புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி பிரதேச மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆர். ராஜாங்கம் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அந்தத் தீர்ப்பில், “தேர்தலை எப்படி நடத்துவது, தேர்தலின்போது சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாப்பது என்பது போன்ற விசயங்களைத் தலைமை தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது என்பதை நீதிமன்றம் ஏற்கிறது. அதே நேரத்தில் மற்ற அமைப்புகளைப் போலவே நியாயமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளது.
“தேர்தல் அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு, வாக்களிக்க வரும் மக்களை அச்சுறுத்தும் என்றும், மார்ச் 22 ஆம் தேதி தடை பிறப்பிக்கப்பட்டு அதை ஏப்ரல் 1 ஆம் தேதிவரை நடைமுறைக்குக் கொண்டு வருவது தவறானது.” என நீதிமன்றம் குறிப்பிடப்பட்டிருந்தது.