பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணிரத்னம் ரூ. 10 கோடி உதவி

0
272

இயக்குநர் மணிரத்னம் ரூ. 10 கோடியை பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் ஆர். கே. செல்வமணி கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர்களும் இயக்குநர்களும் ஒன்றிணைந்து நவரசா என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். பிரபல இயக்குநர் மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயாரித்துள்ள இப்படத்தை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள். 9 உணர்வுகளையும் 9 கதைகளையும் கொண்ட இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன், ஹலிதா, பிஜாய் நம்பியார். அரவிந்த் சாமி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த் சாமி, சித்தார்த், அசோக் செல்வன், ரேவதி, நித்யா மேனன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்வதி, ரித்விகா உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகைகள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான், இமான், ஜிப்ரான், கோவிந்த் வசந்தா போன்ற பிரபல இசையமைப்பாளர்களும் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பிரபல ஒளிப்பதிவாளர்களும் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

நவரசா படத்தைத் தயாரித்து அதிலிருந்து கிடைத்த வருமானத்திலிருந்து ரூ. 10 கோடியை பெப்சி தொழிலாளர்களுக்கு இயக்குநர் மணி ரத்னம் வழங்கியுள்ளதாக பெப்சி திரைப்படத் தொழிலாளர்கள் அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி இன்று கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:

பிரபலக் கலைஞர்கள் நடித்த ஒரு படத்தை மணி ரத்னமும் ஜெயேந்திராவும் தயார் செய்துள்ளார்கள். அதில் ரூ. 10 கோடியை நிதியாகப் பெற்று, எங்கள் (பெப்சி) உறுப்பினர்கள் 10,000 பேருக்கு வங்கி மூலமாக மாதம் ரூ. 1500 வீதம் 6 மாதங்களுக்குக் கொடுக்கிறார்கள். அந்தத் தொகையிலிருந்து உணவுப் பொருள்கள் மட்டுமே வாங்கவேண்டும். வேறு எதுவும் வாங்கக்கூடாது, இது மிகப்பெரிய உதவி. இதேபோல மற்ற கலைஞர்களும் செய்தால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியும். மணி ரத்னம் ரூ. 10 கோடி வழங்கியது போல மற்ற கலைஞர்களும் வழங்கினால் மற்றவர்களிடம் நாம் கையேந்த வேண்டியதில்லை.

சூர்யா போன்ற பிரபலங்களை வைத்து ஜெயேந்திராவுடன் இணைந்து ஓடிடி தளத்துக்கு ஒரு படம் தயாரித்துள்ளார் மணி ரத்னம். பூமிகா தொண்டு நிறுவனம் மூலமாக அந்தத் தொகையை எங்களுக்கு அளித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here