தமிழகத்தில் உள்ள சில ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அவர்களின் உடல்நலத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கோயமுத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஆடை தொழிற்சாலைகள் குறிப்பாக நூற்பாலைகள் அதிகம். வட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஆலைகளில் வந்து தங்கி பணிபுரிகின்றனர், அதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலிக்காக வலி நிவாரண மாத்திரைகள் அளிக்கப்படுகின்றன.

மாதவிடாய் நாட்களில் விடுப்போ, ஓய்வோ எடுக்க வாய்ப்பு இல்லாததால் , அந்த சமயங்களில் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம், மில்லில் பணிபுரியும் பெண்களுக்கு பரவலாக இருக்கிறது. தகுதியான மருத்துவர்களின் அறிவுரையின்றி முறையற்று வழங்கப்படும் இந்த மாத்திரைகளால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பல விதங்களில் பாதிக்கப்படுகிறது என தாம்சன் ராயடர்ஸ் பவுண்டேசன் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் சில பெண்களிடம் பேசியது பிபிசி தமிழ். 26 வயதான ஜெனி , திண்டுக்கல் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர். நூற்பாலையில் பணிபுரிகிறார். இவர், எனக்கு பொதுவாகவே மாதவிடாய் காலங்களில் கடுமையான வயிற்று வலி வரும். எனவே, மாதவிடாய் ஏற்பட்ட உடனேயே மில்லில் வழங்கப்படும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விடுவேன். வெளியில் உள்ள மருந்தகங்களில் மாத்திரை வாங்கியும் சாப்பிட்டுள்ளேன். ஆனால், மில்லில் வழங்கப்படும் மாத்திரைகள் போல அவை உடனடியாக வலி நிவாரணம் அளிக்காது.

“எனவே, மில்லில் தரப்படும் மாத்திரைகளைத்தான் அதிகம் சாப்பிடுவேன். இப்பொழுதெல்லாம் எனக்கு மாதவிடாய் நேரத்தில் இரத்தப்போக்கு மிகவும் குறைந்து விட்டது, வழக்கமாக மூன்று நாட்கள் இருக்கும், இப்பொழுது ஒரு நாளில் நின்று விடுகிறது. எனவே, இந்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு , மருத்துவர் அறிவுரையின் படி சிகிக்சை எடுத்துக் கொண்டு இருக்கிறேன்” என்கிறார்.

“வயிற்றுவலிக்கு மில்லில் தரப்படும் மாத்திரைகள் மீது மேலுறை இருக்காது, அதனால் எங்களுக்கு பெயர் எல்லாம் தெரியாது. வேலைக்கு சென்ற பின்பு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் திரும்பி வீட்டிற்கு வர இயலாது. திரும்பினால், அன்றைய கூலி 300 ரூபாய் போய்விடும். ஓய்வு எடுக்கவும் வாய்ப்பில்லை. மெஷினை நிறுத்த முடியாது. அதனால் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு வேலையினை தொடரத்தான் முயற்சி செய்வேன்” என்கிறார் கமலஜோதி.

“என்னுடன் வேலை பார்க்கும் பெண்கள் பலருக்கும் மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு ஏற்படுவது போன்ற சிக்கல்கள் உள்ளன, இந்த மாத்திரைகளால் தான் இந்த பிரச்சினைகள் வருகின்றனவா என்று எங்களுக்கு தெரியாது. இதனால் இருக்குமோ என்று பயமாக இருக்கின்றது. அதனால் நான் இப்பொழுது மாத்திரைகள் எடுப்பதை பெரும்பாலும் குறைத்துக் கொண்டேன்.

இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மாதவிடாய் இரத்தப்போக்கு குறைந்து விடுகிறது. பொதுவாக 3-4 நாட்கள் இருக்கும் ரத்தப்போக்கு இரண்டு நாட்களில் நின்று விடும். என்னுடன் வேலை செய்யும் திருமணமாகாத இளம் பெண்கள் இந்த மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொள்கின்றனர், பின் விளைவுகள் குறித்து அவர்கள் சிந்திப்பது இல்லை, அப்போதைக்கு விடுப்பு எடுக்காமல் வேலை பார்த்து விட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். வார விடுமுறை தவிர எல்லா நாள்களும் விடுப்பு எடுக்காமல் வந்தால் 1000 ரூ ஊக்கத்தொகை கிடைக்கும். ஊக்கத்தொகை, அன்றைய தினக்கூலி இரண்டையும் இழந்து விடக்கூடாது என்பதால் வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது” என்கிறார் அவர்.

இந்த சமயங்களில் ஓய்வு அளிப்பது போல் மாற்று ஏற்பாடுகள் கொண்டு வந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது குறையும் என்பது அவரது கருத்து.

வீட்டில் இருந்து வேலைக்கு செல்பவர்களை விடவும் விடுதியில் தங்கி இருப்பவர்கள் நிலை மோசம். அவர்கள் விடுமுறை எடுக்க வாய்ப்பே இல்லை என்பதால் இந்த சமயங்களில் கட்டாயமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர். “இந்த மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்பொழுது சில நேரங்களில் நான்கைந்து மாதங்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில்லை. ஐந்து மாதங்கள் கழித்து மாதவிலக்கு ஏற்படும் போது அதிக ரத்தப் போக்கும், தாங்கமுடியாத வலியும் வருகிறது. அதனால் பயந்துகொண்டு மாத்திரை வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். ஒரு நாள் விடுமுறை எல்லாம் வேண்டாம் , வலி அதிகமாக இருக்கும் சமயங்களில் ஒரு மணி நேரம் ஓய்வு கொடுத்தாலே போதும்” என்று கூறும் 21 வயதான விமலா , கடந்த மூன்று மாதங்களாகத்தான் தங்கள் மில்லில் மாத்திரைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்கிறார்.

