்டை போட்ட அந்தப் பெரியவர்கிட்ட பேச்சுக் கொடுத்தேன். ’’ஐயா எவ்வளவு மாத்தப் போறீங்க’’
‘’ரொம்ப இல்லப்பா; 500 ருபாய்தான்; மாத்திரை வாங்கணும்; நான் சுகர் பேஷண்ட்; என்னால ரொம்ப நேரம் நிக்க முடியாது; எல்லாம் தலையெழுத்து’’ என்று நொந்துகொண்டார்.
”அதான் மெடிக்கல் ஸ்டோர்ல பழைய 500 ரூபாய வங்குறாங்களாமே”ன்னு நான் கேட்டேன்.
’’அட போப்பா. அவன் 500 ரூபாய்க்கும் மருந்து வாங்க சொல்லுவான். சில்லறை தர மாட்டான்’.’ ரொம்ப களைத்துப் போயிருந்த அந்தப் பெரியவர் கொஞ்ச நேரம் உக்காரகூட அங்க இடமில்லை.
’’என்னய்யா இது ஆயிரம் ரூபாய் அவசரமா தேவைன்னு இங்க வந்தா மணிக்கணக்குல நிக்க வய்க்குறானுக’’ எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டுருந்த வழுக்கைத் தலை நண்பர் இப்படிச் சொன்னார்.
”கள்ளப்பணத்தை ஒழிக்கணுமுன்னா இதல்லாம் நாம சகிச்சுதான் ஆகணும்’’ சைடுல எங்கேருந்தோ குரல் வந்துச்சு; ஆளு யாருன்னு தெரியல;
’’கள்ளப்பணம் வச்சிருக்கவனா கியூல நிக்குறான்?, ரஜினியும் கமலும் கியூல வந்து நின்னாதான பொதுமக்கள் கஷ்டம் தெரியும்; நாம என்ன கோயில்ல பிரசாதம் வாங்கவா இங்க நிக்குறோம், நம்ம பணத்த நாம செலவு பண்றதுக்கு இப்படி நாயா காத்துக்கெடக்கணுமா?’’ அந்த வழுக்கைத் தலை நண்பர் இப்படிச் சொன்னதும் அந்த இடம் கொஞ்சநேரத்துக்கு அமைதியாக இருந்தது, பின்னாடி திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னாடி பத்துபேர் நின்றுகொண்டிருந்தார்கள்.

எனக்குத் தொட்டு பின்னாடி போத்தீஸ்க்கு முன்னாடி பூ விக்குற அந்த அக்கா நின்னுகிட்டு இருந்தாங்க. அவங்க ரொம்ப சோகமா நின்னுக்கிட்டு இருந்தாங்க. மெல்ல அவங்ககிட்ட பேச்சுக் கொடுத்தேன்.
’’எவ்வுளவுக்கா மாத்த போறீங்க?’’
’’ரெண்டாயிரம் ரூபாய் ப்பா; என் பொண்ணு பிரசவம் முடிஞ்சி அவ மாமியார் வீட்டுக்குப் போகுது, ரெண்டுநாளைக்கு முன்னாடியே அவ போக வேண்டியது, கையில இருக்குற காசை செலவு பண்ண முடியாம போயிட்டு. நேத்தைக்கு வந்தேன். 4000 ரூபாத்தான் மாத்தமுடியும்னு சொல்லிட்டாங்க. அங்க இங்க கடன் வாங்கி சாமன்லாம் வாங்கிட்டேன். அவ கைல ரெண்டாயிரம் குடுத்து விடணும். அதான் இப்ப வந்துருக்கேன்’’ அந்த அக்கா சொல்லி முடித்தபோதே மன வருத்தம் தெரிஞ்சிது. அந்த அக்காவை எனக்கு முன்னாடி நிக்கச்சொல்லிவிட்டு அவங்களுக்குப் பின்னாடி நான் நின்னுகிட்டேன்.
’’சார் இதுக்கு மேல யாரும் நிக்கவேண்டாம்; பேங்க் டையம் முடிஞ்சு போச்சு” கடைசியா நின்னவர்கிட்ட செக்யூரிட்டி சொன்னார்.

