ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் பொங்கல் பரிசுப் பொருட்கள் மற்றும் ரூ.1000 ரொக்கப் பணத்தைப் பெற இன்று அதிகாலை முதல் மக்கள் ரேஷன் கடைகளின் முன் கூடத் தொடங்கினர்.

இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பும், ரொக்கப் பணம் ரூ.1000மும் வழங்கும் பணி தொடங்குகிறது. இதையடுத்து முதல் நாளிலேயே ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற ஏராளமான மக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்றனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியன பொங்கல் பரிசுத் தொகுப்பில் அடங்கும். இந்த பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.258 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் திட்டத்தை முதல்வர் தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை தொடங்கி வைத்ததை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை துவக்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று(திங்கள்கிழமை) முதல் நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கும் பணி தொடங்கியது.

இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆயிரம் ரூபாய் பணம், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றை மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பிறகே வழங்க வேண்டும். குடும்ப அட்டையில் பெயர் இல்லாதோர், அவர்களது குடும்பத்தில் பெயர் இருக்கும் நபரின் ஆதார் அட்டையைக் காண்பித்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் அடிப்படையிலோ பரிசுத் தொகுப்பு வழங்கலாம். ஆயிரம் ரூபாயை வெளிப்படையாக வழங்க வேண்டும். வயதானோர், மாற்றுத் திறனாளிகளை நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் அளிக்க வேண்டும் என்று வழிகாட்டி நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here