புதிய பாடநூல்கள்: கொஞ்சம் பாய்ச்சல்; கொஞ்சம் சறுக்கல்

A review of new Tamil language textbooks for the schools in Tamil Nadu

0
1279

இந்தக் கல்வியாண்டு (2018 – 19) முதல் சமச்சீர் கல்வியில் புதிய பாடநூல்கள் அறிமுகம் ஆகின்றன. முதற்கட்டமாக 1,6,9,11 ஆகிய வகுப்புகளின் புதிய பாடநூல்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய பாடநூல்கள் மீது முன்னெப்போதும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு மேலெழுந்ததற்குக் காரணம் பாடநூல் உருவாக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பு வகித்த செயலாளர் உதயசந்திரன் அவர்கள்தான் என்று சொல்வதில் மிகையில்லை. கல்வித்துறை மீதான அவரது ஈடுபாடே பாடநூல் குறித்த எதிர்பார்ப்பை மிகுவித்தது. அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் புதிய பாடநூல்கள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் ஒரு தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளன. அவற்றுள் 6 மற்றும் 9 ஆம் வகுப்புத் தமிழ்ப்பாடநூல் மட்டும் இங்கு விவாதிக்கப்படுகிறது.

தமிழ்ப்பாட நூல்கள் இறைவாழ்த்தில் தொடங்கவேண்டும் என்பதும் அது சைவ (அ) வைணவ வாழ்த்துப் பாடலாக இருக்கவேண்டும் என்பதும் எழுதப்படாத விதி. புதிய பாடநூல் அந்த விதியை மாற்றி அமைத்திருக்கிறது. ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ்ப்பாடநூல் மொழிவாழ்த்தில் இருந்து தொடங்குகிறது. மொழி என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ஒரு சைவ (அ) வைணவப் பாடலில் வகுப்பைத் தொடங்கி அப்பாடலைக் கட்டாயமாக மனப்பாடமும் செய்யவேண்டும் என்று சொல்வதெல்லாம் இந்த நாட்டின் பன்மைத்தன்மைக்கு எதிரானது. இந்த எதிர்மனநிலையை மாற்றியமைத்து ஒரு பொதுத்தன்மைக்கு வித்திட்டிருக்கிறது புதிய பாடநூல். சமய இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்கள் கூட நாடு, நீர், விழா எனப் பொதுமையைத்தான் பேசுகின்றன.

வழக்கமான தலைப்புகள் மாற்றப்பட்டு உரைநடை உலகம், கவிதைப் பேழை, விரிவானம்,கற்கண்டு எனப் புதிய தலைப்புகளின் கீழ் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. உரைநடையின் வடிவ அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. இடமிருந்து வலம் நோக்கிச் செல்லும் பத்திகளாக அல்லாமல் ஒரு செய்தித்தாளின் வடிவத்தில் ஒரு பக்கம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பத்திகள் எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு இயலும் (Chapter) மொழி, இயற்கை, பண்பாடு, கல்வி என ஒரு பொருண்மையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொருண்மையும் தமிழ் மண்ணைச் சார்ந்ததுதான். செயலாளர் உதயசந்திரன் அவர்களே கூறியுள்ளபடி இந்தப் பொருண்மைகளை எல்லாம் சேர்ந்துப் பார்த்தால் அவை தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்கிற விரிந்த எல்லையின் அருமை பெருமைகளை மாணவர்க்கு விளக்குவதாக இருக்கும். பழங்காலத்தையும் சமகாலத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் தமிழ்ப் பாடநூல் இருக்கும்.

தமிழ்ப்பாட நூலில் நிகழ்ந்துள்ள இன்னொரு முக்கிய மாற்றம் கற்பித்தல் முறையைக் கணினிச் செயல்பாடுகளுடன் கட்டாயமாக இணைத்துள்ளதுதான். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் QR code கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்து திறந்து பார்த்தால் அந்தப் பாடம் தொடர்பான ஒரு காணொளிக் காட்சி திரையில் தோன்றுகிறது. பாடல்கள், உரைகள், வல்லுநர்களின் கருத்துகள், படக்காட்சிகள் என திரைவழிக் கற்றல்முறை கற்பித்தலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிப்பீட்டு வினாக்களுக்கென தனியே ஒரு QR code உள்ளது. இதில் மாணவர் தாமே சுயபரிசோதனை செய்துகொள்ளும் வகையில் வினா – விடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படியான QR code உத்திகள் தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் முதல் முயற்சி என்று சொல்லப்படுகிறது.

