அந்த மண்டபம் மிக எளிமையானதாக இருந்தது; மாலை நேர திருமண வரவேற்பு நிகழ்ச்சி அது. வண்ண வண்ண உடைகளும் அழகிய சிரிப்புகளும் அங்கு மகிழ்ச்சியைப் பரப்பிக் கொண்டிருந்தன. சுபாவும் நானும் உள் நுழைந்தபோது அந்தச் சின்னப் பெண் எங்களை நோக்கி வந்தாள். பேரன்போடு புன்னகைத்த அவளிடம் “இதுதான் பீர்” என்றாள் சுபா; “இது அஞ்சு; ஷோபாவின் மகள்” என்று என்னிடம் சொன்னாள். கைகுலுக்கி “பீர் அத்திம்பிர்” என்று சொன்ன அஞ்சு அந்தக் கணத்தை மேலும் ரம்மியமாக்கினாள். எங்கள் திருமணத்துக்குப் பின்னர் நாங்கள் சென்ற முதல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று ஞாபகம். அஞ்சுவின் ஒரு சொல் திடீரென்று புதிய சொந்தங்களை உருவாக்கி விட்டிருந்தது. நான் மாணவர்களிடம் பேசும்போது சொல்லுவேன்: “மொழி என்பது நம்பிக்கை; சமூகம் என்பது பாதுகாப்பு.” அதனை அந்தக் கணத்தில் இன்னமும் தீவிரமாக உணர்ந்தேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

எனது அலுவலகக் கட்டடத்தின் முதலாளியம்மா அண்மையில் மெக்காவுக்கு 42 நாட்கள் புனிதப் பயணம் சென்று வந்தார். ஜம் ஜம் ஊற்றுத் தண்ணீரையும் மெக்கா பேரீச்சம்பழங்களையும் பிரசாதமாக பெற்று வந்து எனக்குத் தந்தார். அதனை வீட்டுக்குக் கொண்டு சென்றேன். சுபா கொஞ்சம் ஜம் ஜம் தண்ணீரை அருந்தியபோது சுபாவின் அம்மா கேட்டார்: “என்ன அது?”. “அம்மா, இது மெக்கா தீர்த்தம்; பீரோட ஆஃபீஸ் ஓனரம்மா மெக்கா போய்ட்டு வந்தாங்களாம். கொடுத்து அனுப்பிருக்காங்க” என்றாள். அம்மா முக மலர்ச்சியோடு சிரித்தார். இது அன்பின் இன்னொரு கணம்.

1 COMMENT

  1. இனிமையான உண்மை.இவ்வுலகம் வாழ்வதற்கு மிக மகிழ்ச்சியான தருணங்களை நாம் தான் உருவாக்க வேண்டும். வாழ்த்துகள். அமல்

Comments are closed.