சசிகுமார் நடித்துவரும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரியாரின் படமும் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளது.

சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் அப்படியே இல்லாவிடினும் ஓரளவேனும் திரைப்படங்களில் பிரதிபலிக்கவே செய்கிறது. மோடியின் பாஜக ஆட்சியில் மத அடிப்படைவாதிகள் செய்யும் அடாவடிகள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இடம்பெறுகின்றன. ரஜினியின் காலா படத்தின் வில்லன் கிளீன் இந்தியா போன்ற திட்டத்தை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு மத அடிப்படைவாதி. பேட்ட படத்தின் வில்லன் மாட்டு அரசியல் செய்யும், காதலர்களை அடித்து உதைக்கும் ஒரு மத அடிப்படைவாதி.

ஒருபுறம் காவியின் அராஜகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, மறுபுறம் கருப்புச்சட்டையின் எழுச்சியும் ஓங்கி ஒலிக்கிறது. எஸ்டிஆர் சமீபத்தில் பெரியார் குத்து என்ற பாடலை வெளியிட்டார். பெரியாரை பெயரளவில் தெரிந்து வைத்திருப்பவர் எழுதியது போலிருந்தாலும், அந்தப் பாடல் ஒரு முக்கியமான செயல்பாடு. அதன் தொடர்ச்சியை கொம்புவச்ச சிங்கம்டா பர்ஸ்ட் லுக்கில் பார்க்க முடிந்தது.

சசிகுமார் கருப்புச்சட்டை. கருப்புக்கரை வேட்டியுடன் நிற்க, பின்னணியில் பெரிய அளவில் பெரியார் படம் இடம்பெற்றுள்ளது. படத்தின் நாயகனை இத்தனை வெளிப்படையாக திக அடையாளத்துடன் காட்டிய வேறு படங்களில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் (விக்ரம் பிரபு நடித்தது) படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தர் குமார் தயாரிப்பு.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் பெரிய எதிர்பார்ப்பை படம் உருவாக்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here