Schedule for change in Syllabus
Schedule for change in Syllabus

ஒவ்வொரு இயலின் இறுதியிலும் உள்ள இணையச்செயல்பாடுகள் அந்தந்த பாடம் தொடர்பான இணையப்பக்க முகவரிகளை அளிப்பதோடு சில புதிய செயலிகளையும் மாணவர்க்கு அறிமுகப்படுத்துகின்றன. Google Handwriting Input, சொல்விளையாட்டு, தமிழ்நாடு – இ சேவை போன்ற செயலிகள் அவற்றுள் சில. ஆசிரியரின் கைப்பேசி அவருக்கு மட்டுமல்ல இனி மாணவருக்கும் பயன்பட்டாக வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் ‘தெரிந்து தெளிவோம்’ ‘யார் இவர்’ ‘தெரியுமா’ ‘திட்பமும் நுட்பமும்’ என்னும் தலைப்புகளின் கீழ் பெட்டிச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. பாடம் தொடர்பான ஒரு அகன்ற பார்வையைத் தரும் இந்தச் செய்திகள் எல்லாம் ஒரு ஆசிரியர் மெனக்கெட்டு நூல்களைத் தேடி அறிந்து வைத்திருக்க வேண்டியவை. ஆனால், அந்தச் சுமையைத் தன்மேற்போட்டுக் கொண்டு உழைத்திருக்கிறது புதிய பாடநூல். ‘கற்பவை கற்றபின்’ ‘நிற்க அதற்குத் தக’ ‘மொழியோடு விளையாடு’ ஆகிய பகுதிகள் படைப்பாற்றலையும் விழுமியங்களையும் மொழியறிவையும் எளிய செயல்பாடுகள் வழி அறியச்செய்கின்றன. ஒரு மதிப்பெண் வினாக்களின் பழைய வடிவம் மாற்றப்பட்டுள்ளது. நுழைவுத் தேர்வுகள் (அ) அரசுப் பணியாளர் தேர்வுகளுக்கான வடிவத்தில் அவை கேட்கப்பட்டுள்ளன. நெடுவினாக்கள் கூட ‘சிந்தனை வினாக்களாக’ மாற்றப்பட்டு அவற்றுள் பலவும் சிந்திக்கத் தூண்டுவதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உரைநடை உலகமும் விரிவானமும் (துணைப்பாடப் பகுதி) இயல்தமிழின் பல்வேறு சாத்தியக் கூறுகளை மாணவர் முன் விரித்திருக்கிறது. கட்டுரை, கதை, உரையாடல், நாடகம் என்கிற எல்லையை உரைநடைப் பகுதிகள் பெரும்பாலும் கடந்ததில்லை. ஆனால், தற்போதைய நூலில் பின்னோக்கு உத்தி (Flash Back) கனவுக்காட்சி, நேர்காணல், வில்லுப்பாடல், கருத்தரங்கம், பட்டிமண்டபம், நிகழ்வுகள், இருவேறு கதைத்தளத்தில் பயணித்தல், படக்கதை என பல்வேறு வடிவங்களைக் கொடுத்து உரைநடைப் பகுதியையும் விரிவானத்தையும் ஒரு புதிய அனுபவமாக்கியுள்ளனர். ஆறாம் வகுப்பில் இடம்பெற்றுள்ள ‘வேலு நாச்சியார்’ ‘பசிப்பிணி போக்கிய பாவை’ ‘முதலில் ஒரு தொடக்கம்’ ஆகிய பகுதிகள் ஒரு பாடத்தைப் படிப்பதையல்ல ஒரு திரைப்படத்தைப் பார்க்கிற அனுபவத்தைக் கொடுக்கின்றன. ‘சிறகின் ஓசை’ ஒரு அழகான உரைநடை. எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் உலகப் புகழ்பெற்ற ‘கடலும் கிழவனும்’ நாவலை ஒரு ஐந்துபக்க படக்கதையாகக் கொடுத்திருப்பது அற்புதமான முயற்சி. ஒன்பதாம் வகுப்பில் ‘நீரின்றி அமையாது உலகு’ ‘ஏறு தழுவுதல்’ ‘வணிகவாயில்’ போன்ற பகுதிகள் ஒரு நேர்த்தியான உரைநடைக்கு எடுத்துக்காட்டு. ‘பெரியாரின் சிந்தனைகள்’ பாடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சென்ற சமச்சீர் புத்தகத்தில் ஆறாம் வகுப்பிலும் பத்தாம் வகுப்பிலும் பெரியார் பாடம் இடம்பெற்றிருந்தது. இரண்டுமே பெரியாரை மிகச்சிறப்பாக அறிமுகப்படுத்தியவைதான். ஆனால் இரண்டுமே அவரைக் கடவுள் மறுப்பாளராக அடையாளப்படுத்தத் தவறியவை. புதிய பாடம் இந்தக் குறையைப் போக்கி, ‘கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைபிடித்தார்’ என்று அடையாளப்படுத்துவதோடு பெரிதும் கண்டுகொள்ளப்படாத அவரது எழுத்துச் சீர்திருத்தத்தையும் மொழிப்பார்வையையும் மாணவர்க்கு விளக்குகிறது. ‘அகழாய்வுகள்’ பாடத்தில் கீழடி அகழாய்வுச் செய்திகளைச் சொல்லியிருப்பதன் முக்கியத்துவத்தை விளக்கவேண்டியதில்லை.

