காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன், புதுச்சேரியில் ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியில் வரும் 30ஆம் தேதி நெருங்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால் வங்கக்கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் தலைமைச்செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஃபனி புயல் உருவாகி உள்ள நிலையில் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மை ஆணையர் சத்யகோபால், வருவாய்துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். 

இதனிடையே, பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர் தயார் நிலையில் இருக்குமாறு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன், புதுச்சேரியில் ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here