பூச்சிக்கொல்லி மருந்துகள்: தடை செய்த நாடுகள் எவை?

0
421

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 1,50,000 பேர் பூச்சிக்கொல்லி மருந்துகளை உண்டு தற்கொலை செய்துகொள்கின்றனர்.

பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்குதலைக்  குறைக்கும் வகையில் உலக நாடுகள் கடும் விதிமுறைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் பல வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்த பின்னர், இலங்கையில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

ஆனால், இன்னும் பல நாடுகளில் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய மிகவும் நஞ்சு நிறைந்த பூச்சிக்கொல்லிகள் எளிதில் அணுகும் நிலையே உள்ளது.

1990களிலேயே உலகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உண்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்ட போதிலும், ஆசிய கண்டத்திலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய ஊரகப் பகுதிகளில் இதன் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை.

1980 மற்றும் 1990களில் உலகிலேயே பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக தற்கொலைகள் நிகழும் நாடுகளில் ஒன்றாக இலங்கை விளங்கியது.

இருப்பினும், கடந்த இரண்டு தசாப்தங்களில் அந்நாட்டு அரசு தற்கொலைக்கு வித்திடும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் அணுகலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளால், ஒட்டுமொத்தமாக தற்கொலை சம்பவங்களின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைந்துள்ளது.

தற்கொலை செய்துகொள்வதற்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை அணுகுபவர்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. எனினும், பூச்சிக்கொல்லி மருந்துகளை உண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகள் தடைசெய்யப்பட்டதே தற்கொலை சம்பவங்கள் குறைந்ததற்கும், அதிகளவிலானோர் மருத்துவமனைகளை நாடுவதற்கும் காரணம் என்று தெரியவருகிறது.

அதே சூழ்நிலையில், விவசாயத்துறையினரின் கவலையை போக்கும் வகையில், மனிதர்களின் உயிருக்கு உலை வைக்காத, குறைந்த நச்சுத்தன்மை கொண்ட மாற்று பூச்சிக்கொல்லி மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால், மிகவும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகள் மருந்துகளை தடை செய்துவிட்டு, அதற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளால் விவசாயத்துறையின் உற்பத்தி குறைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த காலக்கட்டத்தில் சுகாதார வசதிகளும் மேம்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 1,34,000 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளதாகவும், அதில் 24,0000 பேரின் இறப்புக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளே காரணம் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த எண்ணிக்கை மிகவும் குறைத்து காட்டப்பட்டுள்ளதாக பரவலாக கருதப்படுகிறது.

காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவிலான தற்கொலை சம்பவங்கள், விபத்துகளாக குறிப்பிடப்படுவதாக இந்திய மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் ஆஷிஷ் பல்லா கூறுகிறார்.

பிரிட்டனை சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு குழுவாக மேற்கொண்ட ஆய்வில், தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பவர்கள் பயன்படுத்தும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பத்து வகை பூச்சிக்கொல்லிகள் இந்திய அரசினால் ஏற்கனவே தடை செய்யப்பட்டுவிட்டதாகவும், ஏனைய வகைகள் 2020ஆம் ஆண்டுக்குள் தடை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இருப்பினும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய பத்துக்கும் மேற்பட்ட மிகவும் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்னமும் கூட சந்தையில் கிடைத்து வருகிறது.

மற்ற ஆசிய நாடுகளின் நிலை என்ன?

2000ஆவது ஆண்டுகளில் இதேபோன்ற கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்திய பின்னர், வங்கதேசத்தில் தற்கொலை சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனினும், பூச்சிக்கொல்லி மருந்துகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவு குறைந்தபாடில்லை என்று 2017இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

குறிப்பிட்ட சில காரணிகள் குறித்த தரவுகள் சரிவர கிடைக்காதது தங்களது முடிவுகளை பாதித்திருக்கலாம் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு தென் கொரியாவில் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து தடைசெய்யப்பட்ட உடனேயே, அந்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை உடனடியாக குறைந்தது.

சீனாவில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது மட்டுமின்றி, விவசாய துறையில் புகுத்தப்பட்ட தொழில்நுட்பம், நகரமயமாக்கம், மேம்படுத்தப்பட்ட சுகாதார மற்றும் அவசர சேவைகளின் காரணமாக அந்நாட்டில் தற்கொலை முயற்சிகளின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததாக 2006 – 2013க்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கொண்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு சீனாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளித்ததே முக்கிய காரணமென்று கருதப்படுகிறது.

கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 21 வகையான அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை நேபாள அரசு தடை செய்துள்ளது.

இவற்றில் சில பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்டதாகவும், ஆனால் பெரும்பாலும் தற்கொலை சம்பவங்களை கட்டுப்படுத்தவே பூச்சிக்கொல்லி மருந்துகள் தடைசெய்யப்பட்டதாக நேபாளத்தின் பூச்சிக்கொல்லி மேலாண்மை மையத்தின் தலைவர் மருத்துவர் டில்லி சர்மா கூறுகிறார்.

http://bbc

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here