கவிதைப் பேழையில் சிலப்பதிகாரம், புறநானூற்றுப் பாடல்களின் மூலவடிவத்தைக் கொடுத்துவிட்டு அப்படியே அதை நவீன கவிதை வடிவத்திலும் கொடுத்திருப்பது நல்ல முயற்சி. ஆறாம் வகுப்பில் பாரதி, கவிமணி, பட்டுக்கோட்டையார், கலீல் ஜிப்ரான் என அனைவரும் சிறந்த தேர்வுகள். ஒன்பதாம் வகுப்பில் சீனக்கவிஞர் லாவோட்சு அவர்களின் அந்த எளிய தத்துவக் கவிதையை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்குத் தனிப்பயிற்சியே வேண்டும். தொல்காப்பியரின் ‘ஒன்றறிவதுவே’ நூற்பாவைக் ‘கவிதைப் பேழைக்குள்’ வைத்திருப்பது பொருத்தமானது. சங்க இலக்கியம் தொடங்கி சமகாலக் கவிதை வரையிலான ஒரு தொடர்கண்ணியை மாணவர்க்கு அளித்திருப்பதும் தமிழ்ப்பாடநூலின் புதுமைதான்.

இலக்கணப்பகுதிக்கு ‘கற்கண்டு’ எனத் தலைப்பிட்டிருப்பது ஆறாம் வகுப்பிற்குத்தான் முற்றிலும் பொருந்தும். அத்தனை எளிய வடிவிலான இலக்கணங்கள். வல்லினம்,மெல்லினம்,இடையினம் ஆகியவற்றுக்கு விளக்கப்படங்களாக யானை,முயல்,மானின் படங்களைக் கொடுத்திருப்பது நுட்பமான சிந்தனை.ஒன்பதாம் வகுப்பு இலக்கணத்தில் துணைவினைகளைச் சேர்த்திருப்பது அவசியமானது. இப்படியான நடைமுறை இலக்கணங்கள்தான் இன்றைய தேவை. கவிஞர் அறிவுமதியின் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல், பன்மைத்தன்மையை எடுத்துரைக்கும் கிறித்தவ, இசுலாமியப் பெயர்களை முன்னிறுத்துதல், மொழிபெயர்ப்புப் பகுதியில் நிகழ்ந்துள்ள மாற்றம் போன்றவற்றையெல்லாம் விரிவஞ்சித் தவிர்த்துவிட்டுப் பாடநூல் மீதான விமர்சனங்களைச் சற்று பார்ப்போம்.நூலின் அட்டைப்படத்தில் இருந்தே தொடங்கலாம்.ஆறாம்வகுப்புப் பாடநூலின் முன்அட்டைப்படம் அத்தனை அற்புதமானது. ஒரு வெள்ளைப்பக்கத்தில் பல்வேறு வண்ணங்களின் குவியல் பட்டுத்தெறிக்கிறது. பின் அட்டையில் ‘கிழவனும் கடலும்’. ஒன்பதாம் வகுப்புப் பாடநூலின் முன் அட்டைப்படம் ஒரு கோவில் கோபுர ஓவியத்தைச் சுமந்து கொண்டு நிற்கிறது. இது தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்கிற