அதர்வா நடிப்பில் ஆர்.கண்ணன் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் பூமராங்.

சிவா என்ற இளைஞனை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். இந்த சிவாவின் முகம் கடைசிவரை காட்டப்படுவதில்லை. 95 சதவீத முகம் தீய்ந்து போனதால் மூளைச்சாவு அடைந்த சக்தி என்பவரது முகத்தை சிவாவுக்கு பொருத்துகிறார்கள். பேஸ் ஆஃப் படத்தில் வருவது போன்ற பேஸ் ட்ரான்ஸ்பிளான்டேஷன். அந்த முகம்தான் அதர்வா. அதாவது இறந்து போன சக்திதான் அதர்வா. அவரது முகத்தை சிவாவுக்கு பொருத்தியதால் இப்போது சிவா சக்தியின் முகத்துடன் இருக்கிறார்.

சிகிச்சை முடிந்து வரும் சிவாவை (அதர்வா) கொலை செய்ய முயற்சி நடக்கிறது. அவர்களின் டார்கெட் தான் அல்ல, சக்தியின் முகம் காரணமாகவே இந்த கொலை முயற்சி என்பதை சிவா புரிந்து கொள்கிறார். அப்படியானால் சக்தி யார்? அவரை ஏன் சிலர் கொல்ல நினைக்கிறhர்கள்? இந்த கேள்விகளுக்கான விடையை சிவா தேடிப் போவதும், பதிலை கண்டடைவதும்தான் பூமராங்.

விவசாயிகள் பிரச்சனை போன்ற தலைப்புச் செய்திகளை படமாக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. பூமராங்கிலும் விவசாயிகள் பிரச்சனைதான் பிரதானம். வழக்கம்போல் மேலோட்டமாக எந்த புரிதலுமதின்றி வருகின்றன காட்சிகள். விவசாயிகளுக்காக போராடுகிறவனை கார்ப்பரேட் போட்டுத்தள்ள நினைப்பதும், அவனது இடத்தில் அதே முகத்துடன் இன்னொருவன் வந்து சதியை முறியடிப்பதும் கத்தி படத்தில் விலாவரியாக காட்டிய பிறகு அதே கதையை, அதே தண்ணி, விவசாயப் பிரச்சனை பின்னணியில் வைத்து ஒரு படம் செய்ய ஆர்.கண்ணன் முயன்றிருப்பது என்னவகையான துணிச்சல் தெரியவில்லை. ஒரேவித்தியாசம், ஒருவனைப் போல இன்னொருவன் இல்லை. அதற்குப் பதில் இவனது முகத்தை அவனுக்கு மாற்றி வைக்கிறார்கள். இதுவும்கூட 5 வருடங்களுக்கு முன்பு வந்த ‘யவடு’ தெலுங்குப் படத்தில் அப்படியே உள்ளது. பேஸ் ட்ரான்ஸ்பிளான்டேஷன், கொலை முயற்சி, முகத்துக்கு சொந்தக்காரனை தேடிப்போவது, அவன் முடிக்காமல்விட்ட மக்கள் பணியை இவன் செய்து முடிப்பது எல்லாம்.

பூமராங் படத்தின் பிரச்சனை ஏற்கனவே வந்த கதையை எடுத்ததல்ல. அதை சொன்னவிதம். நிகழ்வுகளும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் பெரும்பாலும் பொருந்தவில்லை. சிவாவின் பழைய முகம் காட்டப்படுவதில்லை என்பதால் அவனுக்கு பொருத்திய புதிய முகத்தைக் கண்டு சிவாவும், அவனது குடும்பமும் கொள்ளும் அதிர்ச்சி நமக்கு எந்த உணர்வையும் தருவதில்லை. சிவாவின், நண்பன், காதலி என அனைவரும், ‘புதிய முகம் மாத்திட்டியா’ என்று, வாரத்துக்கு ரெண்டுமுறை இப்படி நடக்கிறதுதானே என்பதுபோல் கேஷுவலாக எடுத்துக் கொள்கிறார்கள். காட்சிகள் கொத்துபரோட்டா லெவலில் இருக்க, அதில் மேகா ஆகாஸின் ஷார்ட் பிலிம் எபிசோடை இழுத்து மேலும் காய விடுகிறார்கள். இடைவேளையில் சம்பந்தமே இல்லாமல் ரயிலில் என்ட்ரி கொடுத்து கிளைமாக்ஸுக்கு லீட் தந்துவிட்டு போகிறார். அமெச்சூர். அதேபோல் சதீஷுக்கு தேவையேயில்லாமல் நீளமான ஹாஃப் பாயில் அறிமுக காட்சி. காமெடியாக இருக்கும் என்று நினைத்திருப்பார்கள்.

இரண்டாம் பாதியில் கதை ஓரளவு கோர்வையாக செல்கிறது. இதுதான் மெயின் கதை என்றால் அதற்கேற்ப முதல்பாதியை வைத்திருக்க வேண்டாமா? சக்தியின் நண்பனாக வரும் ஆர்.ஜே.பாலாஜி வாட்ஸப் ஒன் லைன்களை வாரி இறைக்கிறார். சமூக அக்கறையாம். பல வருடங்களாக தொடரும் வாழ்வாதாரப் பிரச்சனையை தங்கள் சௌகாரித்துக்காக கேப்சூலாக்கி, வாட்ஸப், ட்விட்டர் கமெண்ட்களை கோர்த்து, ஒரு இன்ஸ்டெண்ட் தீர்வை தந்து முடிகிறது பூமராங்.

திரைக்கதை, காட்சிகளைப்போலவே இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லை. சிவா திருச்சியில் லேண்ட் ஆகும் போது காட்ஸிலாவின் என்ட்ரி போல் ஒரு டெரர் மியூஸிக் வருகிறது. கொஞ்சம் தீவிரமான காட்சியில் இசையோ கிச்சுகிச்சு மூட்டுகிறது.

ஆர்.கண்ணனின் முதல் படம் ஜெயம்கொண்டானில் தென்பட்ட முதிர்ச்சியும், அனுவமும் இதில் துளிகூட இல்லை என்பதுடன் தொழில் தெரியாதவனின் முதல்படம் போல் திரைக்கதை, மேக்கிங் உள்பட அனைத்து ஏரியாவிலும் கோட்டைவிட்டிருப்பது ஆயாசம்.

பூமராங்… வெறும் புஸ்வாணம்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here