பெட்ரோல் டீசல், விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு முடியாமல் தர்மசங்கடமாக இருக்கிறது என்று கூறுவதற்கு பதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலகலாம் என சிவசேனா எம்.பி சஞ்சய் அவர்கள் கூறியுள்ளார்.
நாடு முழுவதிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பல தலைவர்களும் குரலெழுப்பி வரும் நிலையில், மக்களும் இதற்கு எதிராக பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்கள் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த பொழுது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசல் விலை உயர்வு தனக்கும் தர்மசங்கடமாக இருப்பதாகவும், ஆனால் மத்திய அரசுக்கு இதிலிருந்து வருவாய் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
நிர்மலா சீதாராமன் அவர்களின் இந்த கருத்துக்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், தர்மம் என்று மதத்தின் பெயரால் உங்களுக்கு வாக்குகள் கிடைத்துள்ளது எனவும், பெட்ரோல் டீசல் விலையை தர்மசங்கடம் என்று கூறி மத அரசியலில் விளையாட வேண்டாம் என தெரிவித்தார்.
பணவீக்கத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் பொறுப்பாகும். மாறாக முடிவுகளை எடுக்கும்போது லாபத்தையும், நஷ்டத்தையும் கணக்கிடும் வர்த்தக அணுகுமுறையை அரசு பின்பற்றக் கூடாது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது எரிபொருள் விலை உயர்வு காரணமாக இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டார். ஆனால் அவர் அதை எதிர்த்துப் போராடினார். நீங்கள் இதிலிருந்து தப்பித்து ஓடுகிறீர்கள்.
அண்டை நாடான இலங்கை, நேபாளத்தில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்று கூறி பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால் நீங்கள் (நிர்மலா சீதாராமன்) பதவியில் தொடரக் கூடாது என தெரிவித்துள்ளார்.