பெண் புரோக்கர்களின் வலையில் சிக்கி மன்மத மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தூண்டிற் புழுக்களான கல்லூரிப் பெண்கள்

0
705

மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மூலமாக இதுவரையில் 12 அரசு உயரதிகாரிகள் மற்றும் 8 முன்னாள் அமைச்சர்கள் வரை காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளனர். ஹனிட்ராப் ஸ்கேண்டல் என்று சொல்லப்படக்கூடிய செக்ஸ் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இவர்களின் மீது காவல்துறையின் கண்காணிப்பு வளையம் தற்போது இறுகியுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இளம்பெண்களை கட்டாயப்படுத்தி சப்ளை செய்த குற்றத்தை செக்ஸ் புரோக்கரான ஸ்வேதா ஜெயின் எனும் பெண் காவல்துறை விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்வேதாவின் தேடுபொறியில் ஏழைப்பெண்கள் முதல் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் வரை பலர் இருந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

செக்ஸ் ராக்கெட்டில் ஈடுபடுத்த விரும்பிய இளம்பெண்களை முதலில் ஸ்வேதாவும் அவருடைய உதவியாளரான ஆர்த்தி தயாள் எனும் பெண்ணும் இணைந்து சென்று தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு முன்பு அந்தப் பெண்களின் குடும்பச் சூழல், அவர்கள் தங்களது நிபந்தனைக்கு உட்படுவார்களா? என்பதையெல்லாம் ஸ்வேதாவும், ஆர்த்தியும் கணித்து விடுவார்கள். பிறகு தாங்கள் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமாக சம்மந்தப்பட்ட பெண்களின் உயர் கல்வி மற்றும் வருமானம் தரும் தொழில்வாய்ப்புகளுக்கு உதவி பெற்றுத்தருவதாக உறுதிமொழி அளித்து அவர்களை மூளைச்சலவை செய்து தங்களது பொறியில் விழச் செய்வார்கள். அந்த இளம்பெண்களும் தங்களது லட்சியங்களை அடைய இவர்கள் உதவுவார்கள் என்றெண்ணி இவர்களது வலையில் தாங்களாக விரும்பி வந்து மாட்டிக் கொள்வார்கள்.

இப்படித்தான் இளம்பெண்கள் ஸ்வேதா மற்றும் ஆர்த்தியிடம் சிக்கி இருக்கிறார்கள். அப்படிச் சிக்கிய இளம்பெண்களை வைத்து ஸ்வேதா மிகப்பெரிய திட்டம் தீட்டியிருக்கிறார். அரசின் முக்கியமான டெண்டர்கள், காண்ட்ராக்டுகள் உள்ளிட்டவற்றை பெரிய நிறுவனங்களுக்குப் பெற்றுத்தர இவர்கள் தரகு வேலை பார்த்திருக்கிறார்கள். அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத்தர சம்மந்தப்பட்ட அரசு உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சரிக்கட்ட தங்கள் வசமிருக்கும் இளம்பெண்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் இவர்கள். 


பெண்களைச் சம்மதிக்க வைக்க தங்களிடமிருந்த ஆடம்பர ஆடி கார், ஐந்து நட்சத்திர விடுதி வாசம், எனப் பணத்தை தாராளமாக வாரி விட்டிருக்கிறார்கள். ஆடம்பரமான இந்தப் புதுவித கலாசாரத்திற்கு முதன்முறை பழகிப்போன இளம்பெண்களை மூளைச்சலவை செய்து தரக்குறைவான தங்களது அடுத்தடுத்த இலக்குகளை அடைய ஸ்வேதாவும், ஆர்த்தியும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்களின் காரிய பலிதம் எதுவரை செல்லுபடியாகியிருக்கிறது என்று தெரிந்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கக் கூடும். ஆம், ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகளுக்கு பணி மாறுதல் பெற்றுத் தருவது, போஸ்டிங் பெற்றுத்தருவது எனப் பல வகைகளில் இவர்கள் லாபி செய்து பணம் ஈட்டியிருக்கிறார்கள். அப்படிச் சம்பாதித்த பணம் அத்தனைக்கும் இவர்கள் மூலதனமாகப் பயன்படுத்தியது அப்பாவி நடுத்தர வர்க்கத்து இளம்பெண்களைத்தான். அவர்களை ஆடம்பர வாழ்வுக்குப் பழக்கப்படுத்தி மூளைச்சலவை செய்து அவர்களை விட வயதான கிட்டத்தட்ட அந்தப் பெண்களின் தகப்பன் வயதுள்ள வயதான அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மந்திரிகளுடன் தங்க வைத்து இரவுகளைக் கழிக்க வைத்து அவர்களைக் கட்டாயப் பாலியல் உறவில் சிக்க வைத்து இவர்கள் பணம் சம்பாதித்திருக்கிறார்கள்.

