ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 750 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை (ஜன.4) முதல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஏழாவது நாளாக புதன்கிழமை (இன்றும்) தொடர்கிறது. இப்போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் புதன்கிழமை (இன்று) 110வது விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 750 கோடி ரூபாய் நிலுவைத் தொகை பொங்கலுக்கு முன் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அவர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்