பெண்களின் நிராகரிப்பை ஏற்கும் பக்குவம் ஆண்களுக்கு வேண்டும்

0
404

”இல்லைன்னா இன்பமா கிளம்பு” என்கிற பரப்புரை என் முதல் முயற்சி. இதில் நான் கண்ட மனிதர்கள் மற்றும் மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றிய பகிர்வு இது. இந்தப் பரப்புரைக்காக நான் முதலில் சந்தித்தது மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்களைத்தான்; முதலில் கேள்வியைக் கேட்ட பலர் வெட்கம் கலந்த சிரிப்புடன் பதில் சொல்லத் தயங்கினர். பின்பு சிறிது நேரத்தில் இயல்பாக தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதில் அனைவரது பதிலிலும் ஒரு பக்குவத்தைக் காண முடிந்தது. ”ஒரு பெண்ணின் உணர்வைத் துச்சம் என எண்ணாமல் மதிப்பளிக்க வேண்டும்” என பலரின் பதில்கள் உரைத்தன. அடுத்ததாக கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பு; இதுவும் சற்று அமைதியான சந்திப்பு. காதலை மறுப்பது ஒரு பெண்ணின் உரிமை என மாணவர்களின் கருத்துகள் கிடைத்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடம் கருத்து கேட்க சென்றபோதுதான் முதல் முதலாக பதட்டம் தொற்றிக்கொண்டது. முன்னதாக நான் சென்ற பல்கலைக்கழகங்கள் எனக்கு கொஞ்சம் பழக்கப்பட்டவை. ஆனால் இது முற்றிலும் புதிய ஒன்று. இருப்பினும் நானாக சென்று சில மாணவர்களிடம் இந்தப் பரப்புரை பற்றி கூறினேன்.

பலர் மிகவும் நன்றாக இது பற்றிய தங்கள் கருத்தைப் பகிர்ந்தனர். ஒரு சிலர் பதில் கூற விரும்பவில்லை; எனினும் அதை நேரடியாக கூறிவிட்டு அமைதியாக சென்றனர். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. அடுத்து நான் சென்றது வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி. ஏன் அங்கு சென்றோம் என்பதைவிட ஏன் இந்த மாணவர்கள் இவ்வளவு பழமைவாதிகளாக உள்ளனர் என்றே தோன்றியது. இருபாலர் கல்வி நிலையம்; ஆனால் ஆணும் பெண்ணும் தனித் தனி தீவு போல்தான் இருக்கவேண்டும் என விதிகள். ஆண் பெண் பேசக் கூடாது; நட்பு பாராட்டக்கூடாது. அவ்வளவு ஏன்? வாயிற்படி தொடங்கி உள்ளே உள்ள அத்தனை இடங்களிலும் ஆண் பெண் என தனி வகைப்பாடு. இதற்கு எதற்கு இருபாலர் கல்வி நிலையம்? தனித்தனி கல்வி நிலையமாகவே இருக்கலாமே. நான் உள்ளே செல்லும்போதே பலர் என்னை விசித்திரமாக பார்க்கின்றனர். ஏன் இப்படிப் பார்க்கிறார்கள் என்று யோசித்தவாறே பயணித்தேன். சிறிது தூரம் சென்ற பின்னர் தான் தெரிந்தது; அது ஆண் மாணவர்களுக்கான நடைபாதையாம். அடுத்து மாணவர்களைச் சந்திப்போம் என அணுகினால் பலரும் நகைச்சுவை நிகழ்ச்சி போல தங்களுக்குள்ளே பேசி சிரித்தனர். பின்பு ஒரு மாணவன் இவன் பதில் சொல்வான் என, மற்றொருவன் இல்லை அவனைக் கேளுங்கள் என மாறி மாறிக் கூறினார்கள். பதில் மட்டும் இறுதிவரை சொல்லவில்லை. சரி அடுத்த ஆளைப் பார்ப்பதே நல்லது என அவ்விடம் விட்டு நழுவி அடுத்த மாணவனைச் சந்தித்தேன். அதே பதில் நீ சொல்லு நான் சொல்லு என்று இறுதிவரை யாரும் ஒன்றும் சொல்லவில்லை.

