”புத்தகச் சந்தையில் குழந்தைகளுடன் நாலு மணி நேரம்”

அறிவுப் பாதையில் சின்னதொரு பிரயாணம்.

0
654
சென்னைப் புத்தகக் கண்காட்சி இளம் வாசகர்களை ஈர்க்கிறது.

படம் நன்றி: அருண் சீனிவாசன்

ஞாயிற்றுக்கிழமைன்னாலே அசைவம் சாப்பிட்டுட்டு.. ஹாயா பசங்களோட கொஞ்சநேரம் வெளியில போய்ட்டுவர்றதுல இருக்குற சந்தோசமே தனிதான். அதுவும் பசங்ககூட உக்காந்து சாப்பிடற அந்தக் கொஞ்ச நேரம்தான், அப்பா மகன்/ மகளுக்கிடையே இருக்கிற உலகம் எவ்வுளவு பெரிசுன்னு நாம உணரமுடியும். பசங்களோட ஸ்கூல்ல நடந்த விசயங்கள், தன்னோட சக மாணவர்களின் செயல்பாடுகள், நோட்டு புக்குல மயில் இறகை வச்சா குட்டிப்போடுமா? அமெரிக்காவுக்கு சைக்கிள்ல போகமுடியுமா? இந்த மாதிரியான அறிவியல் பூர்வமான கேள்விகள் சாப்பிட உக்காரும்போதுதான் பசங்களுக்கு வரும். இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் எரிச்சல் படாம நாம் உண்மையான பதிலை எடுத்துச் சொன்னாமுன்ன புத்தருக்குக் கிடச்ச ஞானம் மாதிரி சந்தோசப்படுவானுக… அடுத்ததா நம்மகூட உக்காந்து சாப்பிட நேரம் கிடைக்குமான்னு காத்துக்கிட்டு இருப்பாங்க….. இந்தவார ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டுல அசைவம் கட்டு; வைகுண்ட ஏகாதசி அதனால இன்னிக்கி, நான் வெஜ் கிடையாதுன்னுட்டா. ஏகாதசி விரதமிருந்தா செத்ததுக்கு அப்புறம் விசாரணையே இல்லாம நேரா சொர்க்கத்துக்கு போயிரலாமாம். அதனால இன்னைக்கு விரத சாப்பாடுதான் வீட்டுலன்னுட்டா…..அதுவும் எப்படி பெருமாளுக்கு பிடிச்ச புளியோதரையும், தயிர்சாதமும். இது சரிபட்டு வராது பசங்களகூட்டிட்டு புகாரிக்கோ, ஹைதராபாத்துக்கோ போயிராலாமுன்னு திட்டம் போட்டேன்.

பசங்க ரெண்டு பேரையும் நைசா மொட்ட மாடிக்குக் கூட்டிட்டுபோய் ’’டேய்…. தோ பாருங்கடா; பச்சையப்பாகாலேஜ்க்கு எதித்தமாதிரி இருக்குற செயின் ஜார்ஜ் ஆங்கிலோஇந்திய ஸ்கூல் வளாகத்துல நாப்பதாவது புத்தகத் திருவிழா நடந்துகிட்டு இருக்கு. நாம இன்னைக்கு மத்தியானம் அதுக்குப் போறோம்’’ன்னு ஆரம்பிச்சி பாபநாசத்து கமல் மாதிரி உக்கார வச்சி மத்தியான சாப்பாட்டிலேருந்து நைசா மூணு பேரும் எஸ்கேப்பாகி ஓடிரலாமுன்னு எல்லாம் பிளான் பண்ணி அம்மாகிட்ட என்ன சொல்லணுமுன்னு அரைமணி நேரமா டிஸ்கஸ் பண்ணிக் கீழ அனுப்பிவிட்டேன்; ஓகே..ப்பான்னு, சூப்பர்…ப்பான்னு சொல்லிட்டு கீழபோன பயளுக வடிவேலுக்கு ஊத்தப்பம் சொன்ன மாதிரி ஒரே போடா போட்டுட்டானுக… சூச்சுமத்தை கண்டுட்டா என் மனைவி. அப்புறம் என்ன பெருமாளுக்கு விழ வேண்டிய அர்ச்சனை என் பக்கமா திரும்பிடிச்சி. அது…. வந்து… ம்மான்னு…. ஆரம்பிச்சி எவ்வளவோ போராடிப் பாத்தேன். என்னோட மனைவி தான் கொண்ட கொள்கைக்கு இம்மியளவும் பங்கம் விளைவிக்கவில்லை. மாறாக இருங்க சாமி கும்பிட்டுட்டு மத்தியானம் சாப்பிட்டுட்டு நாம எல்லாருமா போலாம்ன்னா.