பொருண்மைகளுக்கு எந்தவகையில் முற்றாகப் பொருந்தும்? பின் அட்டையில் ஒரு குதிரைவீரனின் ஓவியம். இரண்டு பாடநூல்களிலும் தமிழ்த்தாய்வாழ்த்திற்குக் கீழ் மூவேந்தர்களின் கொடிச்சின்னத்தைப் புகுத்தியிருப்பதன் காரணமும் விளங்கவில்லை. தமிழ் மூவேந்தர்களுக்கு மட்டுமே உரியதா? அல்லது முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள் அவர்கள் மட்டும்தானா?

பாடத்திட்ட வரைவு (2017) வெளிவந்தபோது பாலினசமத்துவத்தின் அடிப்படையில் பாடநூல் அமையும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், பாடநூல் வழக்கம்போல ஆண்மையத்திலேயே சுழல்கிறது. உதாரணத்திற்கு, ஆறாம்வகுப்பில் ஆசிரியர் குழுவால் எழுதப்பட்ட பாடலில் ஒரு பத்தி : “நாளை மனிதன் கோள்களில் எல்லாம் நகரம் அமைத்து வாழ்ந்திடுவான் / வேளைதோறும் பயணம் செய்ய விண்வெளிப்பாதை அமைத்திடுவான்”. ஒன்பதாம் வகுப்பிலும் இப்படி உதாரணங்களைக் காட்டமுடியும்.

QR code கற்பித்தலில் புதிய பரிமாணம்தான். ஆனால், சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கவேண்டும். பல QR code காணொளிகள் ஒரு Power Point Presentation போலவும் இணையத்தில் கிடைத்தவற்றை வெட்டியும் ஒட்டியும் தொகுத்ததைப் போலவும் இருக்கின்றன. “திராவிட மொழிகள்” பாடத்தின் காணொளி மாணவர்களுக்கு ரொம்பவும் அந்நியமானது.

அகழாய்வில் கிடைத்த அரியபொருட்கள், ஓவியங்கள், நடுகற்கள் என தமிழக வரலாற்றைத் தேடித்தொகுத்திருக்கும் பாடநூல் குழுவினர் பாடம் தொடர்பாக வரையப்பட்ட ஓவியங்கள் மீதும் கவனம் குவித்திருக்கலாம். அவை ஒரு தலைமுறைக்கு முந்தைய ஓவியபாணியில் இருப்பது புதிய பாடநூலைப் பின்னோக்கி இழுப்பதுபோல் இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பில் பாலை நிலத்திற்கு வரையப்பட்ட படத்தில் பனைமரங்கள் அவ்வளவு பசுமையாக இருக்கின்றன. பாலை என்பதை ‘பாலைவனம்’ என்று புரிந்துகொண்டிருப்பவரே அதிகம். பாடநூல்கள் பாலை நிலத்தைத் துல்லியமாக வரையறுக்கவேண்டும்.