சரி பேசாமல் ஆசிரியர் யாரையாவது அணுகிப் பார்க்கலாம் என ஒரு ஆசிரியரிடம் சென்று இந்தப் பரப்புரை பற்றி விவரித்தேன். எல்லாம் கேட்ட பின்னர் அவர் முறைப்படி முதல்வரிடமிருந்து இது குறித்து சுற்றறிக்கை வந்தால் மாணவர்களை தானே தேர்ந்தெடுத்து கருத்து சொல்ல செய்வதாக சொன்னார். இனி இங்கு பேசி பலன் இல்லை என எந்தவொரு கருத்தும் பெறாமலே வந்தேன். ஆனால் அங்கு நான் சந்தித்த அத்தனை மாணவர்களிடத்திலும் ஒரு மதிப்பற்ற பார்வையைக் காண முடிந்தது. இவர்களைப் போன்றவர்கள்தான் பின் நாட்களில் எதற்கெடுத்தாலும் பெண்ணின் மீது பழிபோடுவது, இழிவாக பேசுவது, சித்தரிப்பது போன்றவற்றில் அதிகமாக ஈடுபடக்கூடும். இதற்கு இவர்கள் மட்டும் காரணமல்ல. இவர்கள் கல்வி நிலையமே முதல் காரணம். பெண்ணும் சமமான உயிர்தானே. ஆனால் அவளை ஏன் ஏதோ தனித்து வாழ வேண்டிய ஜீவராசி போல் தனித்து வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் நட்பு பாராட்டாமல் போவதினால்தான் அவர்கள் எப்படி ஒரு பெண்ணிடம் பேச வேண்டும் என்பதுகூட தெரியாமல் ஏளனமாக நடந்துகொள்கின்றனர்.

இதுதான் இந்தக் கல்வி நிலையங்கள் நம் சமூகத்திற்கு தரும் நல்ல ஆண்களா? தனித் தீவு போல இருக்கும் ஒரு ஆண் பெண் பற்றிய புரிந்துணர்வு இல்லாமல்தான் பெண்ணை அணுகுவான். அவன் ஒரு நாளும் பெண்ணை மதிக்க வேண்டும் என எண்ண மாட்டான். அடுத்த பயணத்தைத் தொடந்தேன். இப்போது செல்வது யாதவர் கல்லூரி. இங்கு பலர் தங்கள் கருத்தைப் பகிர்ந்தனர். ஒரு சிலர் மறுத்தாலும் பலர் இதில் ஆர்வத்துடன் பதிலளித்தது மகிழ்வாக இருந்தது. இந்தச் சந்திப்பில் மிகவும் சுவாரஸ்யமானது ஒரு மாணவனின் கேள்வி. என்னிடம் நீங்கள் தனியாகவா வந்தீர்கள் என்றான். ஆம் என்றதும் ஐயோ இதுபோன்ற சந்திப்பில் தனியாக வருவதா ஒரு ஆண் துணை பாதுகாப்பு தேவையில்லையா என்றதும் சிரிப்பைத்தான் பதிலாக தந்தேன். இந்தச் சிரிப்பின் அர்த்தம் அந்தச் சகோதரனுக்குப் புரிந்ததாக தெரியவில்லை. ஆண் பெண்ணை பாதுகாப்பவன் என்றால் ஏன் இந்த ஆசிட் வீச்சுக்களும், கொலைகளும் நடந்திருக்கப் போகிறது என்று எண்ணியவாறே அங்கிருந்து விடைபெற்றேன்.

இறுதியாக நான் சென்ற கல்லூரி மதுரை கல்லூரி. இந்தக் கல்லூரி மாணவர் சந்திப்பில் என்னால் கல்லூரி காவலர் உயரதிகாரியிடம் மாணவர்கள் மன்னிப்புக் கேட்கும் சூழல். கண்டிப்பாக என் மன்னிப்பை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அத்துடன் நன்றிகளும். இங்கும் இரண்டு தரமான மாணவர்களையும் காண முடிந்தது. ஓரளவு முதிர்ச்சி பெற்ற மாணவர்கள், சிறிது விளையாட்டுத்தனம் கொண்டு எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு வாழ்வை நகர்த்தும் நபர்கள் என இரு சாரார். இது எனக்கு ஒரு புதிய அனுபவமாகத்தான் அமைந்தது. இதில் கருத்துகள் தெரிவித்த, தெரிவிக்காத, சிரித்த, ஏளனம் செய்த அனைவருக்கும் நன்றி. எல்லாம் ஒரு புது அனுபவம்; ஒரு பாடம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்