(நவம்பர் 20, 2015இல் வெளியான செய்தி)

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் வெள்ளிக்கிழமையன்று மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்; பீகார் தேர்தல் முடிவுகளால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மிகவும் உற்சாகமாகியிருக்கிறார். ஏன் தெரியுமா? மேலும் படியுங்கள்:

1.பீகாரில் மூன்றாவது முறையாக முதல்வராகியுள்ள நிதிஷ் குமார் தான் அரசியலில் ஈடுபடுவதற்கு ஊக்கம் கொடுத்த தனது தாயார் மீது பேரன்பு வைத்திருப்பவர்; பெண்களின் அரசியல் பங்கேற்புக்கு அவர் ஊக்கம் தந்ததற்கு இது முக்கியமான காரணம்; உள்ளாட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக உயர்த்தியவர் நிதிஷ்; இதனால்தான் பெண்கள் பெருமளவுக்குத் திரண்டு வந்து வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தார்கள். ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவீதம் 54.07. பெண் வாக்காளர்களின் பங்கேற்பு 59.92 சதவீதம்.

2.எல்லா அரசு வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 35 சதவீதம் இடஒதுக்கீடு தருவதாக நிதிஷ் அளித்த வாக்குறுதிக்கு பெண்களிடம் வரவேற்பு எக்கச்சக்கமாக இருந்தது.

3.பெண்கள் கல்வி கற்பதற்கு இலவச சைக்கிள் மட்டுமல்ல, இலவச சீருடை, இலவச பாடப்புத்தகங்கள், இலவச சத்துணவு வழங்குகிறது நிதிஷ் குமார் அரசு; முதுநிலைப் பட்டப்படிப்பு வரைக்கும் பெண்கள் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

4.வேலையில்லாத இளம்பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் இரண்டு வருடங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்ற நிதிஷ் குமாரின் வாக்குறுதி இளம் தலைமுறை வாக்காளர்களைப் பெருமளவுக்குக் கவர்ந்தது.

5.ஒவ்வொரு வீட்டுக்கும் தினமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதி ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களையும் ஈர்த்தது.

6.ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்கிற உறுதியும் மக்களைக் கவர்ந்தது.

7.ஒவ்வொரு தெருவையும் இணைக்க சாலை வசதி செய்து தரப்படும் என்கிற நிதிஷ் குமாரின் வாக்குறுதி பொருளாதார வளர்ச்சிக்கான முன்னுரையாகப் பார்க்கப்பட்டது.

8.வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி வந்த நிதிஷ் குமார் ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை வசதி இருக்கும் என்கிற உறுதிமொழி அளித்தபோது மக்கள் நம்பினார்கள்.

9.ஐந்து புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் என்கிற நிதிஷ் குமாரின் வாக்குறுதியும் மக்களால் நம்பப்பட்டது.

10.சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவேன் என்று உறுதியளித்து ஆனந்த் சிங் போன்ற குற்றவாளிகளை ஏற்கனவே சிறையில் அடைத்தது, நிதிஷ் குமாரின் செல்வாக்கை அதிகரித்திருந்தது.

11.நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி என்பதே நிதிஷ் குமாரின் வெற்றிக் கோஷமாக மாறியது; இதேபோன்ற கோஷம் தனக்கும் கைகொடுக்கும் என்று ஜெயலலிதா நம்புகிறார்.

12.இந்தியாவிலேயே கல்விக்காக பட்ஜெட்டில் 24 சதவீதத்தைச் செலவிடும் ஒரே மாநில அரசு, நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசுதான். உயர் கல்வியை ஏழை, எளிய மக்களுக்குக் கொண்டு சேர்க்க அவர் எடுத்த முயற்சிகள் மக்களால் வரவேற்கப்பட்டன. 55க்கும் மேற்பட்ட அரசுக் கல்லூரிகளைத் திறந்திருப்பது தனக்குக் கைகொடுக்கும் என்று ஜெயலலிதா நம்புகிறார்.

13.குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தியது நிதிஷ் குமாருக்கு மக்களிடம் பெரும் செல்வாக்கைப் பெற்றுத் தந்தது. இந்தச் செல்வாக்கை ஜெயலலிதா ஆரம்பத்தில் பெற்றிருந்தாலும் ஜாதிச் சங்கத் தலைவரும் கொலையாளியுமான யுவராஜ் கைது நடவடிக்கை தாமதமானது, “மூடு டாஸ்மாக்கை மூடு” பாடலைப் பாடிய கோவன் என்கிற எஸ்.சிவதாஸைக் கைது செய்தது ஆகியவை அவருடைய இமேஜைப் பாதித்துள்ளன.

14.சுமார் 6,000 மதுக்கடைகள் மூலம் அரசின் வருவாயைப் பெருக்கிய நிதிஷ் குமார், இந்தத் தேர்தலுக்கு முன்பு மது விற்பனையைத் தடை செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார்; பெண்களின் வாக்குகளை அள்ளினார். ஜெயலலிதாவும் தேர்தல் அறிவிப்பு வரும் முன்பு இப்படியொரு வாக்குறுதியைக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

15.தடையற்ற மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார் நிதிஷ்; மின் நிலைமையை மேம்படுத்திய சாதனையைச் சுட்டிக்காட்டி வாக்கு சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா.