(கண்மணி, இப்போது வாசகர், சென்னை, மே 3, 2022)

எல்லா சாமியும் ஒண்ணுதான் என்று சொல்கிறீர்கள். என்ன ஆதாரம் இருக்கிறது?

”வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா, அங்கோர் வெற்பு நொறுங்கி பொடிப்பொடியானது வேலவா,” என்று பாடுவார் பாரதியார். கடவுளின் சிறு அசைவில் மலைகளும் துகள்களாகி விடும் என்பதே பாரதியார் தரும் இந்தக் காட்சி. திருக் குர் ஆனின் 7வது அத்தியாயம், 143வது வசனமும் இதே காட்சியை அழகாய் விவரிக்கிறது. இறைத்தூதர் மோசஸ் கடவுளைப் பார்க்க வேண்டுமென்று பிடிவாதமாக இருப்பார். கடவுள் மலையில் இறங்கும்போது அது தூள், தூளாகி விடும். மோசஸ் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து விடுவார். திருக் குர் ஆனில் திளைக்கும் மாதமே ரமலான். அந்த வேதத்தின் தித்திப்பில் எல்லா சாமிகளும் ஒண்ணுதான், எல்லா வேதங்களும் ஒண்ணுதான் என்பது புலப்படும்.

(மணிகண்டன், இப்போது வாசகர், சேலம், ஜூன் 14, 2021)

இந்திய ஒன்றியத்தைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஒன்றியம் என்ற சொல் நம்மை ஒன்றுபடுத்துகிறது; நம்மைப் பலப்படுத்துகிறது. நமது அரசியல் சாசனத்தின் முதல் ஷரத்தே அதுதான். இந்தியா என்கிற பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுக்கிறது முதல் ஷரத்து. நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும், வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதுதான் இந்த ஷரத்தின் நோக்கம். நீதியையும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் உறுதியளிக்கும் நமது சாசனத்தின் முகவுரைக்கு அடுத்தபடியாக “மாநிலங்களின் ஒன்றியம்” என்கிற நமது நாட்டின் அடிப்படைத் தன்மை மிகத் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு என்று கூறும்போது, நம்மையெல்லாம் ஒன்றுபடுத்திய அரசு என்கிற அழகிய பொருள் வருகிறது. ஒன்றி வாழ்தல் என்று சொன்னால் இணக்கமாக வாழ்தல் என்று அர்த்தம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் வழிகோலும் விதத்தில் இந்தச் சொல்லை நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த அண்ணல் அம்பேத்கரும் பிற அறிஞர்களும் முதல் ஷரத்தாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஒன்றியம் என்பது சுமுகம். ஒன்றியம் என்பது ஒற்றுமை. ஒன்றியம் என்பது வலிமை. ஒன்றியம் என்பது இணக்கம்.

(அம்புஜம், இப்போது வாசகர், சென்னை, மே 27, 2021)

சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளிக்கூடத்தில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர், பெண் குழந்தைகளிடம் செக்ஸ் அத்துமீறல்களைச் செய்திருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது நம்முடைய குழந்தைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஒரு சமூகம் தனது குழந்தைகளை எப்படி நடத்துகிறது என்பது பற்றிய பிரச்சினை. நமது பிள்ளைகளை நாம் பேசுவதற்கு அனுமதிக்கிறோமா என்பதைப் பற்றிய விவகாரம் இது. செக்ஸ் பற்றிய முழுமையான அறிவை நமது பிள்ளைகளுக்குப் போதிக்காமல் அதை மறைபொருளாக வைத்திருப்பதால், அதனைச் சில நபர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பேசாத பொருளின் பெயரால், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்துமீறுகிறார்கள். அத்துமீறலுக்கு உள்ளான பெண் குழந்தைகள் மனம் திறந்து பேசுவதற்கான சூழ்நிலையையே நாம் உருவாக்கவில்லை. இந்தப் பிரச்சினை நமது குழந்தைகளது மனதை எப்படிப் பாதிக்கும் என்பதைப் பற்றிச் சிந்தித்து விடை காண வேண்டிய நேரம் இது. மனசைப் பாதிக்கும் எதுவும் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதனை உணர்ந்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய வேளை இது. இந்தக் கொள்ளைநோய்க் காலம் நீதிக்கான காலமாக இருக்கிறது. அநீதி செய்யப்பட்ட பெண் குழந்தைகள் வெளியில் வந்து பேசியிருக்கிறார்கள். அதனை மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு சமூகமாக நாம் அனைவரும் நியாயம் செய்ய வேண்டிய பெரும் தருணம் இது. இதைத் தவிர எதுவும் இந்தப் பிள்ளைகளுக்கு மருந்தாகாது.

(சஹானா, இப்போது வாசகர், திருநெல்வேலி, மே 23, 2021)

“கர்ணன்” எப்படிப்பட்ட படம்?

மக்களின் சோத்தைத் தடுப்பது, பைசாவைத் தடுப்பது, படிப்பைத் தடுப்பது என்கிற “டெக்னிக்குகள்” வழியாக, அவர்களை அடிமைப்படுத்துவது என்கிற குறுக்குப் புத்தியைச் சவுக்கடிக்கும் சித்திரம் இது. கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றுவதற்குக்கூட நிற்காத பேருந்தின் மீது ஒரு சிறுவன் எறிகிற கல்லில் இந்தப் படம் உயிர் பெறுகிறது. பல வருஷங்களாக நடக்கும் அநீதிக்கு எதிரான அடிக்கல் அதுதான். நிற்காத பேருந்துகளால், ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர முடியாமல், உயிரிழந்த சிறுமி பேச்சியின் அண்ணனாக கதையின் நாயகன் தனுஷை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கந்தையாவின் மகன் கண்ணபிரானாக இருக்கும்போது, மாடசாமியின் மகன் ஏன் துரியோதனாக இருக்கக்கூடாது என்பது சமகாலத்துத் தமிழ்நாட்டின் கேள்வி. நிமிர்ந்து நின்று முகத்துக்கு நேரே பேசுவதற்காக அடிப்பாய் என்றால், திருப்பி அடிப்பேன் என்கிற செய்தியைத் தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார் மாரி செல்வராஜ். தமிழ்நாடு தனது கதைகளைத் திரையில் வடிப்பதன் மூலமாக, நியாயத்தின் பக்கமும் உண்மையின் பக்கமும் தன்னை முன்னோக்கிச் செலுத்துகிற சமூகமாக இருக்கிறது. இந்தக் கதைசொல்லி மரபும் பாரம்பரியமும் என்றும் தொடரும் என்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. என்றும் நிலைக்கும் நீதி பற்றிய மக்களின் அழியாத நம்பிக்கைகளைக் காட்டுப் பேச்சியாகவும் கால்கள் கட்டப்பட்ட கழுதையாகவும் வடிவமைத்துச் சிறப்பாக மக்களைக் கட்டிப் போட்டிருக்கிறார் இயக்குனர்.

(மெய்யழகன், இப்போது வாசகர், கோயம்புத்தூர், மே 5, 2021)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பத்து ஆண்டுகள் காத்திருந்து மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்கிறது. திமுகவைத் தடுப்போம் என்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி பகிரங்கமான அறைகூவல் விடுத்தது. இதையே திமுக தனது வியூகத்துக்கான அடிப்படையாக மாற்றியது. திமுகவுக்கு எதிராகப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான வாக்கு என்ற பரப்புரையைத் தீவிரப்படுத்தியது. இந்தக் கொள்கைரீதியான மெசேஜிங்கில் உறுதியாக இருந்ததுதான் மதச்சார்பற்ற கூட்டணியின் பங்காளிகள் ஒவ்வொருவரையும் அழகாகப் பிணைத்துப் போட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனை ஒரு நேர்காணலில் பதிவு செய்திருந்தார். தேர்தல் ஜனநாயகத்தின் ஆகப்பெரிய பலமே, இந்தக் கூட்டணியின் வலிமைதான். 54 வருடமாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைச் சிறப்பாகக் கையாண்டார். தேர்தல் வியூக வகுப்பாளர்பிரசாந்த் கிஷோர், திமுகவுக்குள் இருந்த பிராந்திய/மண்டல ஆளுமைகளால் உண்டான தடைகளைத் தகர்த்தெறிந்தார். இந்தத் தடைகளும் கிராமங்களில் செல்வாக்கு இன்மையும் 2016இல் பின்னடைவைத் தந்திருந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக கிராமங்களுக்குத் திரும்பியிருக்கிறது. இது அடித்தளத்தில் திமுகவுக்கு ஆதரவான எழுச்சியைச் சாத்தியமாக்கியது. வெற்றி கைகூடியது.

