பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என அரசு விடுமுறை தினங்கள் வருகின்றன.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை), பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையிலான 4 நாட்கள் சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 20 ஆயிரத்து 165 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 24 ஆயிரத்து 708 பஸ்கள் இயக்க போக்குவரத்து நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

கடந்த ஆண்டு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 4 ஆயிரத்து 275 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர். ஒட்டுமொத்தமாக 4 லட்சத்து 92 ஆயிரத்து 220 பேர் சிறப்பு பஸ்களில் பயணம் செய்து இருக்கின்றனர்.

இந்த வருடம் 6 லட்சம் பேர் பயணிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.

பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம். சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருகிற 2 ஆம் தேதி நடக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் ஜனவரி 9-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும், ஓசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லக்கூடிய பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்தும், திண்டிவனம், சிதம்பரம், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் தாம்பரம் மெப்ஸ் பேரறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும், ஈ.சி.ஆர். (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக செல்லும் பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்தும் புறப்பட்டு செல்லும்.

திருவண்ணாமலை மார்க்கத்தில் செல்லும் பஸ்கள் தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து (ரெயில் நிலையம் முன்பு) வழக்கம்போல புறப்படும். மேலும் கோயம்பேட்டில் இருந்தும் திருவண்ணாமலை மார்க்கத்தில் பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர வெளியூர் பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்