ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான கோயிலை நாங்கள் கட்டிய பிறகு, அயோத்தி முழுவதுமாக புதிய பொலிவு பெறும். புதிய அயோத்தியை நீங்கள் காண்பீர்கள். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பெருமளவு மேம்படுத்தப்படும்” என்று இரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறினார்.

தீவிர ராம பக்தரும், மதகுருவாகவும் உள்ள சாபீலி சரண், ராமர் கோவில் வரும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்கிறார். “இது பூலோக சொர்க்கமாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை அளித்த தீர்ப்பு, தொன்மையான கோவில் நகரில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணற்ற கோயில்களைக் கொண்டுள்ள அந்த நகரின் மக்கள் மற்றும் பூசாரிகளின் எதிர்பார்ப்புகள் வானுயர அதிகரித்துள்ளன. இந்தியாவின் கலாசார மையமாக அயோத்தி அமைய வேண்டும் என்றும் இந்து மதம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்பிக்கும் இடமாக உருவாக வேண்டும் என்று காவி உடையிலிருந்த பக்தர் ஒருவர் கூறினார்.

“அயோத்தியின் இடிபாடுகளை நீங்கள் பார்த்தால் அதன் பழங்கால அருமையை அறியலாம். அந்தப் பெருமையை நாங்கள் மீண்டும் உருவாக்குவோம்” என்று திரு. வேதாந்தி தெரிவித்தார்.

ராமர் கோயிலுக்கான காத்திருப்பு பலருக்கும் மிக நீண்டதாக அமைந்துள்ளது.

பாபர் மசூதி

சாபீலி சரண், கோயில் கட்டுவதற்கான பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறார். “நான் 25 ஆண்டு காலம் காத்திருந்தேன். கோயில் கட்டுவதற்கான இயக்கத்தில் பங்கேற்றவர்களில் பலர் காலமாகிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிருடன் இருக்கிறோம். இறுதியில் எங்கள் கனவு நனவாகப் போகிறது” என்று அவர் கூறினார்.

அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயிலைக் கட்டுவது என்ற நோக்கத்துடன் விசுவ இந்து பரிஷத் அல்லது விஎச்பி அமைப்பு 1984ல் ராமர் கோவில் இயக்கத்தைத் தொடங்கியது. இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடத்திலிருந்த பழங்கால கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என்று அந்த அமைப்பு கூறியது.

பாரதிய ஜனதா கட்சி இந்த இயக்கத்தை எடுத்துக் கொண்ட பிறகு அதன் தீவிரம் அதிகமானது. கட்சியின் முன்னாள் தலைவர் எல்.கே. அத்வானி தலைமையில் தீவிர பணிகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக 1992ல் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதற்கிடையில், கோயிலைக் கட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் வி.எச்.பி. தொடங்கியது.

அயோத்தியில் கரசேவைபுரம் என்று அவர்கள் குறிப்பிடும் பரந்த நிலப்பரப்பில் தொகுப்புகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள, சிற்பங்கள் செதுக்கப்பட்ட கற்பலகைகளை ஆய்வு செய்யும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷரத் சர்மா சாந்தமாக இருக்கிறார்.

“கோயில் கட்டுவதற்கான பணியை 1990 செப்டம்பரில் நாங்கள் தொடங்கியபோது, எங்கள் பணிகளுக்கு ஒரு நாள் பலன் கிடைக்கும் என்பதை அறிந்திருந்தோம்” என்று அவர் கூறுகிறார்.

கோயிலுக்கான பணிகள் 29 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. 60 சதவீத பணிகள் முடிந்துவிட்டன என்று வி.எச்.பி. நிர்வாகி சம்பத் ராய் தெரிவித்தார்.

தீபந்தங்களுடன் பூசாரிகள்

கோயில் பணிகள் நடைபெறும் வளாகத்தின் நுழைவாயிலில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள, கோயிலுக்கான மாடல், புதிதாக அமையவிருக்கும் கோவிலுக்கான வடிவமைப்பு மற்றும் பிரமாண்டத்தின் அம்சமாக இருக்குமானால், அது மிகப் பிரமாண்டமானதாக இருக்கும்.

கரசேவைபுரத்தில் நடைபெறும் கோயில் பணிகளை, வி.எச்.பி.யால் நிர்வகிக்கப்படும் ராமஜன்மபூமி நியாஸ் என்ற தனியார் அறக்கட்டளையால் கவனிக்கப்பட்டு வருகிறது. வடிவமைப்பில் மாற்றம் செய்ய வேண்டுமா எனத் தெரியவில்லை என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி கூறினார். முன்பு திட்டமிடப்பட்டதைவிடப் பிரமாண்டமானதாக புதிய கோயில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய இடத்தில் 67 ஏக்கர் பரப்பில் புதிய கோயிலைக் கட்ட வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. அந்த இடம் முழுக்க இப்போது அரசின் வசம் இருக்கிறது. சர்ச்சைக்குரிய ராமர் கோயில் – பாபர் மசூதி இடம் இந்த நிலத்துக்குள் அடங்கியுள்ளது.

ஆனால், புதிய கோவில் 200 ஏக்கர் பரப்பில் அமையும் என்று வேதாந்தி தெரிவித்தார். அதாவது, கோயில் கட்டுவதற்கு இன்னும் அதிக நிலம் தேவைப்படுகிறது என்பது இதன் அர்த்தமாக உள்ளது.