(சாரதா, இப்போது வாசகர், திருச்சி, ஏப்ரல் 30, 2021)

கொரோனா கொள்ளைநோயின் இரண்டாவது அலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாம் என்ன செய்ய வேண்டும்?

இறைவன் இந்தப் பிரபஞ்சத்தை உண்மையின் மீதும் நியாயத்தின் மீதும் கட்டி எழுப்பியிருக்கிறான். உண்மையிலிருந்தும் நியாயத்திலிருந்தும் பெரும் பிறழ்வுகள் நிகழ்ந்த வரலாற்றுத் தருணங்களின் அடையாளமாக கொள்ளை நோய்கள் அமைந்திருக்கின்றன. பழங்கால எகிப்தில் கொடுங்கோலாட்சியின் உச்சத்தில் பத்து கொள்ளை நோய்கள் உண்டாகி காலப்போக்கில் கொடுங்கோன்மை அழிந்துபோனதை பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. மக்கள் நன்றி மறந்தபோது நீரினால் பேரழிவு ஏற்பட்ட பண்டைக்காலத்தைப் பற்றி வேதங்கள் விவரிக்கின்றன. பெரும் பிறழ்வுகளும் நன்றி மறத்தலும் நம் காலத்தின் அடையாளங்களாக இருக்கின்றன. இவற்றை உறுதி செய்வதாகவே, கொரோனா கொள்ளை நோயின் இரண்டாவது அலை நிகழ்ந்து வருகிறது. இது நம்மைப் பற்றியது. நமது சொந்தங்களைப் பற்றியது. இந்தக் கொள்ளை நோயின் தாக்கத்தைத் தணிக்க நம்மால் முடிந்ததையெல்லாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். பெரும் தவம் செய்து இதிலிருந்து மீள முடியுமாக இருக்கலாம். அந்தப் பெரும் தவத்தை நாம் செய்ய வேண்டும்.

(அகல்யா, இப்போது வாசகர், சென்னை, மார்ச் 16, 2021)

என்னிடம் இதை எழுதும்போது எந்த வேலையும் இல்லை. ஒரு பைசாவும் இல்லை. ஏராளமான நிராகரிப்புகள். விரட்டப்பட்டவள் நான். என்ன செய்வது?

போதாமையைப் பலமாக்கு. இல்லாமையை எரிபொருளாக்கு. ஒளி எப்போதும் இருக்கிறது. அதைக் காணும் கண்கள் நமக்கு வேண்டும். அந்த ஒளியாகவே இருக்கும் தைரியம் நமக்கு வேண்டும். உன்னை மேலும் வலுவாக்குவதற்காக மட்டுமே இயற்கை இந்தச் சூழலை உருவாக்கியிருக்கிறது. புலம்பெயர்ந்தவர்களுக்கு அதற்கான உடல் வலிமையைத் தந்தது இயற்கைதான். புலம்பெயர்வதற்கான கற்பனை வலிமையைத் தந்ததும் இயற்கைதான். ஆகவே,உன்னை எது கொல்லவில்லையோ, அது உன்னை வலுவாக்குகிறது. உழைத்துக் கொண்டேயிரு. நாள்தோறும் எழுந்து நான்கு புதிய மனிதர்களையாவது சந்தித்துப் பேசு. புதிதாகப் படி. உன் உலகம் விரிவடையும். விரட்டப்பட்ட உன்னை ஏற்றுக்கொள்ள ஒரு பெரிய உலகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதனைத் தேடிக் கண்டுபிடி. உனது மொழியால் இந்தக் கடினச் சூழலைக் கடந்து வா. உனது சொற்களையும் உனது அறிவையும் உன்னிடமிருந்து யாரும் களவாடிவிட முடியாது. மொழி என்பது நம்பிக்கை.சமூகம் என்பது பாதுகாப்பு. உனக்கான சமூகத்தை உனது நம்பிக்கையால் வார்த்தெடு. நான் அந்தச் சமூகத்தில் இருப்பேன்.

(கீதா, இப்போது வாசகர், சென்னை, பிப்ரவரி 9, 2021)

இரவு 12 மணி வரைக்கும் கைப்பேசியில் உரையாடி விட்டுத் தூங்கச் செல்கிறேன். தூக்கம் வருவதற்கு அதிகாலையாகி விடுகிறது. காலையில் எனது வேலைகளை ஆரம்பிப்பதில் தாமதம் உண்டாகிறது. இதனைச் சரிசெய்வது  எப்படி?

நிறைய மக்களின் மனசிலுள்ள கேள்வியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். நன்றி. நமது உயிரும் உடலும் பேச்சும் மூச்சும் சூரியனுக்குப் பழக்கப்பட்டவை. அந்த ஒளியில்தான் உயிரின், உடலின் இயக்கம் நிர்ணயமாகிறது. அந்தியில் கதிரவன் அஸ்தமிக்கும்போது உடல் ஓய்வெடுப்பதற்கான சமிக்ஞைகள் இயற்கையிடமிருந்து கிடைக்க ஆரம்பிக்கின்றன. அந்தச் சமயத்தில் நமது வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட குட்டி சூரியன் தலையிடுகிறது. ஆம். மானுட குலம் தற்காலத்தில் உருவாக்கியிருக்கும் குட்டி சூரியனுக்குப் பெயர் கைப்பேசி. இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி நேரம் அந்தக் குட்டி சூரியனோடு நீங்கள் அளவளாவும்போது, சூரியன் மறைந்து பல மணி நேரமானதை மூளை மறந்துபோகிறது. குட்டி சூரியனின் ஒளியிலிருந்து விடுபட்டு நீங்கள் தூங்குவதற்குள் அதிகாலையாகி விடுகிறது. இதிலிருந்து  உங்கள் கண்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தூங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக அல்லது ஒரு மணி நேரம் முன்னதாக உங்கள் குட்டி சூரியனுக்கு ஓய்வு கொடுத்து விடுங்கள். உங்கள் படுக்கையிலிருந்து தொலைவாக குட்டி சூரியனைக் கட்டிப் போடுங்கள். காலையில் ஆதவன் மிகச் சரியாக உங்களை எழுப்பி விடுவான். நல்லதே நடக்கும்.

(சுடர்விழி, இப்போது வாசகர், தஞ்சாவூர், பிப்ரவரி 2,2021)

உங்களுக்கு இசைப் பாடல்கள் பிடிக்குமா? உங்கள் தினசரி வாழ்வில் அவற்றின் பங்கு எவ்வளவு இருக்கும்?

அதிகாலையில் ”திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்” பாடல் கேட்டு உற்சாகமாக எழுந்திருக்கிறேன். ”அல்லாஹு அக்பர்” என்ற இசையொலியால் மகிழ்ச்சியாக விழித்திருக்கிறேன். ”தந்தையார் செய்த தச்சுத் தொழிலையே தனயனும் செய்தாரே” என்று தேவாலயத்திலிருந்து விடிகாலையில் ஒலிக்கும் பாடலில் மயங்கியிருக்கிறேன். பேருந்துக்காக காத்திருக்கும்போது ஈகிள் மொபைல்ஸ் கடையிலிருந்து ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பாடல்களைக் கேட்டு வியக்கிறேன். டீக்காக வெளியே வரும்போது போத்திஸ் ஹைப்பரில் அதிரும் மெல்லிசைக்குத் தாளம் போடுகிறேன். சஞ்சய் சுப்பிரமணியன் “பெற்ற தாய் தனை மக மறந்தாலும்” பாடும்போது உருகிப் போயிருக்கிறேன். டி.எம்.கிருஷ்ணா தாகூரின் முழுமையான தேசிய கீதத்தைப் பாடியபோது கிறங்கிப் போய்விட்டேன். எத்தனை கோடி அதிசயம் செய்தாய் ஆண்டவா. இசை சூழ் உலகு நம்முடையது.

(விஜய் தமிழன், இப்போது வாசகர், நாகர்கோவில், ஜனவரி 31,2021)

விஜய்யின் “மாஸ்டர்” எப்படி இருக்கிறது?

தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் படம் “மாஸ்டர்.” மெசேஜ் வேணும், மசாலா வேணும், கதை வேணும் என்கிற அபரிமிதமான வளர்ச்சி இது. இந்த மூன்றுக்கும் தொடர்ந்து தன்னை ஆயத்தமாக வைத்திருக்கிறார் விஜய். சாராயம் குடிக்காத ஒருவர், “சாராயம் குடிக்காதே” என்று சொன்னால் மதிப்பு இருக்காது. சாராயம் குடித்துப் பேரிழப்பைச் சந்தித்த ஒரு கதாபாத்திரமாக விஜய் “போதை என்பது குற்றங்களைப் பற்றிய குற்ற உணர்வை அழிக்கிறது” என்பதைத் தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார். மாணவர்கள் அரசியல் பழக வேண்டுமென்பதைப் பேசியிருக்கிறார். வெறுப்பை வளர்க்க வேண்டாமென்று பாடியிருக்கிறார். கனமான கதைக் களத்தில் தொடர்ந்து பயணம் செய்யும் இயக்குனராக முன்னால் வருகிறார் லோகேஷ் கனகராஜ். போதைக்கு எதிராக ஒரு திரை யுத்தத்தை அவர் நடத்தி வருகிறார். தமிழ்ச் சமூகத்தின் ஆகச்சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவர் விஜய். 48 நாட்கள் திரையரங்குகள் “மாஸ்டர்” வசூல் செய்த பிறகு வீட்டில் அமர்ந்திருப்பவர்களும் அமேஸான் ப்ரைமில் படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் கலை வரலாற்றில் நீங்காத இடம் பெற்றுள்ள விஜய்யும் விஜய் சேதுபதியும் சேர்ந்து அசத்தியிருக்கும் படம் “மாஸ்டர்.”

(பிரபாலினி, இப்போது வாசகர், கலிஃபோர்னியா, ஜனவரி 25,2021)

தமிழ் இதழியலுக்குப் பெண்கள் ஆற்றிய பங்கைப் பற்றிய ஆவணப்படுத்தல்கள் சரியாக இருக்கின்றனவா?

மிக முக்கியமான கேள்வி, பிரபாலினி. தமிழ் ஊடகவியலுக்கு நூற்று ஐம்பது வருடங்களுக்கும் மேலாகப் பெண்கள் பெரும்பங்காற்றி வருவதற்குச் சாட்சியம் சொல்லும் ஆவணங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. 2019இல் ஆராய்ச்சியாளர் கோ.ரகுபதி தமிழின் முன்னோடி பத்திரிகையாளரான வி.பாலம்மாளைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். தடாகம் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. வி.பாலம்மாள் ஆசிரியராக இருந்து வழிநடத்திய பத்திரிகை “சிந்தாமணி.” கோ.ரகுபதியின் நூல் வருவதற்கு முன்னால் வி.பாலம்மாளின் பங்களிப்பை அடையாளப்படுத்தியவர் பேராசிரியை அரங்க. மல்லிகா. வி,பாலம்மாளின் சம காலத்தில் வை.மு.கோதைநாயகி அம்மாள், “ஜகன்மோகினி” பத்திரிகையை நடத்தியது பற்றி அனேகம் பதிவுகள் உள்ளன. ஏ.ருடிஸில், கி. சாவித்திரியம்மாள், எஸ்.விசாலாட்சி, குகப்ரியை (இராஜலட்சுமி அம்மாள்), ச.கமலாவதி, கோ.சொப்பன ஈஸ்வரி, இங்கலீஸ், மு.மரகதவல்லி, வி.கே.பிளாக், எம்.மங்களம்பாள், ஆர்.ஜெயம்மாள், சித்தி ஜுனைதா பேகம், மஞ்சுளா ரமேஷ், சிவசங்கரி, வாஸந்தி, சந்திரா ராஜசேகர், அனுராதா ரமணன், சீதா ரவி என்று எண்ணற்ற பெண்கள் சமைத்த பாதையில் இன்று நூற்றுக்கணக்கில் பெண் பத்திரிகையாளர்கள் தமிழ்ச் சமூகத்துக்குப் பங்காற்றி வருகிறார்கள்.

(அனுராதா, இப்போது வாசகர், பெங்களூர், ஜனவரி 14, 2021)

இப்போதுவுக்குப் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

உங்களுக்கும் இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணியால் எழுதப்பட்ட “தேர்தல் அரசியல்” என்ற நூலைப் படித்தேன். பாவை பப்ளிகேஷன்ஸால் வெளியிடப்பட்டது. நம்முடைய ஜனநாயகத் தேர் நகர்ந்து வந்த பாதையைப் புரிந்துகொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். 1952 முதல் 2001 வரையிலான தேர்தல் போக்குகளைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ள புத்தகம். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியும் அவசியம் வேண்டும். ஆகவே மக்கள் எதிர்க்கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும். இப்படிச் சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி. இதுபோன்ற தேர்தல் அரசியல் சார்ந்த சிந்தனைகளையும் காலந்தோறும் மெருகேறி வந்த மக்களின் தேர்வுகளையும் பற்றி மிகவும் ஆழமாகவும் விரிவாகவும் பதிவு செய்திருக்கிறார் தி.சிகாமணி. தேர்தல் போக்குகளை வெறுமனே தரவுகளாகச் சுருக்கிவிடாமல் அதன் சமூகப் பொருளாதாரப் பின்னணி நிகழ்வுகளையும் பொருத்திப் பார்த்து எழுதியிருப்பதுதான் இந்த நூலைக் காலம் போற்றும் ஆவணமாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிப்பாக மாற்றியிருக்கிறது.

(சாரதா, இப்போது வாசகர், கடலூர், ஜனவரி 12, 2021)

நீங்கள் அதிசயங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அதிசயங்களை நம்புகிறீர்களா?

உங்களுக்கான பதிலை இந்தக் கணினியில் தட்டச்சு செய்யும் அதிசயம் இதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எனது முப்பாட்டிக்கு அதிசயமாக இருந்ததெல்லாம் இன்றைக்குச் சாதாரணமாக நம் கண் முன்னால் நடந்துகொண்டிருக்கிறது. இதனை நீங்கள் படிக்கும் அதிசயம் ஒரு கைப்பேசியின் திரையிலோ, ஒரு கணினியின் திரையிலோ நடக்கிறது. நீங்களே ஓர் அதிசயம்தானே. உங்கள் உடலிலுள்ள ரத்த நாளங்களின் நீளம் 66,000 மைல்கள். இது பூமியின் சுற்றளவின் இரண்டரை மடங்கு தூரம். நமது மூச்சு பேரதிசயம், பேச்சு பேரதிசயம் என்பதற்குக் கொரோனா கொள்ளைநோயால் பாதிக்கப்பட்ட எந்த மனிதரும் சாட்சியம் கூறுவார். சற்று கூர்ந்து பாருங்கள். இந்த உலகம் எந்தவொரு குறையுமில்லாத அழகிய ஓவியமாகத் தெரியும். இந்தப் பெரும் சித்திரத்தின் எந்தவொரு துண்டும் குறையற்றதும், பரிபூரணமானதுமாக இருக்கும். கணந்தோறும் அதிசயங்கள் நடக்கும் பூமியில் நாம் இருக்கிறோம். நமது இருப்பும் அதிசயமே. ஒவ்வொரு நொடியும் அதிசயமாக இருக்கிறது. நமது கண்கள் அவற்றைக் காண வேண்டும்.

(கந்தன், இப்போது வாசகர், சேலம், டிசம்பர் 31, 2020)

புத்தாண்டு 2021க்கான உங்கள் செய்தி என்ன?

நம்மைப் புதுப்பித்துக் கொள்ளவே ஒவ்வொரு புது வருஷமும் பிறக்கிறது. நமது சொந்தங்களுடன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். நமது நட்புகளுடன் பிணைப்பை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய சொந்தங்களைத் தேடிச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு உயிரும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை 2020இன் கொரோனா கொள்ளைநோய் நினைவுபடுத்தியுள்ளது. இதற்கு முன்பு இந்தக் கொள்ளைநோய் அளவுக்கு மனித குலத்தைப் பாதித்த சம்பவம் என்றால், அது இரண்டாம் உலகப்போர். அந்தப் போருக்குப் பின் மக்களின் உழைப்பும் உற்பத்தியும் பெருகியதுபோல, இப்போதும் நிகழும் என்று கணிக்க முடிகிறது. நம் நாட்டைத் தலைநிமிர்த்த நாம் ஒவ்வொருவரும் சக்தி பெற வேண்டும். அதற்கு வேண்டிய எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்வோம். எல்லாம் நமது ஊரே. எல்லோரும் நம் சொந்தங்களே.