பெருமாளுக்கு அலங்காரம், நைவேத்தியம் எல்லாம் முடிஞ்சி நாங்கல்லாம் பிரசாதம் சாப்பிட்டு முடிச்சு கெளம்பறதுக்கு மணி மூணு ஆயிடிச்சி … ஆச்சரியம் என்னன்னா பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததுமே பஸ் வந்துடுச்சி. ஞாயிற்றுகிழமை ரோடு காலியா இருந்துச்சு; அரை மணி நேரத்துல நியூ ஆவடி ரோட்டுல இருக்குற புத்தகசந்தைக்கு வந்துட்டோம்.,உள்ள நுழைஞ்சதுமே ’’ப்பா… எவ்வுளவு பெரிய புத்தக சந்தைன்னு என்னோட ரெண்டு பசங்களும் ஆச்சரியப்பட்டாங்க….மொத்தம் பதினோரு வரிசை; ஒவ்வொரு வரிசையிலும் ரெண்டு பக்கமும் ஸ்டால் போட்டிருந்தாங்க; வரிசைகளுக்கு நடுவுல சீரான இடைவெளி விட்டிருந்தாங்க. ஸ்டால் அமைப்புகள் மக்கள் பார்த்து படித்து வாங்குறதுக்கு ஏதுவா இருந்துச்சு. எழுநூறு ஸ்டால்ல கோடிக்கணக்கான புஸ்தகங்கள் கொட்டிக் கிடந்துச்சு. ஒவ்வொரு பதிப்பகத்தையும் அவர்களது தனித்தன்மையையும் என்னோட பசங்களுக்குசொல்லிக்கொடுக்குற அந்தப் பொன்னான வாய்ப்பு எனக்குக் கிடச்சுது. சாட்டிலைட் டி.வியையும் பள்ளிக்கூட மதில் சுவற்றையும் பார்த்துப் பார்த்து பழகிப்போன என்னோட பசங்களுக்கு இந்த புத்தகதிருவிழா ஒரு புதியஅனுபவமா இருந்துச்சி… ஒவ்வொரு ஸ்டாலிலும் போய் சிறந்த புத்தகங்களை எடுத்து அதை அவர்களுக்கு விவரித்துச் சொல்லும்போது, அவர்கள் அதை ஆர்வமாக கேட்டது, எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்துச்சி.

இவ்வளவு நாளா பசங்களை வீட்டிற்குள் பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்கச் சொல்லி சித்திரவதை செய்தோமே என்னைக்காவது மற்ற புத்தகங்களைப் படிக்கச் சொல்லி கொடுத்திருக்கோமான்னு என்னையே நான் கேட்டுகிட்டேன். புத்தகத் திருவிழாவில் முல்லைப் பதிப்பகத்திலிருந்த பெரியவர் என்னைப் பார்த்து சொன்னார்: குழந்தைகளைக் கூட்டிட்டு வந்திருங்கீங்க. ரொம்ப சந்தோசமாருக்கு; பசங்கள இந்த மாதிரி எடத்துக்கு கூட்டிட்டு வந்தாதான், அவங்களுக்கு வாசிப்பு மேல ஒரு பிடிப்பு வரும். மொதல்ல அவங்களுக்குஅம்புலிமாமா , மதிரியான புஸ்தகங்களை வாங்கி கொடுங்க அப்பத்தான் அவங்க இன்ரஸ்டா படிப்பாங்க..இந்த மாதிரி எக்ஸிபிஸனுக்கெல்லாம் வந்தா ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் புஸ்தகம் வாங்கவேண்டியது இருக்குமுன்னு பெருவாரியான ஜனங்க நெனைக்குறாங்க. அப்படியெல்லாம் இல்லை நல்ல பல புஸ்தகங்கள் பத்து ரூபாய்க்கி கிடைக்குது. இருபது ரூபாய்க்கு கிடைக்குது. தங்களோட பொருளாதரத்துக்கு ஏத்த மாதிரி நல்ல புஸ்தகங்களை வாங்கிக்கலாம். குழந்தைகளை இந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு வர்றது ஒவ்வொரு பேரண்ட்ஸும் கடமையா வச்சிகிடனும்‘’ என்றார்.