‘சந்தை’ ‘பழந்தமிழர் சமூகவாழ்க்கை’ ஆகிய பாடங்கள் பழந்தமிழகத்தை ஒரு ‘பொற்காலமாகக்’ கட்டமைப்பதைப்போல் இருக்கிறது. சந்தையில் “சாதி மதத்தைத் தாண்டி எல்லோருடனும் பழகமுடியும்” என்று சொல்வதெல்லாம் வெறும் வார்த்தை தான். புறநானூற்றுப் பாடலுக்கு நவீன கவிதை வடிவத்தைக் கொடுக்கும்போது, “நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் / உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே / உண்டி முதற்றே உணவின் பிண்டம்” என்னும் புகழ்பெற்ற வரிகளை “ உணவால் ஆனது உடல் / நீரால் ஆனது உணவு” என்று தட்டையாக மொழியாக்கியிருப்பது வருந்தத்தக்கது. ‘வளரும் செல்வம்’ பாடத்தில் “Periplus Of The Erythraean Sea” என்பதை “எறிதிரேசியன் ஆப் த பெரிபுலஸ்” என்று தமிழாக்கியிருப்பது எப்படியெனப் புரியவில்லை.

‘திராவிட மொழிக்குடும்பம்’ பாடத்தில் ‘காலந்தோறும் தமிழின் வரிவடிவ வளர்ச்சி’ ஒரு அட்டவணையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அது இணையத்திலேயே கிடைக்கும் அட்டவணைதான். அங்கே இருக்கும் அதே பிழையோடு பாடநூலிலும் எடுத்தாளப்பட்டுள்ளது. உயிர் எழுத்துகளில் எ,ஒ இரண்டும் குறில் எனில் புள்ளி வைத்து எழுதப்படும் என்பது தொல்காப்பிய விதி. நெடில் எனில் ‘எ’ ‘ஒ’ என்றே எழுதப்படும். பதினெட்டாம் நூற்றாண்டில்தான் இந்நிலை மாறி எ,ஏ,ஒ,ஓ என்ற வேறுபாடு வந்தது. ஆனால், அட்டவணையில் ஆறாம் நூற்றாண்டில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை எ,எ,ஒ,ஒ என்று குறிலுக்குப் புள்ளி இல்லாமலேயே எழுதப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்புத் ‘தமிழ் விடு தூது’ பாடல் பட்ட வகுப்பில் தமிழிலக்கியம் படிப்பவர்களுக்கு வைக்கவேண்டிய பகுதி. ஆறாம் வகுப்பில் ‘தமிழர் திருவிழா’ பாடம் ‘தமிழர் திருவிழாக்கள் என்று இருந்திருக்க வேண்டும். அதில் பொங்கல் பண்டிகையோடு கிறிஸ்துமஸ், ரம்ஜான், மகாவீர் ஜெயந்தி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்க வேண்டும். ‘தமிழர் திருவிழா’ என்று சொல்லிவிட்டு இந்துக்குடும்பத்தை மட்டுமே தமிழர்களாக முன்னிறுத்துவது ஏற்புடையதன்று. இந்தியாவைப் போன்ற பல்வேறு மதங்கள் புழங்குகிற ஒரு நாட்டில் பாடநூல்கள் சமயச்சார்பற்று இருப்பதைப் போலவே சமய நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டியதும் முக்கியமானது.

‘கிழவனும் கடலும்’ படக்கதையில் சாண்டியாகோவிற்குக் கடலுக்குச் சென்ற மறுநாள் தான் மீன் கிடைப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நாவலில் கடலுக்குச் சென்ற முதல்நாளே மீன் கிடைத்துவிடும். மனோலினை ‘பேச்சுத்துணை’ என்பதாகச் சுருக்கியிருக்கக்கூடாது. “போராடுவதில் மகிழ்ச்சியும் வெற்றியும் இருக்கிறது” என்று இக்கதை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால், போராட்டத்தில் தோல்வியும் இருக்கிறது அதையும் எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்வதுதானே இந்தத் தாத்தாவின் கதை…

மரபின் தளையில் இருந்து கவிதைகள் விடுபட்டுவிட்ட பின்பும் யாப்பிலக்கணத்தை மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் தன்வினை, பிறவினை, காரணவினைப் பகுதி ரொம்பவும் குழப்பத்துடன் விளக்கப்பட்டுள்ளது. இன்னும் சில விமர்சனங்களை விரிவஞ்சித் தவிர்ப்போம்.

