பொதுத்துறை வங்கிகளின் தலைமைச் செயலதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 14-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில் தொழில் துறைகளை மேம்படுத்த கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மற்றும் சிறு குறு நடுத்தரத் தொழில் துறையை மேம்படுத்த கடன் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி நாடு முழுவதும் முதற்கட்டமாக 250 மாவட்டங்களில் அக்டோபர் 3 முதல் 4 நாட்கள் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட கடன் வழங்கும் திட்டம் அக்டோபர் 21-ஆம் தேதி செயல்படுத்தப்படவுள்ளது.  அந்தத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கபடவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வீட்டு வசதிக் கடன் நிறுவனங்கள் உள்ளிட்ட வங்கி சார்பற்ற நிதி நிறுவனங்கள் பல்வேறு நிதிச் சிக்கல்களால் அழுத்தத்துக்குள்ளாயின.

இந்நிலையில் வங்கி சார்பற்ற நிதி நிறுவனங்களின் தொகுக்கப்பட்ட சொத்துக்களை பொதுத்துறை வங்கிகள் வாங்க வகை செய்யும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பகுதி உத்தரவாத கடன் திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அது தொடர்பாகவும், வங்கிகளின் மூலதனத்தை மேம்படுத்த சந்தையில் இருந்து நிதி திரட்டுதல் உள்ளிட்டவை குறித்தும் வங்கிகள் அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.