கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக சீராக ஒரு வார காலம் தேவைப்படுவதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
கஜா புயல் பாதிப்புக்களை விரைந்து சீரமைக்கக் கோரியும், நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்க வலியுறுத்தியும் 4 மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள், நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், புயல் பாதித்த பகுதிகளில்  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதன் படி, கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின்சார விநியோகம் முழுமையாக சீரடைய இன்னும் ஒரு வார கால அவகாசம் தேவைப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மின் பணியாளர்களின் உதவியோடு தமிழக மின்சார வாரியம் முழு வீச்சில் செயலாற்றி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர் விநியோகம் 100 சதவீதம் சீரானதாகவும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, தார்ப்பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த பெரும்பாலான உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இதனிடையே, புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தங்கள் மாவட்டத்தில் புயல் பாதித்த சில பகுதிகளில் பாதிக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரம் இல்லை எனக் கூறி நிவாரணப் பொருட்களை வழங்க மறுப்பதாக நீதிபதிகளிடம் முறையிட்டார்.

புகைப்பட ஆதாரம் இல்லை எனக் கூறி நிவாரணப் பொருட்களை தரமறுக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஒவ்வொரு வி.ஏ.ஓ. அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்தி சேத விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

பயிர்க்காப்பீட்டுக்கான கடைசி தேதி முடிந்துள்ள நிலையில், தமிழக அரசு மத்திய அரசிடம் கால நீட்டிப்பு கோர வேண்டும் எனவும், மத்திய அரசு அதைப் பரிசீலிக்க வேண்டும் எனவும்  நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here