அரங்கத்துக்கு உள்ளேயே கும்பகோணம் டிகிரி காபி ஸ்டால் இருந்துச்சு. அதப் பாத்ததும் ’’கும்பகோணம் டிகிரி காபி குடிக்கலாமா’’ன்னு; நாலு காபிக்கு 120 ரூபாய்; அந்தக் காபியில டிகிரி காபியோட எந்த மணமும் இல்லை. கொஞ்சமும் சூடில்லாத காபி. கொஞ்ச நேரத்திலயே பசங்களுக்கும் எங்களுக்கும் டயர்டுஆயிட்டு. எங்கேயாவது கொஞ்சநேரம் உக்காரலாமுன்னு பாத்தா உக்காருவதற்கான வசதி செய்யாதது அங்கு வந்திருந்தவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கியது.
ஒரு இடத்துல மனைவியையும் சின்ன பய்யனையும் உக்கார வச்சிட்டு நானும் பெரியவனும் பதிப்பாளர்கிட்டே பேசிட்டு வரலாமுன்னு கெளம்பிட்டோம். செண்பகம் பதிப்பகத்திலிருந்த மணிகண்டனிடம் அரங்கத்தைப் பத்தியும் மக்கள் வருகையைப் பத்தியும் பண பரிவர்த்தனையைப் பத்தியும் விசாரிச்சேன். அப்பஅவர் சொன்னது:

ரெண்டு நாளா மக்கள் வரத்து ரொம்பக் குறைவா இருந்துச்சு. இன்னைக்கு ஞாயிற்றுகிழமைங்கறதால மக்கள் வரத்து அதிகமா இருக்கு. ஸ்டால் அதிகமாக இருக்கிறதனால மக்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு. பதினோரு லைன் போட்டிருக்காங்க. ஃபஸ்ட் அஞ்சு, ஆறு லைன்லதான் மக்கள் கூட்டம் அதிகமா இருக்கு. அடுத்த லைன் போக போக கூட்டம் குறஞ்சிடுது. இன்னொன்னு இந்த அரங்கத்துக்கு வரக்கூடிய ரோடு ரொம்ப குறுகலானது. போக்குவரத்து இடைஞ்சலுக்குப் பயந்தே பாதி மக்கள் இங்க வரமாட்டாங்க. போன தடவை ராயபேட்டயில இருந்தப்ப வந்த மக்களைவிட இங்கே குறைவுதான். இன்னைக்கு மூணு நாள்தானே ஆகுது போகப் போக எப்படியிருக்குமோ தெரியவில்லை என்றார்.

பிரபல கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன்:

பண மதிப்பிழப்பால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தப் புத்தகச் சந்தை நடைபெறுவதால் மக்கள் வருவார்களா மாட்டார்களா என்ற பயம் பதிப்பகத்தாரிடம் இருந்தது. ஆனால், மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். பெருவாரியான நூல்களை மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பார்த்த அந்த நூல்கள் எங்கே கிடைக்கும் என்று தேடிச்சென்று வாங்குகிறார்கள். பெண்களும் தங்களுக்குத் தேவையான நூல்களைப் பட்டியலிட்டு வருகிறார்கள்.அந்தப் புத்தகமெல்லாம் எங்கே கிடைக்குமென்று தேடுகிறார்கள். மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு நூல்களை வாங்கிச் செல்கிறார்கள். இதையெல்லம் வைத்துப் பார்க்கும்பொழுது வரும் காலங்களில், அதிக அளவில்விற்பனையாகும் என்று நம்புகிறோம் என்றார்.

இதையும் பாருங்கள்: இளைஞர்களின் ஆர்வம் நம்பிக்கையளிக்கிறது

புழல் பகுதியிலிருந்து வந்திருந்த ஐசக் ரமேஷ்:

எல்லா புத்தகமும் ஒரே குடையில் கிடைப்பது சந்தோசமாக இருக்கிறது. ஆனா விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. எல்லா புத்தகமும் புத்தகத்திலுள்ள விலையிலிருந்து வெறும் பத்து சதவீத தள்ளுபடி விலையில் கொடுக்கிறார்கள். ஆனால் இதே புத்தகத்தை எழும்பூரிலோ அல்லது திருவல்லிக்கேணியிலோ நாம் வாங்கினால் 30 சதவீதம் தள்ளுபடி தருகிறார்கள். பெருவாரியான மக்கள் வருகிற இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக தள்ளுபடி தந்தால் நன்றாக இருக்கும்.