(மானஸா, இப்போது வாசகர், சென்னை, டிசம்பர் 31, 2020)

அரசியலுக்கு வரவில்லையென்று ரஜினிகாந்த் சொன்னதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ரஜினிகாந்துக்கு ஆண்டவன் மீது நிறைய பக்தி உண்டு. ஆண்டவன் உத்தரவிட்டால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் என்பது அவருடைய நீண்ட கால நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் பிசகாமல், வழுவாமல் இருக்கிறார் ரஜினிகாந்த். அரசியல் என்பது நாட்டை வழிநடத்தும் பெரிய வேலை. நீங்கள் அரசியல் தலைமை எடுக்க வேண்டுமானால், அந்த வேலைக்குத் தலைசிறந்த ஆள் நீங்கள்தான் என்பதை நீங்கள் மிகவும் உறுதியாக நம்ப வேண்டும். அந்த வேலைக்கு நேரத்தையும் உழைப்பையும் கொடுக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காத நிலையில், ஆண்டவன் ரஜினிகாந்தைப் பத்திரமாகப் பாதுகாத்துவிட்டார். நம்பினார் கைவிடப்படார்.

(வைஷ்ணவி, இப்போது வாசகர், சென்னை, டிசம்பர் 28, 2020)

இறைவன் மிகுந்த கருணையுள்ளவன். பேரன்பு கொண்டவன். அப்படியிருந்தும் கொரோனா கொள்ளைநோய் போன்ற கொடிய நோய் மூலமாக மனித குலத்தைப் பரிசோதிப்பது ஏன்?

ஏராளமான மக்கள் மனதிலுள்ள கேள்வியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இறைவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையவன். கருணையே வடிவமானவன். அந்த ஆண்டவனே சொல்கிறான். மனிதர்கள் தமக்குத் தாமே தீமைகளை விளைவித்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் தமக்குத் தாமே நஷ்டங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பழைய ஏற்பாடு சொல்லுகிற பத்து கொள்ளைநோய்கள் உணவைப் பற்றியது. நாம் காணும் கொரோனா கொள்ளைநோய் பணத்தைப் பற்றியது. எல்லோருக்கும் உணவு இருந்தபோதும் சிலருக்கு மட்டும் உணவைத் தடுத்த காலத்தில் பத்து கொள்ளைநோய்கள் வந்தன. சிலரைப் பட்டினி போடுவது சரிதான் என்று சொன்ன மக்கள் எல்லோரும் பஞ்சத்தையும் பசியையும் பார்க்கும்படி ஆனது. அதற்குப் பின்னர் இந்தப் பூமியில் உணவு ஜனநாயகப்பட்டது. எல்லோருக்கும் உணவைப் பகிர்ந்தளிக்கும் மனநிலை மெல்ல மெல்ல வந்தது. உணவைத் தடுக்கும் கெட்ட பழக்கத்திலிருந்து மனித குலம் தன்னை விடுவித்துக்கொண்டது. கடந்த நாற்பது ஆண்டுகளில் சக மனிதர்களுக்குப் பணம் போய் சேர்வதைத் தடுக்கிற பொய்யும் வஞ்சகமும் தலைவிரித்தாடியது. பணத்தைத் தடுக்கும் இந்தப் போக்கு ஆட்சியாளர்கள் வழியாகவும் அமைப்புகள் மூலமாகவும் நிறைவேற்றப்பட்டு வந்தது. கொரோனா கொள்ளைநோயில் ஆட்சியாளர்களும் அமைப்புகளும் பணம் சம்பாதிக்கும் வழிகளும் சுருங்கிப் போயின. சாதாரண மக்கள்தான் செல்வம். அவர்களின் உழைப்புதான் பணம். இந்தப் பேருண்மை வெட்ட வெளிச்சமாகியது. சக மனிதர்களுக்குப் பணம் போய்ச் சேருவதைத் தடுக்கிற கெட்ட பழக்கம் இனி மெல்ல மெல்ல மறையும். பணம் ஜனநாயகப்படும். ஒவ்வொரு கொள்ளை நோயும் சமூக மாற்றத்தைப் பற்றியது. இந்தக் கொள்ளைநோய் பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்தும். கருணையை ஜனநாயகப்படுத்தும்.

(அகல்யா, இப்போது வாசகர், சென்னை, டிசம்பர் 23, 2020)

அறிவியலும் இறை நம்பிக்கையும் ஒன்றாகப் பயணம் செய்ய முடியுமா?

நல்ல கேள்வி இது. இதைக் கேட்ட உங்களுக்குக் கோடி நன்றிகள். அறிவியல் என்பது உண்மையைத் தேடுவதாகும். இறை நம்பிக்கை என்பது உண்மையின் பிரிக்கவியலாத ஒரு பகுதியாகும். உலகெங்கும் இந்த இரண்டும் இணைந்தே பயணம் செய்கின்றன. கணித அறிவியல் மேதை சீனிவாச ராமானுஜன் இதனைச் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு கணிதச் சமன்பாடும் இறைவன் படைத்த அழகின் வெளிப்பாடுதான் என்பது அவருடைய கூற்று. இயற்கையில் இருக்கும் திட்டவட்டமான ஏற்பாடுகளை, வடிவங்களை, ஒழுங்குகளை ஆராய்ந்து, உணர்ந்து சூத்திரங்களாக வெளிக்கொண்டு வருகிற செயல்பாடுதான் அறிவியல். இறை நம்பிக்கை என்பது உங்களுக்கு ஒரு சமூகத்தைத் தருகிற வழியாக இருக்கிறது. குடும்பமாக, ஊராக அது உங்களுக்கான ஆதரவுத் தளமாக கைகொடுக்கிறது. இறை நம்பிக்கை மூலமாக நீங்கள் தினசரிப் பிரார்த்தனைகளைக் கண்டடைகிறீர்கள். அது உங்களுடைய உணவாக, ஊன்றுகோலாக மாறுகிறது. பரிணாமத்தைப் பேசுகிறது அறிவியல். ஒவ்வொரு நொடியும் நடக்கும் தேர்வைப் பற்றியது பரிணாம வளர்ச்சி. ஒவ்வொரு நொடியும் பெருக்கெடுக்கும் அறிவும் ஆற்றலுமாக சக்தியைக் கொடுக்கிறது இறை நம்பிக்கை. பொய்யும் வஞ்சகமும் இல்லாமல் வாழச் சொல்கிறது இறை நம்பிக்கை. பொய்யும் வஞ்சகமும் இல்லாமல் தேடச் சொல்கிறது அறிவியல். இறை நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறல்ல. இரண்டறக் கலந்தவை.

(ரவிக்குமார், இப்போது வாசகர், திருநெல்வேலி, டிசம்பர்12, 2020)

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற சொற்றொடரின் பொருள் என்ன?

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது அரபு மொழிச் சொற்றொடர். இதற்குத் தமிழில் “உங்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்” என்று அர்த்தம். சமாதானம் என்பதே உணவாக இருக்கிறது. சமாதானம் என்பதே ஆரோக்கியமாக இருக்கிறது. சமாதானம் என்பதே செல்வமாக இருக்கிறது. “உங்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்” என்றால் உங்களுக்கு உணவும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கட்டும் என்று பொருளாகிறது. இத்தகைய ஆழ்ந்த பொருளுடன்தான் முகமது நபிகள் இதனைப் பயன்படுத்தினார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. நம்முடைய சம காலத்திலும் உணவு கிடைப்பது என்பது அமைதியான சூழலுடன் நேரடித் தொடர்பு கொண்டது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் உறுதிப்படுத்துகிறது. அமைதிச் சூழலில்தான் ஆரோக்கியம் சாத்தியமாகிறது என்பதை விஞ்ஞானம் சான்றுகளுடன் பேசுகிறது. அமைதிச் சூழலில்தான் வளம் சேர்கிறது என்பதை பொருளாதார அறிஞர்கள் திட்டவட்டமான ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கிறார்கள்.

(ரோகிணி, இப்போது வாசகர், டிசம்பர் 10, 2020)

முகப்புத்தகம், ட்விட்டரில் நீங்கள் அதிகமாக நேரம் செலவிடுவதைப் பார்க்கிறேன். இது உங்களுடைய மக்கள் தொடர்பு அலுவல்களைப் பாதிக்கிறதா?

