தலைவர் ரஜினிக்கு ரசிகனின் லவ் லட்டர்தான் இந்த படம் என்று பேட்ட பற்றி கார்த்திக் சுப்பாராஜ் கூறியிருந்தார். அந்தளவு ரஜினி ரசிகர் அவர். படம் பார்க்கையில் அதன் அர்த்தம் புரிகிறது.

ஊட்டியில் உள்ள கல்லூரி ஹாஸ்டல் வார்டன் போஸ்டுக்கு ஹெவி ரெகமன்டேஷனில் வருகிறார் காளி (ரஜினி). அப்படி வரும்போதே, அவரது நோக்கம் வேறு என்பது தெரிகிறது. ஹாஸ்டலில் அடாவடி செய்யும் மாணவர்களை அடக்கி, ஒரு காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுத்து, மொத்த கல்லூரியையும் தனது கன்ட்ரோலுக்குள் காளி வைத்திருக்கையில் பெரும் பகையொன்று உள்ளே வருகிறது. இதுக்குத்தாண்டா காத்திருந்தேன் என்று காளி பொங்கியெழுகிறார். அது என்ன பகை, எப்படி முளைத்தது, அது இப்போது எங்கு வேர் கொண்டு நிற்கிறது என்பதை பேட்ட சொல்கிறது.

பேட்ட ரஜினிக்காக ரஜினியை வைத்து ரஜினி ரசிகரால் எடுக்கப்பட்ட படம். காளியாக என்ட்ரியாவதிலிருந்து ஒவ் வொ ரு காட்சியிலும் மேனரிஸத்தால், குரல் மாடுலேஷனால் ஈர்க்கிறார் ரஜினி. முதலமைச்சருக்கு சவால்விட்டு பத்தே நாளில் ஆட்சியைப் பிடிக்கும் சூப்பர் ஹீரோயிசமில்லாமல், ஹாஸ்டல் சட்டம்பி மாணவர்களை அடக்கும் சாதாரண ஹீரோயிஸம் என்பதால் பொது ஆடியன்ஸாலும் ஒட்ட முடிவது பேட்டயின் பலம். ஆடுகளம் நரேனின் ஆள்களை அடித்து துவைத்துவிட்டு அவரது வீட்டிற்கே வந்து சலம்பல் விடுவது, எதிரிகளை எதிர்பார்த்து ஹாஸ்டல் முற்றத்தில் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடலுடன் காத்திருப்பது, எதுவா இருந்தாலும் அஞ்சு நிமிஷம் பிடிச்ச பாடலுக்கு ஆட்டம் போட்டுட்டு யோசிக்கணும் என்று சிம்ரனுக்கு ஃப்ரெஷ்னெஸ் தெரபி சொல்வது என ஆக்ஷன், பில்டப், ரொமான்ஸ் என அனைத்து ஏரியாக்களிலும் ஆடித்து ஆடியிருக்கிறார். அவரது ஸ்டைலை சரியான மீட்டருக்குள் நிறுத்தி தானொரு ரசிகன் மட்டுமில்லை, நல்ல இயக்குநரும்கூட என்பதை கார்த்திக் சுப்பாராஜ் நிரூபித்திருக்கிறார்.

ரஜினிதான் எல்லாம் என்றான பின் மற்றவர்களுக்கு கௌரவ வேடம்தான். அதில் நடிகர்களுக்கு நாலு வசனம், மூன்று நான்கு காட்சிகள் என்று கொஞ்சம் கௌரவமான கௌரவ வேடம். நடிகைகளுக்கு? ஐயோ பாவம். அதிலும் த்ரிஷா அவுட் ஆஃப் போகஸில் வருவதே தெரிவதில்லை. அதேபோல்தான் சசிகுமாரும். இவர்களுடன் ஒப்பிடுகையில் முண்டாசுபட்டி முனிஸ்காந்த் ராம்தாஸுக்கு நல்ல வேடம்.

ஹாஸ்டலை மையப்படுத்திய முதல்பாதியில் படம் பறக்கிறது. இரண்டாவது பாதியில் வரும் மதுரை பிளாஷ்பேக், உத்திரப்பிரதேச காட்சிகள் ஒப்பீட்டளவில் சுவாரஸியம் குறைவு. மனைவி, குழந்தை என்று குடும்பஸ்தனாக இருக்கும் பேட்ட வேலன் (அதே ரஜினி) பொது இடத்தில், அவனை போட்ரலாமா, போடணும்னு நினைச்சா உடனே போடணும் என்று நண்பன், மனைவியிடம் கொலை செய்ய அனுமதி கேட்பதும், ஏதோ குச்சி ஐஸ் வாங்குவது போல் பட்டென்று கொலை செய்வதும், ஹீரோயிசம் என்று நினைத்திருந்தால் ஸாரி, குரூரத்தனம். இப்படி கொலை செய்தால் பதிலுக்கு குண்டு வைத்து பொண்டாட்டி பிள்ளையை கொலை செய்யாமல் தாலாட்டவா செய்வார்கள்?

