பிப்ரவரி 14ஆம் தேதி, இந்தியத் துணை ராணுவப் படையின் வாகனம் புல்வாமாவில் தாக்கப்பட்டதால் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். உடனே இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக, இந்திய விமானப் படை, பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகள் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் அதிக அளவில் கொல்லப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் வி.கே.கோகலே தெரிவித்தார்.

பாலகோட் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடாத நிலையில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த செய்தியை பாகிஸ்தான் மறுத்தது. காடுகள் அடர்ந்த பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது என்றும், உயிருக்கோ, அந்தப் பகுதிக்கோ கூட எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் பாகிஸ்தான் அசோசியேடட் பிரஸ்ஸிடம் தெரிவித்தது.

மிகத் தவறான செய்திகளை பொதுமக்களிடம் ஊடகங்கள் பரப்புகின்றன என்பதற்கு இந்தத் தாக்குதலைப் பற்றி அவை வெளியிட்ட தவறான , முரண்பாடான தகவல்களே ஒரு உதாரணம்.

புல்வாமா தாக்குதல் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளைக் கொண்டு நாங்கள் ஒரு புலனாய்வு செய்தோம். அதன் விசாரணையின் முடிவில் , பல செய்திகள் முரணாக, ஒருசார்பு கொண்டதாக, பரபரப்பைத் தூண்டிவிடுவதாக, ஆதாரங்கள் இல்லாததாக இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம் .

செய்தி நிறுவனங்களான இந்தியா டுடே, என்டிடீவி, நியூஸ் 18, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட், மும்பை மிரர், ஏஎன்ஐ, மற்ற ஊடகங்களும் தங்களுக்குக் கிடைத்ததாகச் சொல்லப்படும் தகவல்களை பெயர் வெளியிட விரும்பாத அரசு வட்டாரத்தினரிடமும், தடயவியல் வல்லுனர்கள், காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறையினர் போன்றவர்களிடமிருந்து பெற்றதன் அடிப்படையில் வெளியிடுவதாகத் தெரிவித்திருந்தன. இந்த செய்தி நிறுவனங்கள் சுயமாக எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. உளவுத்துறையின் தோல்வி பற்றிய கேள்வி குறித்த பதிலையும் இந்த ஊடகங்கள் வாங்கவில்லை.

இதற்கு இந்திய அரசு பொறுப்பேற்றிருக்க வேண்டும். அணு ஆயுதம் தாங்கிய இரு நாடுகளுக்கு இடையே போர் நெருக்கடி சூழல் உருவாகிய போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களிடம் பேசவில்லை. வெளியுறவுத் துறை செயலர் , வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நடத்திய செய்தியாளர் சந்திப்புகளில் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்பதை அனுமதிக்கவில்லை.

ஆனால், பல பெயர் வெளியிட விரும்பாதவர்கள் ரகசியமான, முரணான தகவல்களை அளிக்க தயாராக இருக்கின்றனர். அவ்வாறு கிடைக்கும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் , வெளியிட செய்தியாளர்களும் தயாராக இருக்கும் நிலையில்தான் இது போன்ற அதிதீவிரமான நெருக்கடிகள் கொண்ட செய்திகள் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த பரபரப்பான செய்திகளுக்கு பிறகு , புல்வாமா தாக்குதல் மற்றும் அதற்கடுத்து நடந்தவை குறித்து இந்திய மக்களுக்கு குறைவான அளவிலேயே தகவல் கிடைத்திருக்கிறது என்று எங்களுக்கு தெரிய வந்தது. பாலகோட்டில் எத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்பது குறித்து சரியான தகவல் கிடைக்காத போதிலும், 25 முதல் 250 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது என்றெல்லாம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தங்கள் இஷ்டப்படி செய்தி வெளியிட்டது . சரியான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காததால் புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் என்று ஒவ்வொரு செய்தி நிறுவனமும் ஒவ்வொருவரை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன.

தாக்குதல் நடைபெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு எந்த ஒரு செய்தி நிறுவனமும், தாங்கள் வெளியிட்டது தவறான செய்தி என்று சொல்லவுமில்லை, தவறான தகவல்களைத் திருத்திக் கொள்ளவுமில்லை என்று நாங்கள் நடத்திய புலனாய்வின் மூலம் தெரிய வந்தது.

அணு ஆயுதம் தாங்கிய இரு நாடுகளுக்கு இடையே போர் நெருக்கடி சூழல் உருவாகிய நிலையில், தனது தவற்றை திருத்திக் கொள்ளாத இந்திய ஊடகங்கள் இந்திய அரசின் பிரச்சார ஒலிபெருக்கியாக செயல்பட்டு வந்தது .

பல தொலைக்காட்சி செய்தி அறைகள் ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தின் கேலிச்சித்திரம் போல் மாறிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அங்கு அமர்ந்து கொண்டு ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வியூகங்களை (சில நேரங்கள் தவறாக) விவரித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர், ராணுவ உடைகூட அணிந்திருந்தனர். ஊகங்களையும் , அனுமானங்களையும் திரும்பதிரும்ப முடிவிலா விளம்பரம் போல் அறிவித்து கொண்டிருந்தனர். சில பத்திரிகையாளர்கள் இந்திய ராணுவத்தை ஊக்குவிக்கும் செயலை டிவிட்டர் மூலம் செய்தனர்.