மெய்நிகர் என்பது மெய்யாகிவிட்ட காலம் இது. எப்படிச் சொந்தங்களின் கல்யாணத்துக்குப் போய் மனசார வாழ்த்திவிட்டு, சாப்பிட்டுவிட்டு வர வேண்டுமோ, அதேபோல முகப்புத்தகத்தில் நட்புகளும் உறவுகளும் எழுதுவதைப் படித்துக் கருத்து சொல்ல வேண்டும். நட்புகளும் சொந்தங்களும் பதிவிடும் படங்களை விரும்ப வேண்டும். இன்றைக்கு இது அத்தியாவசியமான தினசரி செயல்பாடு. எனது தங்கை 2014இல் எனக்குப் பரிசளித்த மடிக் கணினிதான் எனது கைப்பேசி ஊடகத்துக்கான (http://ippodhu.com/) வலிமையான அடித்தளத்தை உருவாக்கித் தந்தது. கொள்ளைநோய்க் காலமான கடந்த 11 மாதங்களில் கணினியும் இணையமும் இருந்தவர்களால் உலகோடு அதிகமாக அளவளாவ முடிந்தது. ஆதரவுகளை, உதவிகளைத் திரட்ட முடிந்தது. இதைப் புரிந்துகொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், கொள்ளைநோய்க்கான அடைப்புக் காலத்தை அறிவித்ததுமே, ஏழை மக்களுக்குக் கணினியும் இணையமும் இலவசமாக வழங்கப்படுவதற்கு ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டில் இதனைப் புரிந்துகொண்ட எளிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வீடுகளுக்கு இணைய இணைப்புகளைப் பெறுகிறார்கள். இணையத்தின் மூலமாக குழந்தைகளுக்கு அறிவின் வாசல் திறக்கப்படுவதற்குத் துணை நிற்கிறார்கள். வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி சேர்த்த பணத்தைக் கொண்டு புதிய ஸ்மார்ட்ஃபோன்களைப் பிள்ளைகளுக்கு வாங்கித் தருகிறார்கள். புதிய ஸ்மார்ட்ஃபோன் என்பது புதிய சாத்தியங்களுக்கான, புதிய வாய்ப்புகளுக்கான கதவு. இந்தக் கதவைத் திறக்கும்போது அறிவு பரவலாகும். ஆகவே, முகப்புத்தகமும் ட்விட்டரும் மக்கள் தொடர்புக்கான சாதனங்கள்தான். அதனால் மக்கள் தொடர்புகள் வளப்படும்; பலப்படும்.

(வெங்கடேசன், இப்போது வாசகர், வேலூர், டிசம்பர் 3, 2020)

ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராவாரா? அவருடைய அரசியல் பிரவேச அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

உங்கள் முதல் கேள்விக்கான பதிலைச் சொல்ல நான் கடுமையாக வேலை செய்ய வேண்டும். ஒரு பத்திரிகையாளராக 25 அல்லது 30 நாட்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றி வந்து விட்டு 2021 பிப்ரவரி மாத இறுதியில் உங்களுக்கு இதைப் பற்றிய விளக்கமான பதிலைச் சொல்லுகிறேன். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. ஜனநாயகத்தில் மக்களின் சார்பாக இணையும் ஒவ்வொரு புதிய குரலும் ஜனநாயகத்தை வலிமைப்படுத்துகிறது; செழுமைப்படுத்துகிறது. ஆக்கபூர்வமான அரசியல் செயல்பாடு மூலமாக சாமானிய மக்களுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்க வேண்டும். வெறுப்பு அரசியல் என்பது தமிழ்நாட்டில் கைகொடுக்காது. தமிழ்நாட்டு மக்கள் ஜனநாயகத்தில் பயிற்சி பெற்றவர்கள்; முதிர்ச்சி அடைந்தவர்கள். இதற்கு பல நூறு ஆண்டுகளின் வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்ற நடிகராக மக்களின் எண்ணவோட்டங்களைப் புரிந்துகொண்ட ஆளுமையாக ரஜினி இருக்கிறார். தூத்துக்குடி படுகொலைகளின் போது கவனமில்லாமல் வார்த்தைகளைச் சிதற விட்டதுபோல் அல்லாமல் சிந்தித்துப் பேசினால் அரசியலிலும் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறும் வாய்ப்பு அவருக்கு இருக்கிறது. மக்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிய ஆளுமை என்பது அவருக்குப் பலம். வெளிப்படையாகப் பேசி, உண்மையாக இருப்பது இன்னொரு பலம். ஆனால் உடல்நலம் காரணமாக மக்களுடைய தினசரி வாழ்வாதாரச் சவால்களை உணர முடியாத இடத்தில் இன்றைக்கு அவர் இருக்கிறார். ஏழு ரூபாய் இருந்தால் மூணு ஜிப்பா வாங்க முடியும் என்ற யதார்த்தத்தை மறக்காதவர். அதே சமயம், பசியின் வலியை வெறுப்பாலோ,அதிகாரத் திணிப்பாலோ சரிசெய்ய முடியாது என்பது அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

(கனிமொழி, இப்போது வாசகர், சேலம், டிசம்பர் 1, 2020)

இப்போதுவை ஐந்தாண்டுகளாக வாசித்து வருகிறேன். மய்யமான நிலைப்பாடு கொண்ட டிஜிட்டல் பத்திரிகையாகவே இதைப் பார்க்கிறேன். எனது புரிதல் சரியானதுதானா?

நீங்கள் இதனை ஐந்து வருடங்களாகப் படித்து வருவது உள்ளபடியே மகிழ்ச்சி. உங்களுக்கு மிக்க நன்றி. காங்கிரஸ்காரர் ஒருவர் இப்போதுவை ”ஆராய்ந்து” பார்த்து இடதுசாரிப் பத்திரிகை என்றார். திமுககாரர் ஒருவர் இப்போதுவைத் ”தோண்டிப்” பார்த்துவிட்டு அதிமுக பத்திரிகை என்றார். அதிமுககாரர் ஒருவர் இதைப் படித்துவிட்டு “பொதுவாக எல்லா பத்திரிகைகளைப் போலவும் செய்கிறீர்கள்” என்றார். மூத்த பத்திரிகையாளர் ஒருவர் படித்துவிட்டு “உன் லட்சணமே புரியவில்லை” என்றார். இப்போதுவை ஆரம்பித்த 2015இல் வலைப்பூ ஒன்றில் “இது அமெரிக்க ஊடகம்” என்று எழுதினார்கள். நீங்கள் இப்போது இதனை ”மய்யமான பத்திரிகை” என்று அடையாளப்படுத்துகிறீர்கள். உண்மையையும் நியாயத்தையும் பேசுவதுதான் இப்போது பத்திரிகையின் வேலை. சின்னஞ்சிறு குழுவாக இதனை ஆறாவது ஆண்டாக உங்களது அன்புடனும் ஆதரவுடனும் செய்து வருகிறோம் என்பதுதான் யதார்த்தம். தமிழ்ச் சமூகத்தில் இணைய வெளியில் உண்மையையும் நியாயத்தையும் பேசுவதற்கு இப்படியொரு களம் தேவைப்பட்டிருக்கிறது. அதனை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அன்பால் உருவாக்கி வருகிறீர்கள். இதுதான் உண்மை. வேதங்களும் விஞ்ஞானமும் வரலாறும் சந்திக்கும் உண்மை என்கிற புள்ளியில் இப்போதுவின் பணி தொடரும்.

(கவுதம், இப்போது வாசகர், ஹைதராபாத், நவம்பர் 22, 2020)

நான் ஓர் அம்பேத்கர் ரசிகன். உங்களது சில வீடியோக்களைப் பார்க்கும்போது, மகாத்மா காந்தியை நீங்கள் எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்வதாக தெரிகிறது. ஒரு பத்திரிகையாளருக்கு இது அழகல்லவே.

”நான் எப்படி ஒரு நல்ல இந்துவாக இருக்கிறேனோ, அதைப்போல ஒரு நல்ல முஸ்லிமாகவும் இருக்கிறேன். அப்படிப் பார்த்தால், என்னை ஒரு நல்ல கிறிஸ்தவராகவும் பார்சியாகவும் கருதுகிறேன்.” 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதியன்று ராய்புராவில் மகாத்மா காந்தி இப்படிப் பேசினார். மதம் என்பது எனக்கும் சாமிக்குமிடையிலான அந்தரங்கமான உறவு. அத்தனைக் கோடி இந்து மக்களும் என்னை இந்து அல்ல என்று சொன்னாலும் நான் இந்து என்பது மிகவும் தெளிவானது. இதையும் மகாத்மா காந்தியே சொன்னார். இதையெல்லாம் சொல்வதற்கு அறம் சார்ந்த தைரியம் வேண்டும். தெய்வ அனுக்கிரகம் நிச்சயம் வேண்டும். இதனை நான் உணர்கிறேன். மகாத்மா காந்தி பெண்களிடமும் தலித்துகளிடமும் இன்னமும் நீதியாக நடந்து கொண்டிருக்கலாம் என்று பெண்களும் தலித்துகளும் சொல்லும்போது ஒரு பத்திரிகையாளராக அதனை முழுமையாக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். அதை உணர்வுபூர்வமாக, முற்றிலுமாக, உண்மையாக மதிக்கிறேன்.

