பீச்சாங்கை – விமர்சனம்

0
368

வெள்ளிக்கிழமைக்குப் பதில் வித்தியாசமாக வியாழக்கிழைமை பீச்சாங்கை படம் ரிலீஸ். தயாரித்தவர் அல்லது வெளியிட்டவர் சாய்பாபா பக்தராக இருக்க வேண்டும். சென்னை ஆல்பட் திரையரங்கத்துக்கு காலையில் சென்றால் பீச்சாங்கை ஓடுவதற்கான அடையாளமில்லை. ஆல்பட், பேபி ஆல்பட் இரண்டிலும் வேறு படங்கள். தி மம்மி, சத்ரியன். மதியமாகச் சென்ற போது பேபி ஆல்பட்டின் 3 மணி காட்சி சத்ரியனை அடித்துவிட்டு பீச்சாங்கை என்று எழுதியிருந்தார்கள். படத்துக்கு நல்ல கூட்டம்.

ஏலியன் ஹேன்ட் சின்ட்ரோம் என்ற வியாதியை மையப்படுத்தி ஒரு வித்தியாசமான ட்ரீட்மெண்டை தந்திருக்கிறார் இயக்குனர். முதல் இருபது நிமிடங்கள், எடுத்துப் பழகுறாங்களோ ரேஞ்சில் படம் இருந்தாலும் போகப் போக ஏலியன் ஹேன்ட் சின்ட்ரோம் நம்மையும் தன்னிச்சையாக சிரிக்க வைக்கிறது.

அது என்ன ஏலியன் ஹேன்ட் சின்ட்ரோம்? கோடிகளில் ஒருத்தருக்கு அவரது மூளை சொல்வதை கை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படும். ஆள் கெட்டவன். அவன் கெட்டதை நினைக்க அவனது கை மட்டும் நல்லது செய்தால்? கேட்கும் போதே சுவாரஸியமாயிருக்கிறதில்லையா? அதுதான் மொத்த படமே.

எஸ்.முத்து (S.Muthu) என்கிற ஸ்மூத் (sumuthu) இடதுகையால் ஸ்மூத்தாக பிக்பாக்கெட் அடிப்பதில் ஹீரோ. கெட்டவன் என்றாலும் ஹீரோன்னா நல்லது செய்யணுமே. செய்கிறார். திருமணத்துக்கு வைத்திருந்த மூன்று லட்ச ரூபாயை பார்ட்னர் ஆட்டையைப் போட, சம்பந்தப்பட்டவர்களிடம் ஸ்மூத் பணத்தை ஒப்படைக்கிறான். அந்த கணமே திருமண பெண்ணுக்கும் ஸ்மூத்துக்கும் காதலாகிறது. இந்த நேரத்தில் ஒரு விபத்தில் ஸ்மூத்தின் தொழில் முதலீடான பீச்சாங்கை சொன்ன பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட, அதை பழையபடி மாற்ற சிகிச்சைக்கு மூன்று லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஆபாசப்பட ப்ரியரான ஒரு அரசியல்வாதியின் செல்போனை திருடித்தந்தால் மூன்று லட்ச ரூபாய் என்று பேரம் பேசுகிறது கிட்நாப் கும்பல் ஒன்று. அதன் பிறகு நடக்கும் கேட் அண்ட் மௌஸ் துரத்தலில் கிச்சுகிச்சு மூட்டப்பட்டது போல் சிரிக்கிறது திரையரங்கு.

கலைந்த தலைமுடி, தாடி, குழைவான உடல்மொழி என்று ஒரு ஜாலி பிக்பாக்கெட்காரனை கண்முன் நிறுத்துகிறார் அறிமுக நடிகர் கார்த்திக். திருடிய பணத்தை ஒப்படைக்கப் போகிற இடத்தில் நாயகியை பார்த்த கணமே பற்றிக் கொள்கிறது காதல். ஆனால் நாயகி அஞ்சலி ராவ்தான் பாவம் ஊறுகாய் அளவுக்கும் வொர்த் இல்லாத கதாபாத்திரம்.

அந்த கிட்நாப் குரூப்தான் படத்தின் டாப். போட்டுத் தள்ளிடுவேன் என்று மிரட்டும் சொட்டைத்தலை கேங் லீடர் கஜா. வெளியில் கெத்து காட்டினாலும் வீட்டில் மனைவியுடம் மொத்து வாங்குகிற பரிதாபத்துக்குரிய வில்லன். சதா ப்ரோ என்று மென்று கொண்டே இம்சை தரும் கஜாவின் அப்ரண்டிஸ் மச்சான். நொடிக்கு இரண்டுமுறை அக்குளில் பான்ட்ஸ் போடும் குண்டன் மாரி. இவர்களுக்கு இதுதான் முதல் படம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.

எம்.எஸ்.பாஸ்கரும் இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர். அவரது கட்சிக்காரர்கள் இரண்டு பேருக்கு பதவிச் சண்டை. அதில் ஒருவருக்கு தனது லீலைகளேயே வீடியோ எடுத்து ரசிக்கும் வித்தியாசமான ஹாபி. கழிவறையில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து மயங்கிக்கிடக்கும் காட்சி சிரிப்பு விருந்து. கிட்நாப் குரூப்பையும், அரசியல்வாதி கும்பலையும் பீச்சாங்கை சமாளிக்கும்விதத்தை சிரிக்கச் சிரிக்க எடுக்க முயன்றிருக்கிறார்கள்.

ஒருவன் தப்பு செய்யணும்னு நினைக்கிறான். அவனது ஒரு கை மட்டும் நல்லது செய்ய நினைக்குது. இந்த முரணை தத்துவார்த்தமாகவும் கொண்டு போகலாம். நகைச்சுவையாகவும் சொல்லிப் போகலாம். இதில் இரண்டாவதை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். அபத்தக் காட்சிகளும், பிளாக் க்யூமரும் சில இடங்களில் வொர்க் அவுட்டாகி சிரிக்க வைக்கின்றன. எந்தக் காட்சியையும் தீவிரமாக அணுகாததால் சீரியசாக எதுவும் படத்தில் நடக்கப் போவதில்லை என்று பார்க்கிற நாம் ரிலாக்சாவதால் உணர்வுபூர்வமான எதையும் நமக்குள் கடத்த படம் தவறிவிடுகிறது.

பாடல்களும் இசையும் கான்செப்டிலிருந்து விலகாமலிருப்பதே பெரும் ஆறுதல். இன்டோர் மற்றும் இரவுக்காட்சிகளில் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.

சிரித்துவிட்டுவர உத்தரவாதமுள்ள படம்.

இதையும் படியுங்கள் : சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்; 36 பேரிடம் விசாரணை

இதையும் படியுங்கள் : மத்தியப் பிரதேசம்: போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

இதையும் படியுங்கள் : பதினெட்டாவது அட்சக்கோடு : வன்முறைகளும் மனித மாண்புகளும் விலகும் புள்ளி..

இதையும் படியுங்கள் : ஊழல் மலிந்திருப்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்