”பேசுங்கள்; நம்பிக்கை கொடுங்கள்”: உண்மைக் கதைகள்

தற்கொலை இல்லா தமிழகம் படைப்போம்: ராஜாவைக் கேளுங்கள்

0
227

கேள்வி: திருப்புகழூரில் இறந்துபோன விவசாயி கண்ணனுக்கு மூன்று குழந்தைகள். அவருக்கு மனைவி இல்லை. அதில், ஒரு குழந்தை சிறுமி. மூத்த மகனுக்கு வெறும் 17 வயது மட்டுமே. இளைய மகனுக்கு 15 வயது. அவனும் அவன் உறவினர் வீட்டில்தான் வளர்கிறான். மகளுக்கு 5 வயதுதான் ஆகிறது. தற்போது இவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு கண்ணனின் தந்தையைச் சார்ந்துள்ளது. அவரோ 70 வயதானவர். உறவினர்களையும் நீண்ட நாள் எதிர்பார்க்க முடியாது. இதுபோன்ற இக்கட்டான சமயத்தில் எவ்வாறு அந்த முதியவர் செயல்பட வேண்டும்? விவரம் ஏதும் அறியாத அந்த சிறு குழந்தைகளுக்கு எப்படி உணர்த்த வேண்டும்? அவர்களை எவ்வாறு நடத்த வேண்டும்? மற்ற குழந்தைகள் பெற்றோருடன் இருக்கும்பொழுது இந்தக் குழந்தைகளுக்கு அந்தக் கவலை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? இந்தச் சூழலிலுள்ள குழந்தைகளின் கல்வியை எவ்வாறு நல்ல நிலைக்கு மேற்கொண்டு செல்வது?
ரஞ்சிதம், நாகப்பட்டினம்

டாக்டர் என்.ரங்கராஜனின் பதில்:

வயதான பெரியவருக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்திருக்கிறது; தன்னை யாராவது கவனிக்க வேண்டிய நேரத்தில் அவர் யாரையோ கவனிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இது பெரிய கஷ்டம்தான்; இப்போதைய சூழலில் இந்த மூன்று பசங்களுக்கும் வேற பெரிய ஆதரவுன்னு எதுவும் இல்லை; இந்தக் குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கொடுக்க முடியும்கிற கவலை பெரியவருக்கு இருக்கும்; குழந்தைகளுக்கும் அப்படிப்பட்ட கவலை இருக்கலாம்; பசங்கள கோபத்தோட, கடுமையா “என்னால இவ்வளவுதான் முடியும்” என்பதுபோல நடத்தினால், அவங்க எதிர்த்துப் பேசலாம்; அதற்கு இவர் எதுவும் செய்ய முடியாமல் போகலாம்; இதற்கு மாறாக அப்பா, அம்மா இல்லாத பிள்ளைங்கன்னு அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்தார்ன்னா, எல்லாத்துக்குமே இடம் கொடுத்தார்ன்னா அவங்க கட்டுப்பாடு இல்லாம வளர்வாங்க; எனவே, அதிகமா செல்லம் கொடுப்பதும் கூடாது; இல்ல, தப்பாப் போயிருவாங்க, தப்பாப் போயிருவாங்கன்னு கரிச்சுக்கொட்டி கண்டிப்பாகவே இருப்பதும் கூடாது.

பெரிய பையன் 17 வயதானவர்; படிக்கிறார்ன்னா அவரது தேவை என்ன, புத்தகம் வேணுமா, போதுமான ஊட்டச்சத்து கிடைக்குதா, படிப்பில் உதவி தேவைப்படுதான்னு பார்க்கணும்; முதல்ல, என்ன இவரால கொடுக்க முடியுதோ அதைப் பையனின் படிப்புக்குக் கொடுக்கணும். இதேதான் 15 வயசுப் பையனுக்கும்; ஐந்து வயதான பெண் குழந்தையின் தேவை மிகவும் வித்தியாசமானது; இரண்டு பையன்களும் வளர் இளம் பருவத்தினர்; அவர்களின் தேவை வேறு; எந்த விஷயத்துக்குக் கண்டிப்பாக இருக்கணும், எந்த விஷயத்தில விட்டுக்கொடுத்து செய்யணும்கிறதுல தெளிவா இருக்கணும்; ஐந்து வயசான பெண்ணுக்கு பெருசா உலகத்தைப் பத்தித் தெரியாது; அம்மா இல்ல, அப்பா இல்லங்கிற ஏக்கம் அந்தக் குழந்தையோட மனசில பயங்கரமா இருக்கலாம்; இந்த ஏக்கத்தைப் போக்குற பொறுப்பு தாத்தாவுக்கு மட்டுமில்ல; இரண்டு அண்ணன்களும் சேர்ந்து இந்தப் பொறுப்ப எடுத்துக்கணும்; இந்த இரண்டு பையன்களும் தங்கச்சிக்கு உண்டான ஆதரவக் கொடுத்து, தட்டிக்கொடுத்து “நம்மல்லாம் இருக்கோம்; நம்ம நாலு பேரும் சேந்துதான் இந்தக் குடும்பம்; நம்ம ஒருத்தரையொருத்தர் கவனிச்சுக்கலாம்”கிற தைரியத்தக் கொடுக்கணும். 17, 15 வயசு பையன்களுக்குக் கொடுக்கிற அளவைவிட இவளுக்கு கொஞ்சம் அதிகமாக செல்லம் தரலாம்; ஆனால் ஒரே பொண்ணுன்னு ஒரேயடியா செல்லம் கொடுத்தாலும் நல்லதில்ல; அதே சமயம் வீட்டில இருக்கிற ஒரே பொண்ணுன்னு அவள வேலைக்காரியாக்கிற ஆபத்தும் இருக்கு; அப்படியும் நடந்திடக்கூடாது; ”உனக்கு அம்மா கிடையாது; அப்பா கிடையாது; நீதான் வீட்டைப் பாத்துக்கணும்”ன்னு சொல்றது நல்லதில்லை.

பெரியவர் தன்னோட பொருளாதார நிலையைப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கணும்; அதுக்கேத்தபடி திட்டமிடணும்; இரண்டு பெரிய பையன்களுக்கும் “இதுதான் நம்முடைய பொருளாதார நிலைமை; எவ்வளவுதான் ஆசை இருந்தாலும் இப்ப இப்படித்தான் திட்டம் போட்டு செய்ய முடியும்னு” தெளிவுபடுத்தணும்; கஷ்டப்பட்டு படிச்சு, அதுக்கு மேல உழைச்சு பொருளாதார நிலைமையை மெல்ல மெல்ல மேம்படுத்தணும்கிற பொறுப்புணர்வைக் கொஞ்சம் கொஞ்சமா கொண்டு வரணும்; இதுக்காக நிறைய ஊக்கம் கொடுக்கணும்; பெற்றோர்கள் இல்லைங்கிற ஏக்கம் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கத்தான் செய்யும்; அதற்கு யாரும் எதுவும் ஈடு செய்ய முடியாது; பெற்றோர்கள் இல்லாத குறைக்கு ஆதரவா இருக்க முடியுமே ஒழிய பெற்றோர்களுக்குப் பதிலாக இருக்க முடியாது. குடும்பத்திலிருக்கிற வேறு யாராவது இவர்களுடைய கல்வியையோ, பிற தேவைகளையோ பொறுப்பெடுத்தால் நன்றாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: தற்கொலை இல்லா தமிழகம் படைப்போம்: ராஜாவைக் கேளுங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்