ஊடகங்களின் இந்த பிரச்சாரத்தினால் 2 அரசியல் செயல்பாடுகள் காணாமல் போயின. 1. காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பதற்றம் அதிகரித்துள்ளது என்பதும் அதனைத்தொடர்ந்து காஷ்மீரில் நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளதும் காஷ்மீர் மக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்பதும் சரியாக மக்களுக்கு சொல்லப்படவில்லை. எத்தனை பேர் கொல்லப்பட்டனர் குறித்த எண்ணிக்கை கூட சரியாக செய்தியாக்கப்படவில்லை. வெகு காலங்களாக காஷ்மீரிகள் போராடி வருகிற சுயநிர்ணய போராட்டத்தை இது மௌனமாக்கியது. பல இந்திய ஊடகங்கள் காஷ்மீரிகளை சுயநிர்ணயத்தைத் தேடும் சமூகமாக கருதாமல் தீவிரவாதிகளாகவும் மனித வெடிகுண்டுகளாகவும் சித்தரிக்கின்றன.

2. புல்வாமா, பாலகோட் தாக்குதல்கள் குறித்து இந்திய அரசின் பிரச்சார பீரங்கிகளாக செயல்பட்டுவந்த இந்திய ஊடகங்கள் பிற முக்கிய அரசியல் பிரச்சினைகளை மக்களை எடுத்து செல்வதை நிறுத்தின. ரஃபேல் ஒப்பந்தத்தை சுற்றியுள்ள சர்ச்சைகளும், இதில் அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும் திடீரெனப் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அதே போல காட்டில் வசிக்கும் பத்து லட்சத்துக்கும் அதிகமான வனவாசிகளை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதும் (பின்னர் தடை விதிக்கப்பட்டது) பின்னுக்குத் தள்ளப்பட்டன.

ஊடகங்களின் இந்தமாதிரியான செயல்பாடு, இந்திய ஊடகப் போக்கின் ஒரு அடையாளம் தான். பெரும்பாலான செய்தி சேனல்கள், அரசியல் செல்வாக்கு கொண்ட குடும்பங்களால் நடத்தப்படுகிறது அல்லது அவர்களின் முதலீட்டினால் செயல்படுகிறது . இந்த ஊடகங்கள் பல நேரங்களில் தங்கள் சார்ந்த அரசியல் கட்சியின் நிலைபாட்டை முன்னிறுத்தும் வகையில் செயல்படுகின்றன. பாஜக ஆளும் அரசை எதிர்த்ததால் 2013 முதல் 2019 வரை, சில சேனல்கள் மற்றும் நாளிதழகளின் ஆசிரியர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் அல்லது வேறு நபரால் மாற்றப்பட்டனர்.

சில ஊடகங்களால் மட்டுமே இந்திய அரசியல் தலைவர்களின் செல்வாக்கிற்குப் பணியாமல் எதிர்த்து நிற்க முடிகிறது.

கலவரங்களையும் , கூட்டு வன்முறையையும், கொலைகளையும் நியாப்படுத்தும் ஊடகங்கள் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இதழியலில் ஈடுபட்டுள்ளதா அல்லது இந்துப் பெரும்பான்மைவாதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதா எனும் சந்தேகம் வலுவாக எழுகிறது.

அரசியல் தீர்வு எட்டபடாமலேயே , சந்தேகமின்றி மீண்டும் காஷ்மீர் செய்திச் சுழலில் சிக்கவிருக்கிறது. காஷ்மீரின் பிரச்சனைகளையும், அங்கு நடக்கும் மனித உரிமைப் மீறல் பிரச்சனைகளையும் இந்திய ஊடகங்கள் நுட்பமாய் உள்வாங்கி செய்திகள் வெளியிட வேண்டும். அவ்வாறன்றி மரணங்கள், சேதம், அவசரநிலைச் சட்டங்கள் போன்றவற்றை பட்டியலிட்டு காஷ்மீரை அவற்றின் இருப்பிடமாகச் சுருக்கிவிடக் கூடாது. மிகவும் முக்கியமாக, உலகின் மிகவும் ராணுவமயமாக்கப்பட்ட பகுதியை கையாள்வது என்றால் என்ன என்பதை செய்தியாளர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

அப்போதுதான் இந்த தேசத்தால் , ஒரு அடிப்படையான கேள்விக்கான விடையைத் தேட இயலும். அந்தக் கேள்வி என்னவென்றால் காஷ்மீர் மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்க என்ன செய்ய வேண்டும் ? இது ஒன்று தான் காஷ்மீர் மேலும் அழியாமல் இருக்க ஒரே வழி.

Courtesy : WashingtonPost

By Suchitra Vijayan and
Vasundhara Sirnate Drennan

Suchitra Vijayan is the executive director of the Polis Project. Vasundhara Sirnate Drennan is director of research at the Polis Project.

The Polis Project, Inc is a hybrid research and journalism organisation producing knowledge about some of the most important issues affecting us, by amplifying diverse perspectives from those indigenous to the conflicts and crisis affecting our world today.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here