புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பயின்றுவரும் காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு மிரட்டலும், துன்புறுத்தலும் ஏற்பட்டுள்ளது . அதனால் அவர்கள் சொந்த மாநிலம் திரும்பி வருகின்றனர்.

டெஹ்ராடூனில் படிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் கல்லூரிகளை விட்டு கிளம்பியுள்ளனர். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து டெஹ்ராடூனில் படிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக பஜ்ரங் தளத்தினர் போராட்டம் நடத்தினர்.

டெஹ்ராடூனில் இருக்கும் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 2000 காஷ்மீர் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் தாக்கப்பட்டனர், பலர் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து துரத்தப்பட்டார்கள். பலர் காஷ்மீருக்கே திரும்பிவிட்டார்கள் .

எல்லோரும் திரும்பி போகமுடியவில்லை ஏனென்றால் டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது. காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது அங்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்று தி வயர் இதழிடம் ஒரு மாணவர் தெரிவித்துள்ளார்.

பஜ்ரங்க தள அமைப்பினைச் சேர்ந்த கும்பல் கையில் ஆயுதங்களுடன் காஷ்மீர் மாணவர்களை மிரட்டி வருகிறது . வெளியே போகவே பயமாக இருக்கிறது, எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று ஒரு மாணவர் தி வயர் இதழிடம் தெரிவித்துள்ளார்.

டெஹ்ராடூனில் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த நிர்வாகி விகாஸ் வர்மா காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் வன்முறைக்கு உள்ளாவது உண்மைதான் என்று ஒத்துக் கொண்டார். அவர்களை வெளியேற்றுவதுதான் எங்கள் குறிக்கோள், அவர்கள் புல்வாமா தாக்குதல்களை கொண்டாடுகிறார்கள், அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுகின்றனர். நாம் அவர்களுக்கு உணவு அளித்தோம், அவர்களை நம் வீடுகளில் தங்க வைத்தோம் , அவர்கள் நமக்கு இதைத்தான் திருப்பித் தருகிறார்கள். நாம் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று தி வயர் இதழிடம் தெரிவித்தார்.

2 மாணவர்கள் புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவி செய்ததையடுத்து அவர்கள் கல்லூரிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரைச் சேர்ந்தவர்களை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களிடம் கூறியுள்ளோம். உத்தரக்கண்டை சேர்ந்த 3 இளைஞர்களை புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரை சேர்ந்தவர்கள் டெஹ்ராடூனை விட்டு வெளியேற வேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறோம் என்றும் பஜ்ரங் தளத்தை சேர்ந்த விகாஸ் வர்மா தி வயர் இதழிடம் கூறியுள்ளார்.

ஒரே அறையில் தஞ்சமடைந்திருக்கும் 20 மாணவிகள் , ஒரு கும்பல் தங்கள் விடுதிகளை சுற்றி வளைத்ததாக கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தி வயர் இதழிடம் தெரிவித்துள்ளனர்.

பஜ்ரங் தள அமைப்பினர் அப்பெண்களை குற்றம் சாட்டுகின்றனர் . நாங்கள் இறந்த இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்து வகையில் அவர்கள் விடுதி வழியாக ஊர்வலம் சென்ற போது அப்பெண்கள் எங்களுக்கு எதிராக கோஷமிட்டனர் என்று பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த விகாஸ் வர்மா தி வயர் இதழிடம் தெரிவித்துள்ளார்.

பல இடங்களில் மரைந்திருக்கும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதால் தங்களை அரசு ஹெலிகாப்டர் மூலம் மீட்டு டெஹ்ராடூனிலிருந்து வெளி கொண்டு வர வேண்டும் என்று சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் ஏடிஜி அசோக்குமார் கூறுகையில், ” டெஹ்ராடூனில் உள்ள அனைத்து கல்வி நிலையங்கள், கல்லூரி விடுதிகளில் போலீஸார் ரோந்து சென்று வருகின்றனர். அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அதேசமயம்,தேசத்துக்கு எதிராக குரல் கொடுத்தாலும், உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் நடவடிக்கை எடுப்போம். இருதரப்பினருக்கும் எச்சரிக்கை விடுத்து அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளோம் ” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தலும், துன்புறுத்தலும் வருவதாக உள்துறை அமைச்சகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் போலீஸாரிடம் மட்டும் கடந்த 2 நாட்களில் 50 பேர் அழைப்புச் செய்து தங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்புறுத்தல்களையும், மிரட்டல்களையும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் 14411 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். எந்தவகையான மிரட்டல், துன்புறுத்தல் இருந்தாலும் இதில் தொடர்பு கொள்ளலாம் என்று சிஆர்பிஎப் நேற்று இந்த உதவி எண்ணை அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில மாணவர்கள் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் நசிர் குஹேமி கூறுகையில், ” கடந்த 3 நாட்களில் நாங்கள் அறிவித்திருந்த உதவி எண்கள் மூலம் 800 அழைப்புகள் காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து வந்துள்ளது. பெரும்பாலான அழைப்புகள் டெஹ்ராடூனில் இருந்து வந்தது.

பஜ்ரங்தள் மற்றும் விஎச்பி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் மாணவர்களுக்கு மிரட்டல், துன்புறுத்தல் செய்து வருகின்றனர். இதையடுத்து போலீஸாரின் உதவியுடன் 100 மாணவர்களை சொந்த மாநிலம் அனுப்பி வைத்தேன். 4 ஆண்டுகளாக டெஹ்ராடூனில் இருக்கிறேன், இதுபோன்ற சம்பவங்களை அனுபவித்தது இல்லை. வெளிமாநிலத்தவரை இதுபோன்று யாரும் நடத்தியது இல்லை ” எனத் தெரிவித்தார்.

புதுடெல்லி துணை போலீஸ் கமிஷனர் மதூர் வர்மாவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ” டெல்லி முழுவதும், குறிப்பாக சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் கண்காணிப்பு பலப்படுத்தி இருக்கிறோம். காஷ்மீர் மாநில மக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதிசெய்வோம் ” எனத் தெரிவித்தார்.

Courtesy : The Wire

Aljazeera

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here