வரிசை கொஞ்ச கொஞ்சமா நகுந்துச்சு. எங்கேருந்தோ ஓடிவந்த லுங்கி கட்டிய ஒரு பெரியவர் வரிசையின் பின்னாடி வந்து நின்னாரு.
”அய்யா பெரியவரே பேங்க் டயம் முடிஞ்சு போச்சு நாளைக்கு வாங்க‘’ செக்யூரிட்டி பெரியவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘’சார், வேலை முடிஞ்சிவறதுக்கு கொஞ்சம் லேட் ஆயிட்டு; பணம் அவசரமா வேணும் சார்’’ அந்தப் பெரியவர் கெஞ்சிக்கொண்டிருந்தார். ‘’அதெல்லாம் முடியாது; நாளைக்கு வாருங்கள்’’ன்னு சொல்லிட்டு எங்களை மட்டும் உள்ளே தள்ளிவிட்டுக் கேட்டை மூடிவிட்டார்.

பேங்கு உள்ள போனதும் கொஞ்ச நேரத்தில பணம் மாத்தக்கூடிய மேசை அருகே நான் வந்துவிட்டேன். எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டிருந்த பூக்கார அக்கா பணம் மாத்துறதுக்கு குடுத்த அடயாள அட்டையில நேத்தைக்கு 4000 ரூபாய் எடுத்ததனால, இன்னைக்கு அந்த அடையாள அட்டை செல்லாது என்று பேங்க் ஊழியர் பணம் தர முடியாதுன்னு சொல்லிட்டாரு. நா அவருகிட்ட போய் என்ன காரணம்னு கேட்டேன். அதுக்கு அவர் ’’ஒரு IDயில ஒரு தடவைதான் பரிவர்த்தனை செய்ய முடியும். அது 4000 ஆயிரமாக இருந்தாலும் சரி, 500 ரூபாயாக இருந்தாலும் சரி, ரெண்டாவது தடவை அதே ID யை சிஸ்டம் ஏத்துக்காது என்றார். உடனே நான் அந்த அக்காவிடம் இருந்த 2000 ரூபாய வாங்கி என்னோட IDல போட்டு மாத்திக் கொடுத்துட்டேன். அரை மணி நேர பர்மிசனில் வந்த எனக்கு 500 ரூபாய மாத்துறதுக்கு ரெண்டுமணி நேரம் ஆயிடுச்சு. பேங்க் வெளியில வந்தா அந்த லுங்கி கட்டிய பெரியவர் அங்கேயே நின்னுகிட்டு பாட்டு பாடிகிட்டு இருந்தார்.
”பொன்னான பாரதம்.. புத்திகெட்டு போச்சுது… சொன்னானே பாரதி சொன்னதென்ன ஆச்சுது… எல்லாரும் இந்நாட்டு மன்னரில்லே… மன்னரில்லே
எல்லாருமே திருடங்கதான்…. சொல்லப்போனா குருடங்கதான்…. நம்ம நாட்டிலே‘’ அந்தப் பெரியவர் பாடுனத எல்லாரும் வேடிக்கை பாத்துகிட்டு இருந்தாங்க… எனக்கு நேரமில்ல. நான் ஆபிஸுக்கு ஓடியே வந்துட்டேன்.

முத்துமாரி அந்தப் படுபாவிய சும்மா விட மாட்டா….

மாவோவின் சிட்டுக்குருவி ஒழிப்பும் மோடியின் 500, 1000 ரூபாய் ஒழிப்பும்

#செல்லாநோட்டு யார் யாரைச் சின்னாபின்னப்படுத்தியது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here