இந்தியாவில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டாம் என, உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களிடையே மின்சார வாகன பயன்பாட்டை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

அதேநேரம், மின்சார வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிவது தொடர் கதையாகி உள்ளது.  அந்தவகையில், வேலூரில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில், தந்தை மற்றும் மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஆம்பூரில் ஓலா மின்சார இருசக்கர வாகனம் அடிக்கடி பழுதானதால், உரிமையாளர் அதனை தீயிட்டு கொளுத்திய சம்பவமும் அரங்கேறியது.  இதனால், ஏற்பட்ட அச்சம் காரணமாக மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான ஒகினாவா மூவாயிரம் வாகனங்களையும்,  பியூர் இவி நிறுவனம் இரண்டாயிரம் வாகனங்களையும்,  ஓலா நிறுவனம் ஆயிரத்து 400க்கும் அதிகமான வாகனங்களையும் பிரச்னையை சரி செய்து தர திரும்ப பெற்றுள்ளன.

இந்நிலையில், மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை முடியும் வரை, புதிய வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டாம் என, அனைத்து நிறுவனங்களிடமும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பிட்ட பேட்ச்சில் ஏதேனும் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தாலும்,  அந்த பேட்ச்சில் உள்ள அனைத்து வாகனங்களையும் பயனாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்று, சரிபார்க்குமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளது.  அதேநேரம், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனைக்கு மத்திய அரசு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here