(ஷாஹிதா, இப்போது வாசகர், மதுரை, நவம்பர் 21, 2020)

தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தல் 2021இல் முக்கியமான பிரச்சினைகளாக எவற்றைப் பார்க்கிறீர்கள்?

சுதந்திரமும் சுயமரியாதையும்தான் மிக முக்கியமான பிரச்சினைகள். 1947இல் நாம் அடைந்த விடுதலை என்பது சுயமரியாதைக்கானது; சுயாட்சிக்கானது. அந்தச் சுயாட்சியும் சுயமரியாதையும் மிகப்பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றன. நம் நாட்டின் அரசியல் சாசனம் உறுதி செய்திருக்கின்ற அடிப்படைப் பண்புகளைப் பற்றி எந்த மரியாதையும் இல்லாமல் அவற்றைப் பந்தாடும் வகையில் ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள். பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் சுயமரியாதைக்குப் பெரும் இழுக்கு நேர்ந்திருக்கிறது. மாநிலங்களின் சுயமரியாதையும் மிகப் பெரிய அளவில் அவமதிக்கப்பட்டிருக்கிறது. வரி வசூல், செல்லா நோட்டுத் திட்டம், மத்திய நிறுவனங்களைப் பயன்படுத்திப் பழிவாங்கல் என்று எண்ணற்ற சந்தர்ப்பங்களில் மாநிலங்களின் இறையாண்மை மிதிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் பசியைப் பற்றிக் கவலைப்படாத கொடுங்கோலாட்சித் தன்மையை நாம் பார்க்க முடிந்தது. கொரோனா கொள்ளைநோய் தாக்கியபோது அடைப்புக் காலம் துவங்கியது. உலகிலேயே நமது தேசத்தில்தான், அந்த அடைப்புக் காலத்திலும் சுமார் ஏழு கோடி மக்கள் ரயில் தண்டவாளங்களிலும் சாலைகளிலும் காடு மேடுகளிலும் தங்கள் வீடுகளை நோக்கிப் பெட்டி, படுக்கைகளுடனும் பிள்ளை, குட்டிகளுடனும் நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சுயமரியாதையை, கண்ணியத்தைக் கிஞ்சித்தும் மதிக்காத ஆட்சியாளர்களை நாம் பார்த்தோம்.

(அருமைநாதன், இப்போது வாசகர், பெரம்பலூர், நவம்பர் 20,2020)

“ஓர் ஆரோக்கியம்” என்றால் என்ன?

நீங்கள் நலமாக இல்லை என்றால் நான் நலமாக இல்லை. ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒருவர் நலமாக இல்லை என்றால், சென்னையில் நான் நலமாக இல்லை. சென்னையில் நான் நலமாக இல்லை என்றால், நியூயார்க்கில் நீங்கள் நலமாக இல்லை. அது மட்டுமல்ல. சீனாவின் காடுகளில் வவ்வால்களின் வாழிடங்கள் அழிக்கப்பட்டன. அந்த வவ்வால்களிலிருந்து வேறொரு விலங்கிற்குத் தாவி அவற்றிலிருந்து நமக்குப் புதிய கொரோனா வைரஸ் வந்திருக்கலாம் என்று பல விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது முழுமையாக நிரூபணமாவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. உலகில் எந்தவொரு உயிரினம் நலமாக இல்லையென்றாலும் நாம் நலமாக வாழ முடியாது. நமது பறவைகள், நமது கால்நடைகள், நமது செல்லப் பிராணிகள் ஆகியவை நலமாக இல்லையென்றால் நாம் நலமாக இல்லை. எப்படி நமது உணவுச் சங்கிலி ஒரு தொடராக, ஒன்றையொன்று பின்னிப் பிணைந்துள்ளதோ அதைப்போல நமது ஆரோக்கியமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்திருக்கிறது. இதனையே சித்தர்கள் “அண்டத்திலுள்ளதே பிண்டம்; பிண்டத்திலுள்ளதே அண்டம்” என்பார்கள். அணுவிலுள்ளதே பிரபஞ்சத்திலிருக்கிறது. பிரபஞ்சத்திலிருப்பதே அணுவிலிருக்கிறது. இதைத்தான் திருமூலர் எளிமையாக “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்றார். இதுதான் “ஓர் ஆரோக்கியம்” என்பதன் அடிப்படை.

(சந்தியா, இப்போது வாசகர், சென்னை, நவம்பர் 19, 2020)

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

அமெரிக்காவின் மத்தியதர வர்க்கத்திலிருந்து வந்த ஒருவர் அமெரிக்காவைச் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என்பதை நடத்திக் காட்டியவர் பராக் ஒபாமா. வேலை என்பது சம்பளம் மட்டுமில்லை. வேலை என்பது சுயமரியாதை. எனவே வேலைகளை உருவாக்க வேண்டுமென்று அர்ப்பணிப்பு காட்டினார். 2008இல் அவர் ஜனாதிபதியானபோது கடுமையான பொருளாதார மந்த நிலை நிலவி வந்தது. வாகன உற்பத்தி, சிறு தொழில்களுக்குப் பொருளாதார உதவியை வழங்கியதன் மூலமாக மறுபடியும் அமெரிக்கப் பொருளாதாரத்தை உலக அரங்கில் நிமிர்த்திக் காட்டினார். அமெரிக்காவில் பணவீக்கத்தைவிட மூன்று மடங்கு வேகத்தில் மருத்துவக் கட்டணங்கள் எகிறின. இதனால் மத்திய தர வர்க்க மக்களும் ஏழை, எளிய மக்களும் தங்கள் வருவாயில் பெரும்பகுதியை மருத்துவத்துக்கே செலவிட வேண்டியிருந்தது. மருத்துவச் செலவால் பலரும் கடன்பட வேண்டியிருந்தது. எனவே பெரும்பான்மையான மக்களுக்குப் பயன்படும் வகையில் மருத்துவ ஆதரவுச் சட்டத்தை ஒபாமா கொண்டு வந்தார். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அவர் இதனைச் சாதித்தார். 2004இல் அமெரிக்க செனட்டரான ஒபாமா, 2008இல் ஜனாதிபதியாவார் என்று அவரது மனைவி மிஷெல் நினைக்கவில்லை. முடியும், நடக்கும் என்று நம்பியதால் 2008இல் அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியானார். 2020இல் ஜோ பைடன் ஜனாதிபதியாக வேண்டுமென்று வீதி, வீதியாக பிரச்சாரம் செய்தார். முன்னறிவிப்பில்லாமலேயே ஜார்ஜியா மாநிலத்தில் அவர் செய்த இறுதிகட்ட பிரச்சாரம், மக்களைப் பெருமளவுக்கு ஜோ பைடனின் பக்கம் அணிதிரட்டியது.

(திருப்பாற்கடல் நம்பி, இப்போது வாசகர், திருச்சி, நவம்பர் 18, 2020)

பரிபூரண சரணாகதி தத்துவத்தை விளக்குங்கள்.

நம்மாழ்வார் நந்தவனத்தில் பூப்பறிப்பதற்குச் சக்தியைத் தருகிறவனும் இறைவன்தான், நீங்கள் விமானத்தை இயக்குவதற்குச் சக்தியைத் தருகிறவனும் இறைவன்தான். எல்லாம் அவன் செயல் என்று முழுமையாக விசுவாசம் கொண்டு, எல்லா பிரதிபலன்களையும் ஆண்டவனிடமே ஒட்டுமொத்தமாக ஒப்படைத்து விடுவதுதான் பரிபூரண சரணாகதி. லட்சியம் ஒன்றில் மனது வைத்து அதற்கான ஆற்றலை இறைவனிடம் இரந்து பெற்று செயலாற்றிவிடவேண்டும். அதன் முடிவை இறைவனிடம் முழுமையாக விட்டுவிட வேண்டும். விசனப்படக் கூடாது. நம்பிக்கைக் கொண்டு நல்லது செய்ய வேண்டும். வெற்றியையும் மரியாதையையும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் வெகுமதியையும் தரக்கூடிய வல்லமை அவனுக்கு மட்டுமே இருக்கிறது என்று முழுமையாக அடிபணிந்து விடுவதுதான் பரிபூரண சரணாகதி. அவன் வல்லமை தராமல் நாம் செயல்படவில்லை. ஒவ்வொரு சொல்லும் அவன் கொடுக்கும் சக்தியைக் கொண்டே வெளிப்படுகிறது. அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. சுடாதே என்று அவன் ஆணையிட்டால் தீயும் சுடாது; குணமாக்கு என்று அவன் கட்டளையிட்டால்தான் மருந்தும் குணமாக்கும். இதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவனது திருவடிகளை நாடியிருப்பதே முழுமையான சரணாகதி. இது சதா சர்வகாலத்துக்கும் அவசியமான மனநிலை. முக்திக்கும் மோட்சத்துக்குமான, நல்வாழ்வுக்கான சிந்தனை முறை இது. இதைத்தான் “எல்லாப் புகழும் இறைவனுக்கே”, “சாமி சரணம்”,“ஜெயமுண்டு, பயமில்லை” என்று பல வகைகளில் சொற்களாக வெளிப்படுத்துகிறோம்.

