புகழ் தொட்டுவிடும் தூரம்தான்

மகாராஜபுரம் சந்தானத்தின் மாணவர் கணேஷ், குருவைப் பின் தொடர்கிறார்.

0
185
கர்நாடக இசைக் கலைஞர் கணேஷ்.

சில வித்வான்கள் அதிர்ஷ்டவசத்தில் சர்ரென்று புகழ் உச்சிக்குப் போய்விட்டு அப்புறம் கொஞ்ச காலத்திலேயே, வாழ்வின் யதார்த்தத்தை ஜீரணிக்க முடியாமல் காலி நாற்காலிகளுக்குப் பாடிக் கொண்டிருப்பார்கள். அப்படி உச்சத்திற்கும் போகாமல் கீழேயும் வந்துவிடாமல் ஒரு நிலையான இடத்தில் தன் சங்கீத வாழ்வைத் தொடர்பவர் டாக்டர் கணேஷ். அவர் எங்கே பாடினாலும் கெளரவமான கூட்டம் வரும். அவரது ரசிகர்கள் அனைவருமே மறைந்த ஜாம்பவான் மகாராஜபுரம் சந்தானத்தின் சங்கீதத்தை கேட்டுக் கேட்டு ஊறிப் போனவர்கள். கணேஷ் சந்தானத்தின் பிரதம சிஷ்யர்களில் ஒருவர்.

மகாராஜபுரம் பாணி என்பது அலாதியானது. அதில் பக்தியும், பாவமும் அழகாக கலந்திருக்கும். அவரது குரலிலேயே ஒரு வசீகரம் இருக்கும். போ சம்போ, நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா, நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும், ஸ்ரீ சக்கர ராஜா, விளையாட இது நேரமா.. என்று அவர் சபாக்களில் அடிக்கடி பாடியவை அத்தனையும் ஹிட். சந்தானத்தின் மகன்கள் ராமச்சந்திரன், சீனிவாசன் ஆகியோர் தந்தையின் சங்கீதத்தைத் தொடர்கிறார்கள். இன்னொரு புறம் டாக்டர் கணேஷ் போன்ற சிஷ்யர்கள்!

இதையும் படியுங்கள்: மெஹபூப்களின் நாகஸ்வரம்

பாரதிய வித்யா பவன் மினி ஹாலில் டாக்டர் கணேஷ், பாடியபோது அந்த மகாராஜபுரம் பிராண்ட் இசையை நீண்ட நாட்களுக்குப் பிறகு மெய்மறந்து ரசிக்க முடிந்தது! அன்று கர்நாடக தேவகாந்தாரி ராகத்தை எடுத்து அவர் கம்பீரமாக உலவ விட்டபோது கேட்கவே பரமானந்தமாக இருந்தது! இந்த ராகமே பிற்காலத்தில் ஆபேரியாகிவிட்டது. இதையே ஹிந்துஸ்தானி ஸ்டைலில் பிரயோகங்களை மாற்றினால் பீம்ப்ளாஸ் ஆகிவிடும். முத்துசுவாமி தீட்தர் கர்நாடக தேவகாந்தாரி என்றுதான் சொல்லியிருக்கிறார். நாதஸ்வரத்திற்கு மிகவும் ஏற்ற ராகம் . தஞ்சாவூர் பக்க கிராமங்களில் மணிக்கணக்காக இதை வாசிப்பார்கள். ‘காயாரோனேயம்’ என்று துவங்கும் தீட்சதர் கீர்த்தனையை சம்பிரதாயாம் மீறாமல் பாடினார் கணேஷ். காக்ரா சோலியும், பாட்டியாலாவும் அழகுதான் என்றாலும் கட்டுபவர்கள் கட்டினால் மடிசாரின் அழகோடு ஒப்பிடமுடியுமா?

இதன் பிறகு, அன்று கணேஷ் பிரதானமாக எடுத்துக் கொண்டது சங்கராபரணம். சில பாடகர்கள் இந்த ராகத்தை எடுக்கத் தெரியாமல் காம்போதி போல எடுத்து இரண்டாவது நிமிடத்தில் நிதானத்திற்கு வருவார்கள். இதற்கெல்லாம் காரணம், சுத்தமான பாடாந்திரம் இல்லாததுதான். சங்கராபரணமும், காம்போதியும் அக்கா, தங்கை, மாதிரி. சாயலில் சற்று ஒற்றுமை இருந்தாலும் ஸ்வரங்கள் மாறுபடும். கணேஷ் அந்தத் தவறை துளியும் செய்யவில்லை. மகாராஜபுரம் பாணியாயிற்றே. அதில் தவறு வர வாய்ப்பே இல்லை. சங்கராபரணத்தில் சரமாரியாக சங்கதிகள் வந்து விழுந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு-துடைத்து வைத்த வெள்ளிப்பாத்திரங்கள்போல. அன்று காஞ்சி மகா பெரியவரின் ஆராதனை தினம் என்பதால் சுப்பராம தீட்சதரின் ‘சங்கராசாரியம் பஜேம’ கீர்த்தனையை, அவரது குருநாதர் வழியில், பக்தி பூர்வமாகவும், சிரத்தையாகவும் பாடினார்.

லய விஷயத்தில் முன்பைவிட அவரிடம் நிறைய முன்னேற்றம் தெரிந்தது. ஸ்வரத்தில் நல்ல கற்பனை திறன். நம் சங்கீதமே மனோதர்ம சங்கீதம்தானே.

வயலின் வாசித்த கல்யாணி சங்கர், பாடகரை அழகாக பின் தொடர்ந்தார். அது ரொம்ப முக்கியம். பக்கவாத்தியமாக உள்ள போது நம் மேதாவிலாசத்தையெல்லாம் கொட்டி தீர்த்துவிடக்கூடாது. மிருதங்கம் சிதம்பரம் பால சங்கரும், மோர்சிங் ஏ.எஸ்.கிருஷ்ணனும் சரியாக ஒத்துழைத்தார்கள்.

அன்று மனதில் நின்ற மற்றொரு பாடல், “காஞ்சி பெரியவரே, கருத்தில் நிறைந்தவரே”.. ரஞ்சனி ராகத்தில் அமைந்த இப்பாடலை கேட்ட போது அந்த சாந்த மூர்த்தி கண் எதிரே தோன்றியது போன்ற பிரமை.

இதையும் படியுங்கள்: அருணா காட்டில் மழை

கணேஷிடம் எல்லாம் இருக்கிறது. வேறு என்ன குறை? ஏன் அடுத்த கட்டத்திற்கு போகவில்லை? ஜனரஞ்சக மசாலா ஐட்டங்களை கொஞ்சம் சேர்க்க வேண்டுமோ? சந்தானம் அங்கேதானே ஜெயித்தார்!

*அடுத்த கட்டுரை மதுரை மணி அய்யரின் இன்றைய வாரிசு சூரிய பிரகாஷின் கச்சேரி.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்