இதற்கு அத்தாட்சி மோனிகா யாதவ் என்ற இளம்பெண் அளித்த வாக்குமூலம். மத்தியப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கல்லூரியொன்றில் சேர்ந்து பயில விரும்பிய மோனிகா, அதற்கான சிபாரிசுக்காக ஸ்வேதாவை அணுகியிருக்கிறார். தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டுவிட விரும்பாத ஸ்வேதா, ஆர்த்தியுடன் அப்பெண்ணை மத்தியப் பிரதேச எம் பி ஒருவரைக் காணும்படி அனுப்பியிருக்கிறார். பிரசித்தி பெற்ற கல்லூரியில் இடம் வேண்டுமென்றால் அந்த எம் பியுடன் இரவைக் கழிக்க வேண்டுமென்று மோனிகாவை இவர்கள் வற்புறுத்தியதில் அந்தப் பெண் பயந்து போய் தனக்கு படிப்பே வேண்டாம் என்று வெறுத்துப் போய் தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார். ஆனால், அந்தப் பெண்ணின் வறிய சூழலை நன்கறிந்து கொண்ட ஸ்வேதா கும்பல், அவளை விடாது பின் தொடர்ந்து அவளது சொந்த ஊருக்கே சென்று அவளது ஏழைத்தகப்பனிடம், உன்  பெண்ணின் படிப்புச் செலவு மொத்தத்தையும் நாங்கள் நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமே ஏற்றுக் கொள்ளும், நீ, உன் பெண்ணை எங்களுடன் அனுப்பு, நாங்கள் அவளை எங்களது சகோதரி போலப் பார்த்துக் கொள்கிறோம் என்று பலவாறாகச் சமாதானப்படுத்தி மோனிகாவை மீண்டும் தங்களை வலையில் வீழ்த்தி அவளைத் தங்களது செக்ஸ் ராக்கெட்டில் சிக்க வைத்தனர். 

ஒரு அரசு ஒப்பந்த விஷயமாக அரசுப் பொறியாளர் ஹர்பஜன் சிங்கின் தயவு தேவைப்படவே அப்போது மோனிகாவை அவருடன் தங்க வைத்த ஆர்த்தி, இரவில் அவர்களது அந்தரங்கக் காட்சிகளை விடியோ பதிவாக்கி அந்த விடியோவை ஹர்பஜனுக்கு அனுப்பி அவரைத் தங்களது கைப்பாவையாக ஆக்க முயன்றிருக்கின்றனர். இவர்களது வலையில் சிக்கிய பின்னரும் அடிக்கடி முரண்டு பிடித்த மோனிகாவையும் அதே ஆபாச விடியோவைக் காட்டி, ரொம்பவும் முரண்டி பிடித்தாயானால், உன்னுடன் தொடர்புடைய இந்த விடியோவை இணையத்தில் பதிவேற்றி ஊர் முழுக்க அரங்கேற்றி விடுவோம், ஜாக்கிரதை என்று மிரட்டியுள்ளனர்.

இப்படி இவர்களின் வற்புறுத்தலால் வாழ்க்கையை இழந்த இளம்பெண்களின் எண்ணிக்கை 4,000 க்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அது நாட்டிலேயே மிகப்பெரிய ஹனிடிரேப் செக்ஸ் ஸ்கேண்டலாக வெடித்தது. இளம்பெண்களை ஆடம்பர வாழ்வுக்கு பழக்கப்படுத்தி அதன் மூலமாக அவர்களை செக்ஸ் ஸ்கேண்டல்களுக்கு தூண்டிலிட்டுப் படிய வைத்த ஸ்வேதா கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு காவல்துறையின் கடுமையான விசாரணை வளையத்தில் சிக்கிய பின் ஸ்வேதா மூலமாக பல அரசு உயரதிகாரிகள் முதல் முன்னாள் மந்திரிகள் வரை செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இதில் வேதனை தரும் விஷயம் இந்த செக்ஸ் ஸ்கேண்டலில் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரின் பெயரும் கூட அடிபட்டுக் கொண்டிருப்பது தான்.

இன்றைய அவசர கதியிலான ஆடம்பர வாழ்க்கை மோகமானது அப்பாவி இளம்பெண்களை இப்படியான புதைகுழிகளுக்குள் வீழ்த்த எவ்வித குற்ற உணர்வுமின்றி எந்நிலையிலும் தயாராகக் காத்திருக்கிறது. விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் பெண்களைப் பெற்றவர்களும் அவர்களது உற்றார், உறவினர், நண்பர்களும் தான். உங்கள் வீட்டுப் பெண்ணின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாகக் கண்காணித்து அதைச் சரி செய்யப்பாருங்கள். அவர்களைச் சூழ்ந்து கொள்ளவிருக்கும் அபாயங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கப் பாருங்கள்.

மேற்கண்ட செக்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் பலிகடாக்களாக்கப்பட்ட இளம்பெண்கள் அத்தனை பேரிடமும் ஸ்வேதா, ஆர்த்தி உள்ளிட்ட செக்ஸ் புரோக்கர்கள் அவர்களை வசியம் செய்யப் பயன்படுத்திய மார்க்கம் ஒன்றுண்டு, அது என்ன தெரியுமா?

‘சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால், நான்கு பெரிய மனிதர்களின் பழக்கம் வேண்டும், அதற்கு அவர்களை இப்படி, அப்படி அட்ஜஸ்ட் செய்து கொண்டு தான் ஆக வேண்டும், அப்போது தான் உயரத்தைச் சென்றடைய முடியும் என்பதே’ – இப்படிச் சொல்லி மூளைச்சலவை செய்து தான் அந்த அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றித் தங்களது வேலைகளை ஈடேற்றப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் உதாரணங்கள் அல்ல, உதிரிகள். இவர்களைப் போன்றவர்கள் நிச்சயம் களையப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு பணம் கொடுத்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்களே அந்தப் பெரிய மனிதர்களை என்ன சொல்வது? அற்பப் பதர்கள் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் பொருந்தவில்லை.

இதில் ஆறுதலான ஒரே விஷயம், இந்தப் பெண் புரோக்கர்களை காவல்துறை வலையில் வீழ்த்தியவரும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்பது மட்டுமே! இந்த வழக்கில் குற்றவாளிகள் காவல்துறையின் பிடியின் இருந்து தப்பாமல் காத்ததில் ரூபா எனும் அந்த பெண் போலீஸ் அதிகாரியின் சேவை பாராட்டத் தக்கது.

http://dinamani.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here