(அம்சவள்ளி, இப்போது வாசகர், தஞ்சாவூர், நவம்பர் 17,2020)

கொரோனா வைரஸ் கொள்ளைநோயைப் பற்றி நமக்குத் தெரிய வந்துள்ள புதிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்தக் கொள்ளைநோய் பத்து மாதங்களுக்கு முன்னரே வந்தாலும் எட்டு மாதங்களான பிறகுதான் நோயின் தன்மையே உலகிற்குத் தெரிய வந்தது. அந்த அறிவின் அடிப்படையில் நாம் நான்கு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.1.நேரம் 2.தூரம் 3.இடம் 4.செயல்பாடு. உடலில் இந்த வைரஸ் வந்துவிட்டால் நமது மூச்சிலிருந்து நொடிக்கு 20 நுண் துகள்கள் வெளியேறும். பேச்சிலிருந்து நொடிக்கு 200 நுண் துகள்கள் வெளியாகும். தும்மினாலோ, இருமினாலோ நொடிக்கு 20 கோடி நுண் துகள்கள் வெளியாகும். பேச்சிலும் மூச்சிலும் மனிதர்களிடமிருந்து பிற மனிதர்களுக்குப் பரவும் ஒரு கொள்ளைநோயை இதுவரை மனித குலம் கண்டதில்லை. இது புரிவதற்கும் எளிதானதாக இல்லை. இதனால்தான் பொது இடங்களில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர், முடிந்தால் இரண்டு மீட்டர் தூரத்தைப் பேண வேண்டும். பொது இடத்தில், அதிக கூட்டமுள்ள சூழலில் செலவிடும் நேரம் பற்றிக் கவனமாக இருங்கள். ஆயிரம் வைரஸ் நுண் துகள்கள் நமக்குள் வந்தால் நோய்வாய்ப்பட்டு விடுவோம். கட்டடங்களின் உள்புறங்களில், தொடர் குளிர்பதன வசதி செய்யப்பட்ட இடங்களில் இந்த வைரஸ் நுண் துகள்கள் பல மணி நேரங்களாக காற்றின் ஈரப்பதத்தில் நிலைத்து நிற்கலாம். ஆகவே, அதிக நேரங்களைப் பொதுக் கட்டடங்களில் செலவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் (இடம்). நோய் அறிகுறியே இல்லாத ஒருவர் உடலில் வைரஸ் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் பாட்டு வாத்தியார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தினமும் இரண்டு மணி நேரம் பாட்டு வகுப்பு என்றால் அந்த வைரஸ் எளிதாக உங்களைத் தொற்றும் (செயல்பாடு). கொரோனா கொள்ளைநோயால் சம்பவிக்கும் மரணங்கள் வேதனை மிக்கவையாக இருக்கின்றன. பலருக்கும் நுரையீரலில் நீர் பெருத்து இரண்டு மடங்கு வீங்கிப்போய், என்னதான் முயன்றாலும் ஆக்சிஜனை உள்ளே அனுமதிக்காத நிலையில் மரணம் நிகழ்கிறது. நம் உடலுக்குள் நுழையும் வைரஸ், நமது நீர்ச் சமநிலையையும் ரத்த அழுத்தத்தையும் பேணும் ப்ராடிகைனின் வேதிப்பொருள் உற்பத்தியைப் பெருக்கிச் சமநிலையைச் சீர்குலைக்கிறது. ரத்த நாளங்களில் ஓட்டையை உண்டாக்குகிறது. மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றைப் பாதிக்கிறது. வைட்டமின் டி உட்கொள்ளலும் டெக்ஸாமெத்தசோன் மருந்தும் இந்த நிலைமையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது.

(டார்வின், இப்போது வாசகர், நாகர்கோவில், நவம்பர் 16,2020)

மூக்குத்தி அம்மன் படம் எப்படி இருக்கிறது?

நயன்தாரா-ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு வெளிவந்துள்ள “மூக்குத்தி அம்மன்” படம் தமிழ்நாட்டின் கலை, இலக்கிய மரபுக்கு உண்மையாக இருக்கிறது. சாமியின் பெயரால் செய்யப்படும் வன ஆக்கிரமிப்புகளை எள்ளி நகையாடுகிறது. சாமி மறுப்பு என்கிற பெயரில் செய்யப்படும் சில வறட்டுத்தனங்களையும் கிண்டல் செய்கிறது. ஊர்வசி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரின் காமெடி, படத்தைத் தொய்வின்றி கடைசி வரைக்கும் கொண்டு செல்கிறது. மக்களே சாமியிடம் நேரடியாகப் பேச முடியும் என்ற உண்மையைச் செய்தியாக கொண்ட படம். பகவத் கீதையும் பைபிளும் திருக்குர் ஆனும் மதங்களின் ஒற்றுமையைப் பேசும்போது சாமியார்கள் மக்களைப் பிரிப்பது ஏன் என்கிற கேள்வியை உரத்துக் கேட்கிறது இந்தப் படம். சாமியார்கள் தங்களுக்கென்று பக்தர்கள் கூட்டம் ஒன்றைத் தக்க வைத்துக்கொண்டு வியாபாரம் நடத்துகிறார்கள் என்கிறது படம். சில கோயில்களும் மக்களை ஈர்ப்பதற்காக தந்திரங்களை மேற்கொள்கின்றன என்பது கதை. கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் தங்கை கிறிஸ்தவத்தைத் தழுவி விடுவாளோ என்று அண்ணனிடம் ஒரு பதற்றம் இருக்கிறது. ஏங்கல்ஸ் ராமசாமி என்று மகனுக்குப் பெயர் வைத்த அப்பா குடும்பத்தை விட்டு விட்டு வனத்தை ஆக்கிரமிக்கும் சாமியாரிடம் பக்தராக சென்று விடுகிறார். சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்கும் ஏங்கல்ஸ் பக்திப் பழமாக வளர்கிறார். குலச்சாமி மூக்குத்தி அம்மனைக் கண்டடைகிறார்.”சூரரைப் போற்று” போலவே தமிழ்நாட்டுக்குக் கிடைத்த இன்னொரு தீபாவளிப் பரிசு “மூக்குத்திஅம்மன்.”

(பரமசிவம், இப்போது வாசகர், நாமக்கல், நவம்பர் 15, 2020)

பத்திரிகை நிறுவனங்களின் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் இருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்து வருகிறதே.

மனிதர்களின் ரத்தத்தில் சுதந்திரம் ஒன்று கலந்திருக்கிறது. அதைப் பிரித்தெடுக்க முடியாது. அந்தச் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பெரும் கடமையைச் செய்கிறவர்களில் பத்திரிகையாளர்களும் இடம்பெறுகிறார்கள். உண்மையும் நியாயமும்தான் எப்போதும் பத்திரிகையாளர்களை வழிநடத்த வேண்டும். மக்களின் அன்பும் நம்பகத்தன்மையும்தான் இந்தத் தொழிலின் அடிப்படைச் சொத்து. சில சமயங்களில் சில பத்திரிகை நிறுவனங்களும் சில பத்திரிகையாளர்களும் இந்த அடிப்படைகளை மறந்துவிடும்போது உங்களுக்கு அவநம்பிக்கை உண்டாகிறது. இந்த நம்பிக்கையை மீட்பதற்கு பத்திரிகைத் தொழிலில் உண்மைக்காக, நியாயத்துக்காக நின்று பசியில் கஷ்டப்படுகிறவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். 2012-13இல் இந்தியா முழுவதும் உண்மைக்காக, நியாயத்துக்காக பேசி வந்த 1000க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை வெளிப்புற நிர்பந்தம் (பொய்யின் அழுத்தம்) காரணமாக பத்திரிகை நிறுவனங்கள் வெளியில் அனுப்பின. சோத்துக்கே கஷ்டப்பட்ட அவர்களுக்கு மக்கள்தான் துணை நின்றார்கள். தெய்வமும் துணை நின்றது. உண்மையை, நியாயத்தை நிலைநாட்டுவது நம் எல்லோருக்கும் கடமை. அதற்காக முன்னால் நிற்பவர்களை ஆதரிப்பதன் மூலமாக வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் நன்மை செய்கிறோம். மக்களின் நம்பிக்கையைத் தொலைத்தவர்கள் அதனை மீண்டும் பெறுவதற்கு பெரும்பாடு, அரும்பாடு பட வேண்டும்.