படத்தின் டெம்போ குறையாமல் பாடல், பின்னணி இசையில் ரசிகனை ஆட வைத்திருக்கிறார் அனிருத். பேட்டயின் பலமான தூண் இவர். மற்ற இருவர் ஒப்பனை கலைஞர்களும், காஸ்ட்யூம் டிஸைனரும். ரஜினி மட்டுமின்றி அனைத்து நடிகர்களின் காஸ்ட்யூமும் சிறப்பு. ரஜினியை அவரது வயோதிகம் தெரியாமல் காட்டியதில் மேக்கப் கலைஞர்களின் பங்கும், காளியின் தாடியும் முக்கிய பங்கு வகிக்கிறது. தாடியில்லாமல் கடா மீசையில் வரும் பிளாஷ்பேக் காட்சியில்தான் தாடியின் பங்களிப்பு எத்தனை மகத்தானது என்பதை கண்டு கொள்கிறோம். மாஸ் காட்சிகளை இன்னும் பிரமாண்டப்படுத்தி காட்டுகிறது திருநாவுக்கரசின் கேமரா. பெரும்பாலும் இரவுக்காட்சிகள். அசத்தியிருக்கிறார். உறுத்தாத எடிட்டிங்.

கிடைத்த கேப்பில் கிடா வெட்டுவதில் விஜய் சேதுபதி வல்லவர். என்றாலும் பேட்டயில் அவரது சேட்டை குறைவு. ஒரு லாரி ஆள்களுடன் வந்து ரஜினியையும், அவரது ஆள்களையும் விஜய் சேதுபதி சுட, பதிலுக்கு அவர்கள் சுட, கடைசியில் அதிகார பலமிக்க நாவாசுதின் சித்திக்கின் வீட்டை குண்டு வைத்து தகர்த்து, துப்பாக்கியால் சுட்டு, குட்டியாக அங்கேயும் ஒரு டான்ஸ் போட்டு, மலிவுவிலை மசாலாவாக படம் என்டுக்கு வந்தும் ஒரு போலீஸ் என்ட்ரி இல்லை (லாஜிக்கை கதை எழுதும் போதே சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்). இரண்டாவது பாதியில் கடைசி ட்விஸ்ட் தவிர்த்து ஒரே டமால் டுமீல். நவாசுதின் சித்திக் நடிப்பில் அடித்து ஆடுகிறவர் என்றாலும் கிரவுண்ட் இருந்தால்தானே ஆடுவதற்கு? வடக்கே உள்ள காவிகளின் காதலுக்கு எதிரான வன்முறையையும், மாட்டு அரசியலையும் வில்லனின் அடையாளமாக காட்டியதற்கும், போகிற போக்கில் ஆன்டி இன்டியன் கமெண்டுக்கு ஒரு குத்து விட்டதற்கும் ஒரு பூங்கொத்து.

ஸ்பீல்பொக்கின் சேவிங் பிரைவெட் ரேயானில் எதிரிகளுக்காக ராணுவ வீரர்கள் காத்திருக்கும் மயான அமைதியில் மென்மையாக பாடல் ஒலிக்க, எதிரிகளின் டாங்கிகளின் ஓசை மெல்ல அதனை மேலெழுந்துவரும். அது இயக்குநருக்குப் பிடித்த காட்சி போல. ஹாஸ்டல் முற்றத்தில் பாசமலர் பாடலை ஓடவிட்டு ரஜினி காத்திருக்கும் காட்சியில் அப்படியே அதனை பிரதி செய்திருக்கிறார். கார்த்திக் சுப்பாராஜ் நியூ ஜெனரேஷன் இயக்குநர் என்பதால் சென்டிமெண்ட் ஏரியாவை கொஞ்சம் வீக்காகவே கையாண்டிருக்கிறார். குடும்ப ஆடியன்ஸ் பேட்டக்கு குறைவாக இருந்தால் இதுவே காரணமாக இருக்கும். மொத்தத்தில் கபாலி, காலா, 2.0 என காய்ந்து போன ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் மெகா ட்ரீட்.

பேட்ட – ஒன் மேன் ஷோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here