எழுத்தாளர் ஸ்ரீனிவாசன்:

இந்தத் தடவை நிறைய நல்ல விசயங்கள் நடந்திருக்கு; ஸ்டாலை கொஞ்சம் உயரப்படுத்தியிருக்கிறார்கள். இரண்டு வரிசைக்கும் நடுவில் அதிக இடம் இருப்பதால் நல்ல குளுமையான சூழ்நிலை இங்கே நிலவுகிறது. கடைகளின் அளவு மிக குறைவாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அகலமாக இருந்திருந்தால் மக்கள் உள்ளே போய் பார்த்து படிப்பதற்கு வசதியாக இருக்கும். பெருவாரியான வாசகர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை உபயோகித்து பரிவர்த்தனை செய்கிறார்கள். பணமில்லா பரிவர்த்தனைக்கு இது ஒரு அடித்தளமாக இருக்கும்.

இதையும் பாருங்கள்: காத்தோட்டமாய் புக் ஸ்டால்களை அமைச்சிருக்காங்க

பல இளைஞர்கள் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடித்தேடி வங்கினார்கள். பெரும்பாலனவர்கள், குடும்பத்தோடு வந்திருந்தார்கள். பல வாசகர்கள் தங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கினார்கள். எவ்வுளவுபேர் வந்து புத்தகங்களை திருப்பிப் திருப்பிப் பார்த்து கேள்விகள் கேட்டாலும் பதிப்பகத்தார் முகம் கோணாமல் பதில் சொல்வது வாசகர்களுக்கு உகந்த சூழல்.

அப்படியே ஒரு ஒரு கடையாய் பாத்துகிட்டே வந்தோம். இஸ்லாமிய பவுண்டேசன் ட்ரஸ்ட் சார்பாக உள்ள ஸ்டால்ல ’’திருக் குர்ஆன்’’ புத்தகம் வைத்திருந்தார்கள். 400 ரூபாய் மதிப்புள்ள குர்ஆன் புத்தகத்தைத் தள்ளுபடி விலையில் 100 ரூபாய்க்கு வச்சிருந்தாங்க. புத்தகம் முழுவதும் பாலிதீன் பேப்பரால லேமினேட் பண்ணி வச்சிருந்ததால அந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்குமுன்னு தெரியல. அங்க இருந்தவங்ககிட்ட குர்ஆன் புத்தகத்தை பாக்கணுமுன்னு கேட்டேன். ஆனால் அங்கே இருந்தவங்க நான் சொன்னதைக் காதுகொடுத்து கேக்கல.

மொத்தம் எழுநூறு ஸ்டால் எல்லாம் சுத்தி பாத்து புத்தகம் வாங்கணுமுன்னா அரைநாள் வேணும். ஒவ்வொரு பதிப்பகத்தாரும் ஸ்வைப்பிங் மிஷின் வச்சிருக்காங்க. ஒரு சில ஸ்டால்ல சிக்னல் பிரச்சினையால கார்டு தேய்க்க முடியாத நிலமை இருக்கு. அதுக்கு அங்கங்கே 50 இடத்துல பொதுவான ஸ்வைப்பிங் மிஷின் வச்சிருக்காங்க; அதுல தேச்சிக்கலாம்; எங்களுக்குத் தேவையான புத்தகங்களை நாங்க வாங்கிகிட்டு என் மனைவி உக்காந்திருந்த இடத்துக்குப் போனோம். அவளுக்குத் தேவையான சில சமையல் புத்தகமும் நாவல், கோலப்புத்தகமெல்லாம் வாங்கிட்டு வெளியில வந்தா இருட்டிடுச்சி. வெளியில கடைகள் நெறைய இருந்துச்சி. அப்பா அந்தப் பெரிய அப்பளம் வாங்கித் தாங்கப்பான்னு சின்னவன் கேட்டதும் ரெண்டு பேருக்கும் சேர்த்து வாங்கிட்டு எவ்வளவுன்னு கேட்டேன். 100 ரூபாய்ன்னு சொன்னான்; நா அப்படியே அப்பளம் மாதிரியே நொறுங்கிட்டேன்.

வெளியிடத்துக்குப் பிள்ளைங்கள கூட்டிட்டு வந்தமுன்னா பசங்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தா அது விலை அதிகமா இருந்தாலும் பசங்க முன்னாடி நம்மளோட அதிருப்தியை வெளிப்படுத்தக் கூடாதுங்கிற என் மனைவியோட கொள்கையை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து விடை பெற்றோம். ஒரு பெரிய அறிவுக் களஞ்சியத்திலிருந்து வெளியே வந்ததுபோல ஒரு உணர்வு இருந்தது.

இதையும் படியுங்கள்: திம்மக்கா குழந்தையை 200 ரூபாய்க்கு வித்தாங்களா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்