(ராகவாச்சாரி, இப்போது வாசகர், சென்னை, நவம்பர் 14, 2020)

கொரோனா வைரஸ் கொள்ளைநோய் பற்றி உங்கள் கருத்து என்ன?

கொடுங்கோலாட்சிகளும் பேராசையும் வன்முறையும் பெருகியபோதெல்லாம் மானுடத்தை மீட்டெடுக்கவும் நிலைநிறுத்தவும் கொள்ளை நோய்கள் வந்தன. இதற்கு வேதங்கள், வரலாறு, விஞ்ஞானம் ஆகியவை சாட்சியாக இருக்கின்றன. நீ ஆரோக்கியமாக இல்லையென்றால், நான் ஆரோக்கியமாக இல்லை. நீ பத்திரமாக இல்லையென்றால் நான் பத்திரமாகஇல்லை. நீ சுதந்திரமாக இல்லையென்றால் நான் சுதந்திரமாக இல்லை. இதுதான் உலக மக்களுக்குக் கொள்ளைநோய் தருகிற செய்தி. எல்லோரும் சொந்தங்கள். நமது உறவு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கிறது. தங்களுடைய சக மக்கள் துன்புறுத்தப்படும்போது மகிழ்வது நிலைக்காது என்பதைச் சொல்ல வருகிறவைதான் கொள்ளை நோய்கள். மோசஸ் என்கிற மூஸாவின் காலத்தில் எகிப்து நாட்டில் ஏராளம் மக்கள் தங்களது சக மனிதர்கள் துன்பத்துக்கு ஆளானபோது மகிழ்ந்தார்கள். அப்போது பத்து கொள்ளை நோய்கள் வந்தன. இதனைப் பழைய ஏற்பாடு விளக்குகிறது. இதனை இந்தக் காலத்துக்குப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மானுட குலம் வேகமாகப் பாய்ச்சல் எடுத்து முன்னேறியது. மானுட குலத்தின் ஆத்மப் பரிசோதனைக்கான வேகக் குறைச்சல் கடந்த பத்து மாதங்களில் நடந்திருக்கிறது.

(விஜய், இப்போது வாசகர், திருச்சி, நவம்பர் 13, 2020)

”சூரரைப் போற்று” படம் எப்படி?

”நம்பிக்கைக் கொள்; நல்லது செய்; ஆண்டவன் உடனிருப்பான்” என்பதுதான் தொழில்முனைவுப் பயணம். சமூகத்தில் முக்கியமானதொரு வேலைக்கு நீ கருவியாவதுதான் இந்த அர்ப்பணிப்பு மிக்க பயணம். ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் மூலமாக ஏழை, எளிய மக்களும் விமானங்களில் பறக்க முடியும் என்பதை நிறுவிக் காட்டியவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத். இந்திய விமானங்களில் சமூக ஏற்றத்தாழ்வுகளை உடைத்துக் காட்டியவர் கோபிநாத். ரயில்களில் பயணம் செய்தவர்களை விமானத்தில் ஏற்றியவர். விமானங்களில் பணத்தடையையும் சாதித் தடையையும் உடைப்பது சாதாரண காரியமல்ல. இவரது உண்மைக் கதையை அழகாகப் படம் பிடித்திருக்கிறார் சுதா கொங்கரா. கோபிநாத்தின் பாத்திரத்தில் சிறப்பாகப் பொருந்தி வந்துள்ளார் சூர்யா. புதிய எண்ணம் எதுவும் செயல்பாட்டுக்கு வருவதற்கு எக்கச்சக்கமான மனத்தடைகளைக் கடக்க வேண்டும். இந்த மனத்தடைகளைக் கடப்பதற்கு தொழில்முனைவோர் தயாராவது மட்டும் போதாது. சமூகத்தையும் தயார் செய்ய வேண்டும். இந்தப் பயணத்தைச் சித்தரிக்கிறது “சூரரைப் போற்று.”

(சரவணன், இப்போது வாசகர், மதுரை, நவம்பர் 12, 2020)

அமெரிக்க மக்கள் ஆட்சி மாற்றத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடக்குமா?

சரவணன், நீங்கள் மிகச்சரியாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்க மக்கள் தயாரானபோது அங்கு மாற்றம் நடந்திருக்கிறது. கொரோனா கொள்ளைநோயை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லேசாகக் கருதியதும் அவருடைய பிளவுவாத அரசியலால் கறுப்பின மக்கள் தாக்குதலுக்கு ஆளானதும் இந்த மாற்றத்தை விரைவுபடுத்தின. மே 25, 2020 அன்று மின்னியாபோலிஸ் பெருநகரத்தில் டெரக் சோவின் என்கிற வெள்ளையின போலீஸ் அதிகாரியால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின மனிதர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஆட்சி மாற்றத்துக்கான மக்கள் இயக்கத்தை உருவாக்கியது. நியாயத்தின் பக்கமும் உண்மையின் பக்கமும் மக்கள் திரும்ப வேண்டும் என்கிற அறைகூவல் கிறிஸ்தவ மதத் தலங்களிலிருந்தும் பெருமளவுக்கு மக்களைச் சென்றடைந்தது. இதனால்தான் பைபிளோடு போஸ் கொடுத்த டிரம்ப் மீது நம்பகத்தன்மை ஏற்படவில்லை. ஆழ்ந்த மத நம்பிக்கைக் கொண்ட கத்தோலிக்கரான ஜோ பைடனும் தேவாலயத்துக்குச் செல்லும் கமலா ஹேரிஸும் மக்கள் மனதில் இன்னமும் நம்பிக்கைக்குரியவர்களாக தெரிந்தார்கள். ஆட்சி மாற்றம் சாத்தியமானது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் இரண்டு முறை பிரதமர் பதவி வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். மோடியின் பிளவுவாத அரசியலுக்குப் பிளவுவாத அரசியல் செய்யும் அசதுத்தீன் உவைஸி போன்ற முஸ்லிம் அரசியல் ஆளுமைகள் உறுதுணையாக நின்றார்கள் என்பது உண்மை. அனைத்துயிரும் ஒன்றுதான் என்கிற இந்து மதம், சீக்கிய மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றின் நெறிகளுக்கு மாறாக “நீ வேறு, நான் வேறு” என்கிற பிளவுவாத அரசியல் ஏழை, எளிய மக்களின் சுயமரியாதைக்குப் பெரும் இழுக்கை உண்டாக்கியுள்ளது. மக்களை ஒன்றுபடுத்தும் அரசியலை உறுதியாக செய்கிற மாற்றுகளை மக்களே உருவாக்கும்போது நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். மக்களாகிய நாமே இதற்கு முழுமையான பொறுப்பாளிகள்.

(ஃபாத்திமா, இப்போது வாசகர், திருநெல்வேலி, நவம்பர் 11, 2020)

பீகார் தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்ப்பது?

பீகார் மக்களின் அன்பைப் பெற்று மூன்று முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் மக்களிடம் “இதுதான் எனக்குக் கடைசித் தேர்தல். வாய்ப்பு தாருங்கள்” என்று உருக்கமாக கேட்டார். மக்கள் அவரை நான்காவது முறையாக முதலமைச்சராக்கியிருக்கிறார்கள். நிதிஷ் குமாருடன் கூட்டணி வைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் களப் பணிகளில் மிகுந்த உற்சாகத்தைக் காட்டியது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரான 31 வயதான தேஜஸ்வி யாதவும் கடும் பணி செய்தார். அவரையும் மக்கள் வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம் செய்துள்ளார்கள். இருவருமே மக்கள் பணி செய்வதற்குத் தகுதியானவர்கள் என்பதுதான் மக்கள் தீர்ப்பு. கொரோனா கொள்ளை நோயாலும் பெருவெள்ளத்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற பீகார் மக்களுக்காக நிதிஷ் குமாரும் தேஜஸ்வி யாதவும் கரம் கோர்த்து வேலை செய்ய வேண்டும். ஐந்தாண்டுகளாக பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் மக்கள் பணி செய்து வருகிற அஸத்துத்தீன் உவைஸியின் ஆல் இந்தியா மஜ்லிஸே இத்திஹாத்துல் முஸ்லிமீன் கட்சிக்கு ஐந்து எம்.எல்.ஏக்கள் கிடைத்துள்ளார்கள். சமூகரீதியாக, பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு அவர்கள் பணியாற்றுவார்கள் என்று உவைஸி பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here