இது குறித்து பேசும் தமிழ்நாடு ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள் யூனியன் தலைவர் திவ்யா, பல நாட்களாகவே மில்லில் இது போன்ற மாத்திரைகள் அளிக்கும் வழக்கம் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆனால், இப்பொழுதுதான் இதன் விளைவுகள் தெரிய வருகின்றன. மருந்துகள் வழங்கும் இடத்தில் மருந்து குறித்த அறிவுடையவர்கள் நியமிக்கப்படுவதில்லை. மேலும், மாத்திரைகளின் மீது பெயர் பொறித்த உறைகள் இல்லாமல் வெறும் மாத்திரைகள் மட்டும்தான் வழங்கப்படுகின்றன. இவை இரண்டுமே தவறானது. அனைத்து பெண்களுக்கும் மாதவிடாய் நேரத்து உடல் தொந்தரவுகள் வருவதில்லை. அப்படி பிரச்சினைகள் ஏற்படும் சில பெண்களுக்கு , ஷிப்ட் மாற்றி கொடுப்பது போன்ற மாற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்காததால் அவர்கள் மறைமுகமாக மாத்திரைகள் சாப்பிடும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர்.

ஓய்வோ, விடுமுறையோ கேட்கும் பொழுது மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு விட்டு வேலை பார்க்கலாம் என்றுதான் பெரும்பாலும் அவர்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது. எங்கள் யூனியன் செயலாளர் , குழந்தைப் பேறு இல்லாத சிக்கலுக்காக மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார், அவர் அடிக்கடி மில்லில் வழங்கப்படும் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டிருந்தவர். இப்பொழுது அதனால்தான் குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என்று பயப்படுகிறார். பெரும்பாலும் மில்லில் பணிபுரியும் பெண்கள் இரத்த சோகை, ஊட்டசத்துக் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இது போன்று தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மேலும் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம் என்கிறார் அவர்.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (Southern India Mills Association – SIMA) தலைவர் செல்வராஜிடம் இது பற்றிக் கேட்டபோது “மாதவிடாய் காலங்களில் பெண்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பது குறித்த உயர் நீதிமன்ற விதிமுறைகள் உள்ளன. தமிழக அரசு, அதிகாரிகளும் சைமா, டாஸ்மா போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து இதனை பணியாளர்களிடம் வலியுறுத்துகின்றனர். யாரும் அதனை மீற முடியாது. அவ்வாறு மீறி நடந்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். இவை நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்படி இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரச்சனைகள் குறித்து எங்களிடம் பேச விரும்பினால், நாங்கள் பேசத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

இந்த பிரச்சனைகள் குறித்த கட்டுரையினை வெளியிட்ட தாம்சன் ராய்டர்ஸ் நிறுவனம் , இந்த மாத்திரைகளை ஆய்வுக்குட்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளது. இதில் பெயர்கள் குறிப்பிடாததால், ஆலைகளில் பணிபுரியும் பெண்கள் சிலரிடம் இருந்து மாத்திரைகளை வாங்கி ஆய்வு செய்த பொழுது இதில் NSAID வகையினை சார்ந்த ibuprofen போன்ற மூலக்கூறுகள் உள்ளதாக தெரியவந்துள்ளதாக இந்த நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.

ஸ்டிராய்டு அல்லாத வலிநிவாரண மாத்திரைகளான இவற்றை எடுத்துக் கொள்வதால் பெண்களுக்கு கருவுறுதலில் சிக்கல் வரையிலான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என, கோவையில் உள்ள மகளிர் மற்றும் மகப்பேறு நல மருத்துவர் ரஜனியிடம் கேட்டது பிபிசி தமிழ். “வலி நிவாரணிகள் உட்கொள்வதால் நேரடியாக மலட்டுத்தன்மை ஏற்படுகின்றது எனக் கூற முடியாது. எந்த NSAID (ஸ்டிராய்ட் அல்லாத வலி நிவாரணி) எடுத்துக் கொண்டாலும் மாதவிடாய் உதிரப் போக்கு குறைய வாய்ப்புள்ளது” என்றார்.

“வலி வந்த பின்பு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் குறித்து பேசுகிறோம். முதலில் ஏன் வலி வருகிறது? இந்த மாதிரி பணிபுரியும் பெண்களுக்கு அதிக அழுத்தம் இருக்கும். இதுவும் மாதவிடாய் நேரத்து வலிக்கு ஒரு காரணம். கோவையில் அதிகமாக தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதில் பணிபுரியும் பெண்கள் சிகிக்சைக்காக அதிகம் வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் காலை உணவு உண்பதில்லை. ஒரு டீயும் சில பிஸ்கட்டுகளும்தான் இவர்களின் காலை உணவு. பிஸ்கட்டில் மைதாவும் சர்க்கரையும் உள்ளன. ஊட்டச் சத்து இல்லை. பணிபுரியும் இடங்களில் நெருக்கடி, பொருளாதார சிக்கல்கள் என பல வாழ்வியல் அழுத்தங்களை இவர்கள் சந்திக்கின்றனர். இதுவே அவர்களின் பல உடலியல் சிக்கல்களுக்கு காரணமாகிறது.எனவே பெண்களின் சமூக, உளவியல் சிக்கல்களை புரிந்துகொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்கிறார் ரஜனி.

அகிலா இளஞ்செழியன் 

பிபிசி தமிழ்

நன்றி : bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here