தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்ற திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டையிலுள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்மலா தேவி மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்ததை அடுத்து, அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, நிர்மலா தேவியைப் போலீசார் கைது செய்து,
விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை ஏப்.28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆடியோவில் ஆளுநர் மாளிகை குறித்து நிர்மலா தேவி பேசியிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நிர்மலா தேவி என்பவர் யாரென்றே தனக்குத் தெரியாது என்றும், அவர் முகத்தைக்கூட தான் பார்த்தது இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை அதிகாரி சந்தானம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரே சிபிஐ விசாரணை குறித்தெல்லாம் முடிவு செய்ய முடியும் என்றும், அதனால் தற்போது அதற்கான தேவை இல்லை என்றும் தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் ஆளுநர் தட்டிக் கொடுத்தார். இது தொடர்பாக அந்தப் பெண் நிருபர், சமூக வலைத்தளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆளுநரின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்குத் துளியும் ஏற்புடையது அல்ல என விமர்சித்துள்ளார். அதேபோன்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரிகத்தையும் கடைப்பிடிப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி திமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன், இந்த விவகாரத்தில் ஆளுநரே விசாரணைக்குழுவை அமைத்துள்ளார் என்றும், புகாருக்கு உள்ளான ஆளுநரே விசாரிக்க உத்தரவிடலாமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here