இவையெல்லாம் தமிழ்ப்பாடத்தின் சிறப்புகளும் விமர்சனங்களும். மற்ற நான்கு பாடங்களைத் தொகுத்துப் பார்த்தால்தான் பள்ளிக்கல்வியில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை அவதானிக்க முடியும். தமிழைப்போல் அல்லாமல் ஆங்கிலப்பாடம் அரசுப்பள்ளி மாணவர்களுக்குச் சுமக்க முடியாத பாரமாகத்தான் இருக்கும் என்று ஆசிரியர் சிலர் கூறுகின்றனர். பிளஸ் ஒன் பாடங்களின் சுமைகள் இன்னும் கூடுதல் என்கிறார்கள். பாடத்திட்டத்தை உருவாக்குபவர்கள் பாடப்பொருண்மைகளின் தரத்தை மட்டுமன்று அதைக் கையில் ஏந்தும் மாணவர்களின் நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்கவே சிரமப்படும் ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களிடம் சி.பி.எஸ்.இ தரத்திலான ஒரு பாடநூலைக் கொடுத்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இப்படிச் சொல்வதன் பொருள் பாடநூல்கள் தரமற்று இருக்கவேண்டும் என்பதல்ல. அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைவருக்குமான பொதுவான ஒரு சமச்சீர் பாடநூலை உருவாக்கும் போது இன்னும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது என்பதுதான்.

சமத்துவம் என்பது எல்லோரையும் சமமாக நடத்துவதல்ல. இதுகாறும் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களின்பால் கரிசனம் கொள்வதுதானே.. அந்த அடிப்படையில்தானே நமது சீர்திருத்தவாதிகள் இடஒதுக்கீடு என்னும் நீதியை முன்மொழிந்தார்கள். அதேநோக்கில் இருந்துதான் நாம் சமச்சீர் கல்வியையும் பார்க்கவேண்டி இருக்கிறது. உண்மையில் சமச்சீர் கல்வி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடத்தை உருவாக்குவதல்ல, எல்லோருக்கும் ஏற்றபடியான ஒரு பாடத்தை உருவாக்குவதாகத் தான் இருக்கவேண்டும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் எல்லோருக்குமான ஒரு வினாத்தாளை உருவாக்குவதாகத்தான் இருக்கவேண்டும். அதாவது, மீத்திறன் மிக்க மாணவர்களுக்கான நுட்பமான வினாக்களும் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான எளிய வினாக்களும் ஒரே வினாத்தாளில் இருக்கவேண்டும்.

இந்தக் கல்வியாண்டு முதல் ‘Blue Print’ கூட இல்லை என்பதும் எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்று சொல்லியிருப்பதும் மெல்லக்கற்கும் மாணவர்கள் குறித்த கவலையை மிகுவித்திருக்கிறது. இனி, பாடப்பகுதியைக் கரைத்துக் குடித்தவர்கள் மட்டும்தான் வினாத்தாளைத் துணிவுடன் எதிர்கொள்ள முடியுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது. கல்வி என்பது ஒரு அறிதல் முறை. கற்றுக்கொள்வதில் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. அது, தனிநபரின் திறனை மட்டுமன்றி சமூகப் பொருளாதாரக் காரணிகளையும் சார்ந்திருக்கிறது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எல்லோரும் ஒரேமாதிரியாகப் படித்துத் தேர்ச்சியடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ அல்லது ‘தகுதியுடையவர்கள்’ தேர்ச்சியடைந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்வதோ நியாயமற்றது. எனவே, புதிய பாடநூல்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பில் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். பிளஸ் ஒன் பாடங்களின் கூடுதல் சுமை குறித்தும் மறுபரிசீலனை செய்யவேண்டும். மற்றபடி புதிய தமிழ்ப்பாடநூல் பள்ளிக்கல்வியில் ஒரு பாய்ச்சல்தான். இதற்கென உழைத்த பாடநூல் குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Exclusive: The Raya Sarkar Interview

Understanding the Modern Art History of Tamil Nadu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here