கோவில் கட்டும் பணியை மேற்கொள்ளவும் நிர்வகிக்கவும் புதிய அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ராமஜன்ம பூமி நியாஸ் போன்ற தனியார் அமைப்புகள் தேவையற்றதாகிவிடுமா?

தாங்கள் இதுவரை செய்த பணிகளை மத்திய அரசு புறக்கணித்துவிட முடியாது என்று விஎச்பி நிர்வாகி ஷரத் சர்மா கூறுகிறார்.

“இந்த இயக்கத்தில் முன்னணியிலிருந்து நாங்கள் செயல்பட்டிருக்கிறோம். கோவிலுக்கான ஆயத்தப் பணிகளை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். பிரதமர் மோதி எங்களுடைய மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசிப்பார் என நிச்சயமாக நம்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய உச்ச நீதிமன்றம்

நியாஸ் அறக்கட்டளையில் செல்வாக்கு மிகுந்தவராக உள்ள திரு. வேதாந்தி, கோவில் கட்டுவது தொடர்பாக கலந்தாலோசனைகளைத் தொடங்குவது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விரைவில் சந்திக்கவுள்ளார். “இந்த அறக்கட்டளை எப்படி மாறப் போகிறது என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் அறக்கட்டளையின் அங்கமாக இருப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. யோகி என்னை அழைத்துப் பேசினார். அயோத்தியில் என்னைச் சந்திப்பதாக அவர் கூறினார். நான் அவரை சந்திப்பேன்” என்று வேதாந்தி தெரிவித்தார்.

அறக்கட்டளையில் இடம் பெறுவது தொடர்பாக இந்து அமைப்புகளுக்குள் மோதல் ஏற்படும் என்று, கோயில் இயக்கம் குறித்துப் பல ஆண்டுகளாகச் செய்தி சேகரித்து வரும் அந்தப் பகுதி செய்தியாளர் மகேந்திர திரிபாதி கூறுகிறார். “இந்த முக்கியமான தருணத்திற்காகக் காத்திருந்தவர்கள், அறக்கட்டளையில் அரசு இடம் பெற வேண்டும் என்று கேட்பார்கள்” என்கிறார் அவர்.

அயோத்தி வழக்கில் பிரதான இந்து மனுதாரர்களில் நிர்மோகி அகாரா அமைப்பும் ஒன்று. உச்ச நீதிமன்றத்தில் இந்த அமைப்பின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த முடிவால் அதன் பூசாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனிப்பட்ட முறையில் ஆதங்கத்தில் இருக்கின்றனர்.

அறக்கட்டளையில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்றும், கோயில் கட்டி முடித்த பிறகு நிர்வாகப் பொறுப்பை தங்களிடம் அளிக்க வேண்டும் என்று கோருவார்கள் என்றும் திரு. திரிபாதி கூறுகிறார்.

ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக தங்களுடைய அமைப்பும் போராடி வந்திருக்கிறது என்று அகாராவின் தலைமை குரு மஹந்த் தினேந்திரா தாஸ் கூறியுள்ளார். “நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. ஆனால் முதன்மை மதகுருமார்களுடன் கலந்தாலோசித்த பிறகுதான் எங்களுடைய நிலைப்பாடு பற்றி முடிவு எடுப்போம்” என்று அவர் குறிப்பிட்டார்.

பாபர் மசூதி

இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளிலிருந்து வழிபாடு செய்வதற்கு வரும் பக்தர்கள் கூட்டம் கரசேவைபுரத்தில் அதிகரித்து வருகிறது. பல பிரிவுகளின் பூசாரிகள் அங்குச் சுற்றி வருகின்றனர்.

அனைத்து இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் அறக்கட்டளையில் சேர்க்கப்பட வேண்டும் என்று மஹந்த் ராம்சந்திர தாஸ் கருத்து தெரிவித்தார். கோவில் கட்ட வேண்டும் என்று நிர்மோகி அகாரா அமைப்பு நீண்ட காலமாகப் போராடி வந்தது என்பதால், அவர்களுக்கு ஏதாவது ஒரு பங்களிப்பு தர வேண்டும் என்று விஎச்பி நிர்வாகி திரு. ஷர்மா மார்பை உயர்த்திப் பேசுகிறார்.

இடிக்கப்பட்ட மசூதிக்குப் பதிலாக, புதிய மசூதி கட்டுவதற்கு முஸ்லிம்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே பாபர் மசூதி இருந்த அதே பகுதியில் தங்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று உள்ளூர் முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

மசூதிக்கு எந்தப் பகுதியில் இடம் தருவது என்பதை மாநில அரசு தான் முடிவு செய்யும் என உள்ளூர் இந்துக்கள் பலர் கூறுகின்றனர்.

இந்து மதத்தின் பெரும்பாலான புனித இடங்களை உள்ளடக்கிய நகருக்குள் எந்த இடத்திலும் முஸ்லிம்களுக்கு இடம் தரக் கூடாது என்று நாம் கருத்துக் கேட்ட பெரும்பாலான இந்து பூசாரிகள் கூறினர். நகரின் உள்பகுதியில் பழைய மற்றும் புதிய மசூதிகள் இருந்தாலும், புதிய மசூதி நகரின் பிரதானப் பகுதிக்கு வெளியே அமையக் கூடாது என்று முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here